நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58  /  டாக்டர் கபழனித்துரை

73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர்.

அந்தப் பள்ளியில்தான் மகாத்மா காந்தியின் அஸ்தியுடன் காந்தியே வழங்கிய காந்தி சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பள்ளி வளாகத்தில் தான் காந்தியப் பொருளாதார மேதை ஜெ.சி.குமரப்பா தனக்காக ஒரு குடில் ஒன்று அமைத்து தங்கியிருந்து பல கிராமப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கத்தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு அந்த பள்ளிக்கு வந்தார்.

அது ஒரு பள்ளிக்கூடம் மட்டுமல்ல கிராம மேம்பாட்டுக்கான சிந்தனைக்களம், பயிற்சிக்களம், அதுதான் காந்திநிகேதன் ஆஸ்ரமம். அதில் தான் அந்தப் பள்ளி இருக்கின்றது. அந்தப் பள்ளி மட்டுமல்ல அந்த நிறுவனம் என் நெஞ்சுக்கு நெருக்கமானது. பல முறை அங்கு சென்றிருக்கிறேன்.

பல முறை விழாக்களில் பங்கேற்று அரங்கங்களில் மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் அரங்கங்களிலே உரையாற்றியிருக்கின்றேன்.

அந்த ஆசிரமத்தை நிறுவிய மாமனிதர் கோ.வேங்கடாசலபதி அவர்கள் தான் தமிழகத்தின் முதல் கிராம மேம்பாட்டுக்கான கமிஷனர். அவர் ஒரு IAS அதிகாரி அல்ல, ஒரு ஆசிரியர். அவர் காந்தியின் அன்பைப் பெற்றவர், காந்தியின் ஆசியோடு அந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர்.

அவரை காமராஜர் அடையாளம் கண்டு மிக உயரிய பதவியைத் தந்து தமிழகத்தின் பஞ்சாயத்துக்களை உருவாக்கி வலுவாக்க கட்டளையிட்டிருந்தார்.

அந்த கிராம மேம்பாட்டு பணிகளுக்கு தேவையான மனித வளத்தை உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான் அந்த ஆஸ்ரமம். அதில்தான் காந்தியின் ஆதாரக் கல்விக்கும் வித்திட கல்விச்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

அதிலிருந்து வளர்ந்து வந்த பள்ளிதான் இன்று மேல்நிலை பள்ளியாக அரசு உதவி பெறும் பள்ளியாக வித்தியாசமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்திற்கும் எனக்கும் ஒரு உணர்வுப்பூர்வ தொடர்பு உண்டு. என்னுடன் 27 ஆண்டுகள் எம் துறையில் என்னுடன் தோளோடு தோள் நின்று பஞ்சாயத்துக்கள் பணி செய்திட உதவிய பேரா.ரகுபதியின் பெரியப்பா துவங்கிய நிறுவனம்தான் அது.

அந்த நிறுவனத்தில் செயலராக அவரும் பணியாற்றியிருக்கிறார். எனவே எனது தொடர்பு அந்த நிறுவனத்தில் சில உரிமைகள் சார்ந்ததுபோல. உரிமை சார்ந்தால் பொறுப்பும் அதிகமல்லவா. அந்த வகையில் அழைக்கும்போதெல்லாம் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அங்கு உரையாற்றுவேன்.

அந்த நிறுவனத்தின் இன்றைய தலைவர் மருத்துவர் பேரா.வெங்கடசாமி அவர்கள் தலைசிறந்த பிளாஸ்டிக் சர்சன் ஆவார்கள். உலகளாவிய அளவில் அறியப்பட்டவர்.

அவரின் அளப்பரிய சாதனையில் ஒன்று சென்னையில் உலகத் தரத்தில் பொது மருத்துவமனையில் தொழில்சாலைகளில் பணியின்போது கைகால் துண்டாடப்பட்டு வருவோருக்கு அவையங்கள் பொருத்துவதற்கு உருவாக்கப்பட்ட சிறப்புப்பகுதி தான் அவரின் தலைசிறந்த சாதனையாக பேசப்படுகிறது.

அவருடன் சக பொறுப்பில் இருக்கக்கூடியவர்களும் நன்னெறி பிடித்து ஒழுகக் கூடியவர்களாக இருக்கின்ற காரணத்தால் அவர்களுடன் அங்கு எந்த நிகழ்வில் கலந்து கொள்வதும் இனிமையானதே.

பொதுவாக ஆசிரமத்தின் தலைவர் ஒவ்வொரு முறையும் என்னுடன் பேசும்போது அடுத்த முறை நான் என்ன பேச வேண்டும் என்பதனை தெளிவாக விளக்கிவிடுவார்.

அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் குடியரசைப் பற்றிய ஒரு உரையாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் அன்று அங்கு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும், காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினேன். அதனைத்தான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகிறேன்.

காந்தி இந்தியாவுக்கு புராண சுயராஜ்யம் வேண்டும் எனக் கூறினார். நாடு விடுதலை அடைதலிலிருந்து இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சுதந்திரம் பெறவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தியாவுக்குத் தேவை பூர்ண சுயராஜ்ஜியம் என்றார்.

முற்றிலுமாக அது சுய ஆட்சியாக அமைய வேண்டும். அடுத்து மிக முக்கியமாக இந்தியா கிராமங்களில்தான் வாழ்கின்றது. அதன் ஆன்மா என்பது 6 லட்சம் கிராமங்களில் இருக்கின்றது.

எனவே இந்திய நாட்டின் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் சுயமரியாதையை மீட்டெடுத்துத் தருவது முக்கியமான பணி என்றார்.

இந்தியாவின் மேன்மை என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் மேன்மையையும் உள்ளடக்கியதாகும்.

எனவே இந்தியா என்பது மக்கள் சார்ந்து செயல்படும் குடியரசாக விளங்க வேண்டும் எனக் கனவு கண்டார். சுயராஜ்யம் என்பதற்குக்கூட அவர் கொண்ட பொருள் முற்றிலும் வித்தியாசமானது.

அரசு தவறு இழைக்கும்போது குடிமக்கள் அதை எதிர்த்துப் போராடுவது தான் சுயராஜ்யம் என விளக்கினார். எனவே நம் நாடு குடியரசாக விளங்க அதற்கான குடிமக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

குடிமக்கள் என்பவர் யார் என்பது அடுத்த கேள்வி. சட்டம் கூறுகின்ற விளக்கத்தை அவர் கூறவில்லை. குடிமக்கள் தங்களை நெறிப்படுத்திக் கொண்டவர்கள், தங்களை ஒழுக்கப்படுத்திக் கொண்டவர்கள், தங்களை கட்டுப்படுத்திக் கொண்டவர்கள், தங்கள் செயல்பாடுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.

அப்படி குடிமக்கள் தயார் செய்யப்படல் வேண்டும். அதற்கான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்படித் தயாராகி விட்டால், அந்த நாடு சிறப்புப் பெற்றுவிடும்.

குடிமக்கள் சமூகமாகக் கூடி வாழ்பவர்கள். அந்த சமூக வாழ்வை உயர்ந்த வாழ்க்கை விழுமியங்களுடன் வாழ்பவர்கள் தனிமனித வாழ்வு என்பது சமூகத்திற்கானது என்ற உணர்வுடன் வாழ்வார்கள். அந்த சமூகத்தில் கல்வி என்பது சமூக உயர்வுக்கானது, மேம்பாட்டுக்கானது.

குடிமக்கள் நிறைய பொறுப்புக்களுடன் செயல்படுவார்கள். அரசு என்ற அமைப்பு சிறியதாக இயங்கும் ஒன்றாக இருக்கும். அதற்கு நாட்டைக் காப்பது பெரும் பணியாகவும் பொறுப்பாகவும் இருக்கும், சமூகம் என்பதை நெறிப்படுத்த ஒழுங்குபடுத்த அரசுக்கு வேலை இல்லை.

இன்று சட்டம் ஒழுங்கை அரசாங்கம் செய்ய வேண்டியுள்ளது. அந்தச் சூழல் குடியரசில் பொறுப்புமிக்க குடிமக்கள் செயல்பாடு நடைபெறும்போது உருவாகாது. குடிமக்கள் சிந்தனைகளின் வெளிப்பாடாகவே அரசாங்கங்கள் இயங்கிடும்.

எல்லா சமூக, பொருளாதார அரசியல் மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் குடிமக்களின் பங்களிப்பு என்பது மிக இன்றியமையாதது. பொதுமக்களின் செயல்பாடுகள் அறிவார்ந்த செயல்பாடுகளாக இருக்கும்.

அரசாங்கம் பொதுமக்களை நெறிப்படுத்தும் நிலையில் மக்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.

அரசாங்கம் மக்களை மதிக்கும் அளவுக்கு மேம்பட்ட நிலையில் சிந்தனையில், நடத்தையில் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பொது நிகழ்வு என்றால் மக்களை ஒழுங்குபடுத்த காவல்துறை என்பது தேவைப்படாது. அவர்களே ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி செயல்படுவார்கள்.

சாலைகளில் குப்பை போடும் பழக்கம் இல்லாதவர்களாக மாறி, குப்பைத் தொட்டி எங்கு இருக்கிறதோ அங்கு குப்பையைப் போடுவார்கள்.

அதையும் பிரித்துப் பார்த்து எது மக்கும் குப்பை எது மக்காக் குப்பை என்பது அறிந்து விபரமாக செயல்படும் நிலையில் மக்கள் இயங்குவார்கள். குப்பையடிப்பது பொறுப்பற்ற செயல். குப்பை கண்ட இடத்தில் போடுவது சமூகத்தை பாழ்படுத்தும் செயல் என்ற உணர்வுடன் செயல்படுவார்கள்.

தண்ணீர் என்பதின் மகத்துவம் அறிந்து தேவையின் அடிப்படையில் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த தெரிந்திருப்பார்கள். தண்ணீர் பற்றிய முழுப் புரிதலுடன் செயல்பட்டு தண்ணீரின் மகத்துவம் அறிந்து செயல்படுவார்கள்.

மின்சக்தியை பயன்படுத்தும்போது, அதன் முக்கியத்துவம் அறிந்து தேவைக்குப் பயன்படுத்தும் நிலையில் இருப்பார்கள், பொறுப்புணர்ந்த குடிமக்கள்.

மின்சாரச் சிக்கனம் என்பது எப்பொழுதும் தேவை. அதேபோல் உணவு எடுத்துக் கொள்ளல் என்பது தான் உடலுக்கு தேவையான உணவு எது என்பதும், தங்களுக்குப் பக்கத்தில் விளையும் உணவுப் பொருள்களை முறைப்படுத்தி எளிய உணவு உண்டே தங்கள் ஆரோக்யம் உடல் நலம் பேண முடியும் என்ற புரிதல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அரசின் பள்ளிக்கூடமாக இருக்கட்டும், அங்கன்வாடியாக இருக்கட்டும், பால்வாடியாக இருக்கட்டும், சத்துணவுக் கூடமாக இருக்கட்டும், சுகாதார நிலையமாக இருக்கட்டும், அத்தனையும் மக்கள் சேவைக்காக மக்கள் பணத்தில் அரசு உருவாக்கியிருக்கின்றது.

அவைகள் அத்தனையும் மக்கள் சொத்துக்கள் அவைகளை கண்காணிக்க வேண்டியது குடிமக்களாகிய நம் பொறுப்பு. அவைகளை முறையாக செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு மக்களாகிய நமக்கு உண்டு என்று எண்ணிச் செயல்படுவார்கள்.

பொதுவினியோகக் கடைகள் மக்களுக்கு வினியோகிக்கும் பொருள்கள் தரமற்றதாக இருந்தால் அதை எதிர்த்து குரல் கொடுத்து, தரமான பொருள்களை வினியோகிக்க முயற்சிக்க வேண்டும்.

பொது வினியோகத்தில் மக்களுக்கு வழங்கும் பொருள்கள் எப்பொழுது தரமாக இருக்கும் என்றால் அந்தக் கடைகளை மக்கள் கண்காணிக்கும்போதுதான்.

மக்கள் வரிப்பணத்தில் பொருள்களை வாங்கித்தான் ஏழைகளுக்கு வினியோகம் செய்கின்றார்கள். அவைகள் ஏன் தரமற்றவையாக இருக்க வேண்டும்.

தரமற்ற பொருள்கள்தான் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகளைக் கேட்டால் மக்களுக்கு புரிதல் இருக்கிறது.

எனவே தரமான பொருள்களை மட்டும்தான் வினியோகிக்க முடியும் என்று தரமான பொருள்கள் கிடைக்கும்.

குடிமக்கள் தங்கள் இல்லங்களில் நடத்தும் விழாக்களை எப்படி நடத்துவார்கள் என்றால் மிகவும் சிக்கனமாக நடத்தி பெரும் பொருள் விரயத்தைத் தவிர்ப்பார்கள். அந்த விழாக்களில் கூட ஆடம்பரமாக உணவுகளை வழங்கிடாமல் தேவைக்கேற்ற உணவுகளை மட்டும் பரிமாறி உணவு வீணாகாமல் பார்த்துக் கொள்வார்கள்.

நம் கிராமத்தில் பட்டினியால் வாடும் குடும்பம் இருந்தால், அந்தக் குடும்பங்களின் பட்டினியைத் தீர்க்க அந்த ஊர் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். தங்கள் ஊரில் பட்டினியுடன் எவரும் படுக்கைக்குச் செல்வதில்லை என்ற நிலையில் செயல்படுவார்கள்.

குடிமக்களாக தங்கள் தேக ஆரோக்யம் பராமரிப்பது தங்களின் தேக ஆரோக்யம் பராமரிப்பது தங்களின் கடமை என தேக ஆரோக்யம் பற்றிய புரிதலுடன் ஆரோக்யமாக வளர் இளம் பெண்களை பாதுகாத்து ரத்த சோகையின்றி வளர்ப்பார்கள்.

அவர்களுக்கு திருமணம் எந்த வயதில் செய்ய வேண்டுமோ அந்த வயதில் 42 கிலோ எடையுடன் உள்ளார்களா என்று பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள்.

திருமணமான பெண்கள் கற்பமுற்றிருந்தால் கற்பகால கவனிப்பையும், பேருகால கவனிப்பையும் முறையுடன் செய்து நல்ல ஆரோக்யமான குழந்தையை பெற்று வளர்த்தெடுத்து விடுவார்கள்.

ஆரோக்யமான வளர் இளம் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும், குழந்தைகளையும் 1000 நாட்களுக்கு பாதுகாப்பாக வளர்த்தெடுப்பார்கள்.

குடிமக்களை ஒரு அறிவார்ந்த சமூகச் செயல்பாட்டிற்கு தயார் செய்யப்பட்டிருப்பார்கள். குடிமக்கள் அறிவார்ந்த செயல்பாடுகளுக்குத் தேவையான தயாரிப்புடன் இருந்தால் அவர்களின் கருத்துக்கள்தான் பிரதான கருத்துக்கள் அரசாங்க முடிவுகள் எடுப்பதற்கு.

அந்த நிலைக்கு நாம் பொதுமக்களை தயார் செய்திருக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பிரதானப் பதில்.

பூர்ண சுயராஜ்யம் நோக்கிச் செல்ல இந்தியாவை குடியாட்சி நாடாக அறிவித்த நம் தலைவர்கள் குடியாட்சி நாடாக்கத் தேவையான குடிமக்கள் தயாரிப்பைச் செய்யவில்லை என்றதுதான் நாம் கண்ட எதார்த்த உண்மை.

நாம் பயணித்த திசை என்பது குடியாட்சிக்கு நேர் எதிர் திசை. அனைத்தும் அரசாங்கம் செய்யும் என்ற மனோபாவம், மக்களை பொறுப்புள்ள குடிமக்களாக ஆக்குவதற்குப் பதில் பொறுப்பற்ற பயனாளிகளாக செயல்பட பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

இந்தச் சூழலை மாற்றி பெரும் பொறுப்புடன் குடிமக்களாக செயல்பட மக்கள் தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டதுதான் புதிய உள்ளாட்சி அரசாங்கங்கள். இந்த அரசாங்கத்தில் மிகப் பெரும் பணி என்பது மக்கள் தயாரிப்பு.

சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் மக்களை பங்கேற்க வைக்கத் தேவையான தயாரிப்பினைச் செய்ய வேண்டும். அந்தப் புரிதல் இருந்தால் மிகப்பெரும் மாற்றங்கள் சமூகத்தில் நடைபெறும். ஆனால் அதற்கான தயாரிப்பில் பஞ்சாயத்துக்கள் ஈடுபட வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

11.02.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment