சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அதில் கலந்து கொள்ள விரும்புகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு சிங்கப்பூரில் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது தடைப்பட்டுப் போனது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார் இளையராஜா.
மார்ச் மாதம் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ‘ராக் வித் ராஜா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏ, பி, சி என எந்த சென்டர்களிலும் இன்றுவரை கலக்கிக் கொண்டிருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான்.
காதல், சோகம், கொண்டாட்டம், பயணம் என எங்கும், எந்த மனநிலையிலும் துணைக்கு வருவது இளையராஜாவின் பாடல்கள். அவரது பாடல்களை எடுத்து கையாளாதவர்கள் தமிழகத்தில் குறைவு.
தனியார் தொலைக்காட்சிகளில் அவரது பாடல்கள், இசைத் துணுக்குகள் நாள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாட்டில் இருப்பது போன்ற காப்பிரைட் உரிமை இந்தியாவில் கறாராக பின்பற்றப்பட்டு இருந்தால் இன்றைய தேதியில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இளையராஜா உருவெடுத்திருப்பார்.
சமீபமாகத்தான் தனது பாடல்களுக்கான காப்புரிமையில் இளையராஜா கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி உலகின் எந்த மூலையில் நடந்தாலும் திருவிழாக் கூட்டம் கூடிவிடுவது ஆச்சரியமான நிகழ்வு. அமெரிக்காவில் நடந்தாலும் அமைந்தகரையில் நடந்தாலும் கூட்டம் அல்லும்.
இந்த நிலையில், சென்னை வாழ் மக்களுக்கு மார்ச் மாதம் இசை விருந்து படைக்க இருக்கிறார் இளையராஜா. ராக் வித் ராஜா என்ற பெயரே ஒரு கொண்டாட்ட மனநிலையை உள்ளுக்குள் ஏற்படுத்துகிறது.
கொரோனா பேரிடர், ஊரடங்கு, பொருளாதாரச் சிக்கல்கள், மனக்கசப்புகள், மதவெறி சிந்தனைகள் என நாட்டை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து மனதை இலகுவாக்கிக் கொள்ள இந்த கான்செர்ட் உதவும்.
10.02.2022 4 : 30 P.M