– முஸ்லிம் மாணவிகளுக்கு மலாலா ஆதரவு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் காவி சால்வை அணிவோம் என்று சில கல்லூரிகளில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் வந்தனர்.
இதையடுத்து கர்நாடகாவில் மாணவ, மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணியும் பிரச்சனை – போராட்டமாகவும் கலவரமாகவும் மாறியது.
தாவணகெரே, ஷிவமொக்கா மாவட்டங்களில் மாணவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளியுமான மலாலா யூசுப், ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது என கூறியுள்ளார்.
இஸ்லாமிய பெண்களை புறந்தள்ளுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், புறக்கணிப்பது தொடர்வது வேதனை தருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆடையைக் காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது என்றும் மலாலா வேதனை தெரிவித்துள்ளார்.
09.02.2022 12 : 30 P.M