இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர்.

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி தான்.

இசையின் மீது தீராத காதல் கொண்ட லதா மங்கேஷ்கர் 1942ம் ஆண்டு முதல் முதலில் மராத்திப் பாடலைப்பாடி பாடகி என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். மஜ்பூர் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைத்தது.

இதனைத் தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்களில் படங்களில் பாடி இன்று வரை தனித்துவமான பாடகி என்று பெயர் எடுத்துள்ளார்.

ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷாத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபி, முகேஷ், தலத் மஹ்மூத், மன்னா டே போன்ற பல பாடகருடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார்.

நான்கு தலைமுறைகளை கடந்த பாடகி என்ற பெருமை லதா மங்கேஷ்கருக்கு உண்டு. கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரத ரத்னா, தாதாசாஹெப் பால்கே விருது, பத்மபூஷன்,பத்ம விபூஷன், என்.டி.ஆர் விருது, லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது, பிரெஞ்சு அரசின் உயரிய விருது,தேசிய விருது, பிலிம்பேர் விருது என சினிமாத்துறை சார்ந்த அனைத்து முக்கியான விருதுகளையும் பெற்றுள்ளார். கின்னஸ் சாதானையிலும் இடம் பிடித்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

இப்படிப் பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர், கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் அவர் செயற்கை சுவாசத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு கொரோனாவில் இருந்தும் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் தொடர்ந்து லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

06.02.2022

Comments (0)
Add Comment