அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும்!

தன்னம்பிக்கைத் தொடர்  – 14

மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக விழா எடுத்தனர்.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள் மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர்.

அப்போது புலவர் ஒருவர் மிகப்பெரிய பொட்டலத்துடன் உள்ளே நுழைந்தார். பரிசுப் பொட்டலம் மிகப் பெரியதாக இருந்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான் பிரிக்கப் பிரிக்க தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

கடைசியில் உள்ளே நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிய அரசர், தெனாலிராமன் பக்கம் திரும்பி, “ராமா! இவர் ஏன் இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்தார். என்பது புரிகிறதா?” எனக் கேட்டார்.

“அரசே! ஏதும் புரியவில்லையே.!” என்று இழுத்தார். மூத்த அமைச்சரைக் கேட்டார் அவர் மிக அழகாக உதடு பிதுக்கிவிட்டார்.

“என்ன போங்கள்! இது கூடவா புரியவில்லை. எனது பிறந்தநாளில் அவர் புதுமையாக புத்தி புகட்டி இருக்கிறார். ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்றுதான்.

மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற ஓட்டில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகத் தந்துள்ளார். இல்லையா புலரே” என்று கேட்டார்.

“புலவரும் ஆமாம் மன்னா! புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றார்.

ஆசனத்தை விட்டு எழுந்த அரசர், “எனக்குச் சரியான புத்தி புகட்டி விட்டீர்கள். பிறந்தநாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை என்பது புரிந்துவிட்டது. இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது” என உத்தரவிட்டதோடு, புலவருக்குப் பரிசுகளும் வழங்கினார்.

அவை கலைந்தபின், மூத்த அமைச்சரும், தெனாலிராமனும் தனியே சந்தித்துக் கொண்டார்கள். “என்ன தெனாலி! புளியம்பழத்துக்கான விடை உமக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனால், தெரியாதது மாதிரியே காட்டிக் கொண்டீரே!” என்று கேட்டார்.

“அந்த புளியம்பழத்தைக் கொடுத்து அனுப்பியதே நான்தான். இதை நான் அரசரிடம் சொன்னால், அவரது கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஆனால், அதை அரசரே சொன்னால், ஒரு பிரச்னையும் கிடையாது. சில இடங்களில் வாய்மூடி இருப்பதே நல்லதய்யா!” என்றார் முத்தாய்ப்பாக

கண்ணை மூடிக்கொண்டு கிலோ கணக்கில் ஆழமான கருத்துக்களை அள்ளிவிடுவது ஒரு தியான நிலை. ஆனால், கடைசிவரை ஒரு கொசுவைக் கூட திருத்தமுடியாது என்று புரிந்து கொள்வதுதான் முக்தி நிலை.

“யோசித்துப் பாருங்கள். மன்னருக்கும் தெனாலிக்கும் மோதல் வருகிறது. யாரங்கே! அவன் தலையை சீவுங்கள்!” என்ற டயலாக்கை மன்னரைப் பார்த்து தெனாலி சொன்னால், ஏதாவது நடக்குமா? இதுவே, தெனாலியைக் காட்டி மன்னர் சொன்னால், கதை முடிந்ததல்லவா.?

அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை ஒரு விதை’ என்ற நூலிலிருந்து

Comments (0)
Add Comment