மூச்சை நிறுத்திக் கொண்ட சலங்கையொலி!

தன் கால்களில் கட்டிய சலங்கைகளை 40 வருடமாக இடைவிடாமல் சுமந்து, பெண் வேடமிட்டு மேடைகளில், தெருக்களில், இரயில்களில் ஆடியாடி புரட்சிகளை உருவாக்கியவர் மறைந்த கலைஞர் சந்தானம்.

பாவலர் ஓ.முத்துமாரி அவர்களுடன் வண்ணக்கூத்தாடி மக்கள் மத்தியில் கம்யூனிசம், அம்பேத்கரிசம், பெரியாரிசம் போன்ற அரசியல் கூற்றுக்களை கூத்துகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பங்கு சந்தானம் ஐயாவிற்கும் இருக்கின்றது.

பாவலர் ஓ.முத்துமாரி கூத்துக் கலையில் மிகமுக்கியமான தளத்தை உருவாக்கியவர். அவருடன் சேர்ந்து 40 ஆண்டுகாலமாக பெண்வேடமிட்டு, கோமாளிவேடமிட்டு பின்பாட்டு பாடியவர்தான் சந்தானம் ஐயா.

சந்தானம்

எந்தவொரு கலைஞர்களுக்கும் நேராத துயரம் இப்படிபட்ட கலைஞர்களுக்கு நேர்ந்தது தான் வேதனை.

தன்னுடைய இறுதிக் காலத்தில் சலங்கை கட்டிய கால்களில் பூட்ஸ் ஸூ மாட்டிக்கொண்டு மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு கலவை பூசச் சென்றார்.

இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையங்களில் காவலாளியாக பணியாற்றினார். முத்துமாரி அவர்கள் குழுவில் பயணித்த மூத்த கலைஞர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள்.

2018ஆம் ஆண்டு திணைநிலவாசிகள் காட்லா கலைத்திருவிழாவில் சந்தானம் ஐயாவை சென்னை அழைத்து வந்து உரிய மரியாதை செய்து கெளரவித்தோம். அச்சமயம் ஐயாவிற்கு 86 வயது என்று நினைக்கிறோம்.

மேடையில் நடித்த இளம் நாடகக் கலைஞர்களைப் பார்த்து பூரிப்பில் உலமார அழுது “நாடகக் கலைக்கு அழிவு கிடையாது” என்று வாழ்த்தி 5 பாடல்கள் பாடிச் சென்றார்.

சமூகத்தில் இத்தகைய கலைஞர்களை உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாட வேண்டும். ஆனால் நாம் கொண்டாட மறுக்கின்றோம் அல்லது  நமக்கு கொண்டாடத் தெரியவில்லை.

“கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடலை முத்துமாரி ஐயா பாடக் கேட்ட அந்த இரவு நேரம் எனக்குள் பசுமை மாறாமல் இன்று சூடாகக் கண்ணீராய் திரள்கிறது.

உண்மையில் போர்குணம் மிக்க பல முன்னெடுப்புகளை இக்கலைஞர்கள் அத்தனை சாதாரணமாக வெளிப்படுத்தியவர்கள். இவர்களுக்கான அடையாளங்களை இன்னும் பலரும் அறிந்திருக்கவும் மாட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

ஓ.முத்துமாரி

அவர்களை ’திணைநில வாசிகள்’ மாதிரியான சில தீப்பொறிகளே உணர்த்த இன்னமும் மிச்சமிருப்பதை நினைத்து நானும் ஆறுதல் கொள்கிறேன்.

இம்மாதிரியான கலைஞர்களுடன் பழகவும் பயணிக்கவும் வாய்க்கப்பெற்ற புகுந்தரன் உள்ளிட்ட கலைஞர்களை நான் எச்சூழலிலும் மதிக்க மறவாமல் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

வலைதளங்களில் அபத்தமான ஜோக்குகள் செய்யும் அற்ப மனிதர்களை தூக்கிப் பிடிகின்றோம், கொண்டாடுகின்றோம்.

இப்படிபட்ட கலைஞர்களை ஆவணப்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழகரசிற்கும் கலைப் பண்பாட்டு மையத்திற்கும் உள்ளது. கல்லூரிகளில் காட்சித் துறை பயிலும் மாணவர்களுக்குள்ளது.

சுருக்கமாக சொல்லப் போனால் கேமிரா வைத்திருக்கும் அனைவருக்கும் பொறுப்புள்ளது. இக்கலைஞர்களை ஆவணப்படுத்துவதில் அடுத்து வரும் சந்ததிகளுக்கு நகர்த்திச் செல்லலாம்.

நம் மூதாதையர்களின் கலைவடிவங்களை இழக்க இழக்க, மறக்க மறக்க, நாம் நாடு பாசிசம் நோக்கித் தான் செல்லும்.

ஹிஜாப் பிரச்சனைகள், மாட்டுகறி பிரச்சனைகள், மாநிலத்தை பிரிக்கும் பிரச்சனைகள் தலைவிரித்தாடத்தான் செய்யும்.

தமிழ் மாநிலத்திற்கு ஒரு பிரச்சனையென்றால் முதல் குரலாக பாவலர் ஓ.முத்துமாரி மற்றும் சந்தானம் ஐயா போன்றோர்களின் குரல் வண்ணக்கூத்தாக ஓங்கி ஒலிக்கும்.

இனி அவர்கள் விட்டுச்சென்ற குரலாக இங்கிருக்கும் கலைஞர்கள் ஒலிப்பார்கள். சந்தானம் ஐயாவிற்கு செவ்வணக்கம்.

– திணைநில வாசிகள் அமைப்பு

09.02.2022  4 : 30 P.M

Comments (0)
Add Comment