ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’: தொடர் – 10
கேட்டதும் வியப்பாக இருந்த ஒரு செய்தியை சொல்ல மறந்துவிட்டேன்.
வலம்புரிஜான் இயக்கிய ‘அது அந்தக் காலம்’ திரைப்படத்திற்கு பாடல் எழுத கவியரசு வைரமுத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
வைரமுத்து வலம்புரிஜான் மேல் வைத்திருந்த அபரிமிதமான மரியாதையின் காரணமாக அந்தப் படத்தில் தனக்கென்று எந்த வித சம்பளமும் வேண்டாம் என்று அனைத்துப் பாடல்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்படும்போது வியப்பு மேலெழுந்தது.
வைரமுத்து அவர்கள் திரைப்பட உலகில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த காலம். அதிக ஊதியம் பெற்றவர் என்றும் சொல்லலாம்.
ஆனால், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களுக்கு இவ்வாறு அவர் செய்த செயல், இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.
‘தாய்’ வார இதழின் ஆசிரியராக இருந்த வலம்புரிஜான், இதழுக்கு உதவி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமே ஆச்சரியமானது.
அப்படித்தான் இப்பொழுது திரைப்பாடல் ஆசிரியராக புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் பழனிபாரதி இணைந்ததும்.
இதற்கு முன் எஸ்.டி.சோமசுந்தரம் நடத்திய பத்திரிகையிலும் ‘அடியார்’ நடத்திய பத்திரிகையிலும், பிறகு அரசு அச்சகத்திலும் பழனிபாரதி பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்.
பாரதிதாசன் வழித்தோன்றல் சாமி.பழனியப்பன் அவர்கள் தமிழரசு பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய மகன்தான் பழனிபாரதி.
ஒருமுறை சாமி பழனியப்பன் அவரது கவிதையை ‘தாய்’ இதழுக்கு அனுப்ப முடிவெடுத்து, அதை தன்னுடைய மகன் பழநிபாரதியிடம் கொடுத்து அனுப்பினார்.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் மணிமொழியிடம் தர அவர் நேரடியாக வலம்புரிஜானிடம் கொடுக்கச் சொன்னார். சரி என போனார்.
அப்பா கவிதையோடு தான் எழுதிய புதுக்கவிதையும் சேர்த்துக் கொடுத்து விட்டு வந்து விட்டார்.
ஆனால் முதலில் வெளிவந்தது சாமி பழனியப்பன் அவர்களின் கவிதை அல்ல.
பழநிபாரதியின் கவிதைகள்.
அதோடு ஆசிரியர் பகுதியில் பழனிபாரதி பற்றி புகழ்ந்து எழுதினார். அப்போது அவருக்கு சாமி பழனியப்பன் மகன் பாரதி என்று தெரியாது.
அதற்குப் பிற்பாடு ‘நெருப்புப் பார்வைகள்’ என்ற கவிதைத் தொகுப்பை பழநிபாரதி எழுதினார். அதையும் அவர் மிகச் சிறப்பாக வெளி உலகிற்கு கார்மேக மழைச் சொற்களால் தமிழுலுகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டினார்.
வலம்புரி ஜான் அவர்களுக்கு ஒரு பழக்கமுண்டு. தன்னை எழுத்துக்களால் ஒருவர் கவர்ந்து விட்டால் அவரை தோளில் ஏற்றி சுமந்து வெளி உலகுக்கு காட்டுவார். ஒருபடி மேலாகச் சென்று தலைமேல் வைத்துக் கொண்டாடினார் பழநிபாரதியை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருமுறை சோவியத் கலாசாரக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த வலம்புரிஜான் அவர்கள் பழநிபாரதி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவதைப் பார்த்து,
“இதோ வருகிறார் பழநிபாரதி அவர்கள் பார்ப்பதற்கு குள்ளமாக இருக்கிறார். இவர் திருக்குறளின் உயரம்” என்று அவரைப் புகழ்ந்து தள்ளி விட யாரப்பா அது என்று அந்த சபையே திரும்பிப் பார்த்தது.
அதன்பின்பு ஆசிரியர் அவர்கள் பழநிபாரதியை “என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று கேட்க, தரமணியில் உள்ள அரசு அச்சகத்தில் நான் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்“ என்று சொன்னதும், ஒரு கவிஞன் கணக்கு எழுதுவதா? நாளை அலுவலகத்திற்கு வா“ என்று சொல்லி அனுப்பினார்.
மறுநாள் பழநிபாரதி வலம்புரி ஜானை சந்தித்ததும், விவரங்களைக் கேட்டறிந்த பிறகு அவரை உதவி ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.
நீண்டகாலம் மதுரை ராஜாவுடன் அந்தப் பொறுப்பை செய்த பழநிபாரதியை வெளி உலகத்துக்கு சென்று பேட்டி எடுக்கச் சொல்லி அனுப்பிவைத்தார்.
பல இலக்கிய நிகழ்வுகளை, இலக்கியவாதிகளை பதிவுசெய்தார். இப்படி யாவரும் அறிய உயர்த்துவது வலம்புரிஜானின் கவிமனம்.
எழுத்துச் சுதந்திரம் என்பதை பரிபூரணமாக உணரச் செய்தவர்.
அப்படித்தான் பல சமயங்கள் பழனி பாரதி எழுதிய தின் மூலம் பிரச்சனை வந்தபோதும் அவருக்குப் பக்கபலமாக நின்று எழுதினார்.
அவருக்கு மட்டுமல்ல எனக்கும் அது போன்ற நிகழ்வுகள் இருந்தது. அதற்கும் அவர் பாதுகாப்பாக இருந்தார். அது மட்டுமல்ல ஆசிரியர் குழுவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்.
எழுத்து சுதந்திரம் எழுத்தாளனின் உரிமை. எனவே அதனால் வரும் எந்த எதிர்ப்பு, முரண்பாடு என்றாலும் அதை வெளியிட தாய் வார இதழில் அனுமதித்தாரே ஒழிய – எழுதியதை தவறு என்று ஒரு நாளும் அ வர் சொன்னதில்லை.
அதுதான் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின் எண்ணத் தெளிவு. உறுதி.
மனம்
இப்படித்தான் உவமைக் கவிஞர் சுரதாவின் மேல் வைத்திருந்த அன்பின் காரணமாக கல்லாடன் அவர்களும் தாயில் பணியாற்ற காரணம் ஆனார்கள்.
கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்கு பழனிபாரதி அவர்களுக்கு அப்போது உண்டு.
பாபநாசம் குறள்பித்தன் அவர்கள் துணுக்குகளையும் ஜோக்ஸ்ஸையும் தேர்வு செய்து வந்தார். ‘இளையவர் இனியவர்’ என்ற பகுதியில் பலரை அறிமுகம் செய்தார்.
கோவையைச் சேர்ந்த சூர்யகாந்தன் புதிய சிறுகதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
சிரிப்புத் துணுக்குகளை மிகவும் உற்சாகமாக பாதுஷா அவர்களும் பவித்ரா ஓவியரும் வெளிக் கொணர்வதில் சுதந்திரமாக செயல்பட்டார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய பணிகளை செவ்வனே செய்ய வலம்புரிஜான் அவர்கள் முழு சுதந்திரம் அளித்திருந்தார்கள்.
இது ஒருபுறமிருக்க எவரும் செய்யாத ஒரு செயலை செய்தார் வலம்புரி ஜான்.
அது என்ன என்றால் திரைப்படத்துறையில் பாடல் எழுது வாய்ப்பு கிடைப்பது அரிது.
அதை ஏன் எளியபடைப்பாளர்களுக்கும், கிராமங்களுக்கும் கிடைக்கக் கூடாது?
அவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘மெட்டுக்கு பாட்டு’ என்ற போட்டியை நேரடியாக நடத்த முனைந்தார்.
‘தாய்’ வார இதழ் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கங்கை அமரன் இசையமைப்பார். மெட்டுப் போடுவார்.
இயக்குனர் மணிவண்ணன் பாடல் எழுதுவதற்கான சூழலைச் சொல்வார். எழுத வந்த கவிஞர்கள் அங்கேயே பாட்டு எழுத வேண்டும்.
இந்த வித்தியாசமான நிகழ்வை முதன் முதலில் தமிழகத்தில் நடத்தியது ‘தாய்’ தான்.
மிகவும் பிரபலமாக இருந்த மணிவண்ணன் அவர்கள் அப்பொழுது ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த நேரம் என்று கருதுகிறேன்.
அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று முதலில் வந்த கவிஞருக்கு படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தந்தார்.
நீங்கள் ஆச்சரியப்படலாம்.
அதிகாலை பிரசாத் ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜா முன் வாசகர்களுக்கான நடத்திய ஒரு போட்டியை கொண்டு போய் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் போய் நின்றேன்.
“சரி குடுங்க ரெக்கார்டிங் இருக்கு ஆர்.சுந்தர்ராஜன் வந்து விடுவார்’’ என்று சொன்னார். அவர் எதிர்பார்த்தது பத்து இருபது வாசகர் கடிதங்கள் இருக்கும் அதை தேர்வு செய்யலாம் என்பதுதான்.
ஆனால் நடந்ததோ வேறு. ஒரு மூட்டையை க் கொண்டு வந்து கொட்டி அதை நீங்கள் தேர்வு செய்து தரவேண்டும் என்று சொன்னதும் மலைத்துப் போனார் இளையராஜா.
“இவ்வளவு பெரிய வளர்ச்சியா?” என்று ஆச்சரியப்பட்டு அவர் அதில் ஐந்து பேரை அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுத்து கொடுத்தார்.
எப்போதும் நேசம் கொண்டிருக்கிற இளையராஜா அவர்கள் மேலும் வியந்து இதற்காக ஒரு தனித்துவமான பேட்டியை எனக்கு தந்தார்.
அதுமட்டுமல்ல வர்த்தகரீதியாக எல்லோரையும் கவர வேண்டும் என்கிற இடத்தில் தாய் சென்றபோது இலக்கியச் சூழலில் பெரிதும் பெயர் வாங்கிக் கொண்டிருந்த ‘கிடை’ கி.ராஜநாராயணன் அவர்களை தாய் வேறு விதமாக முகம் காட்ட வைத்தது.
வட்டார வழக்குச்சொல் நாயகனை தாய் இதழில் A கதைகள் என்று முத்திரையிட்டு பிரசுரித்தார்.
கி.ரா தொடர் வாசகர்கள் மத்தியில் புதிய அலை எழும்பியது.
கதையில் ஒன்றை ‘குணா’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஒளிப்பதிவாளர் வேணு அவர்களிடம் சொல்ல அவர் இன்றுவரையும் அதை நினைவுபடுத்தி எனக்கு பேசுவார்.
பின்னாளில் நான் புதுவையில் கி.ராஜநாராயணன் அவர்களை சந்தித்தபோது இந்த நிகழ்வைச் சொன்னபோது “ஆமா கதை சொல்றதுல என்னய்யா ஒளிவுமறைவு.
நாம வெளிப்படையா சொல்லி, அதுவும் நம்மூர் பாஷைல சொன்னா… பாத்தீங்களா நீங்களே சொல்றீங்க எவ்வளவு பேரு ஞாபகம் வச்சு இருக்காங்க. அதான் ஒரு எழுத்தாளனுக்கு தேவை“ என்று சொல்லி சிரித்தார்.
‘சரித்திர நாவல் சக்கரவர்த்தி’ சாண்டில்யன் அவர்களை முதன் முதலாக 90 வாரங்கள் ‘கடல் வேந்தன்’ என்ற தொடரை எழுத வைத்தார் வலம்புரி ஜான்.
அதில் சாண்டில்யன் உற்சாகமாக எழுதி, வாசகர்களைக் கவர்ந்தார். பிறகு புகழ்பெற்ற பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, புஷ்பா தங்கதுரை, அனுராதா ரமணன், சிவசங்கரி, ராஜேஷ்குமார் என்று பலரும் எழுத ஆரம்பித்தார்கள்.
ஏனோ தெரியவில்லை இந்துமதி எழுதவில்லை.
இதுபோன்ற பல புதிய புதிய நிகழ்வுகளையும், அனுபவத்தையும் ஏற்படுத்தி இருந்த தாய் இதழ் மேலும் ஒரு புதிய தடத்திற்கு கொண்டு செல்ல எண்ணியது. அப்போது ஒரு யோசனை ஆசிரியரிடம் சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார்.
அந்த புதிய யோசனை என்ன? அது நடத்ததா? தொடர்ந்து சொல்கிறேன்.
(தொடரும்…)
-ராசி அழகப்பன்
10.02.2022 10 : 50 A.M