நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியும் அதைப் பாதுகாப்பாக எங்கும் அனுப்பாமலேயே வைத்திருந்தார் ஆளுநர்.
இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இரு முறை ஆளுநரைச் சந்தித்து தாமதம் இல்லாமல் மசோதாவை அனுப்பச் சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை.
இவ்வளவுக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தொடரின் போது, அரசால் அளிக்கப்பட்ட உரையை வாசித்திருந்தார் ஆளுநர். அதில் நீட் மசோதா விலக்கை ஆதரித்திருந்தார்.
தற்போது அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் ஆளுநர். அது கடுமையான கண்டனத்திற்குள்ளானது.
142 நாட்களுக்குப் பிறகு அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பி வைத்ததை அடுத்து இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
நீட் விலக்கே தீர்வு என்ற முடிவோடு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, மறுபடியும் மசோதாவைத் திரும்பவும் அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவும், பாஜகவும் புறக்கணித்திருக்கிறது.
”இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தவர்களைத் தமிழக மக்கள் புறுக்கணிப்பார்கள்” என்றிருக்கிறார் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
இப்போதைக்கு நீட் தேர்வுச் சர்ச்சை முடிவுக்கு வராது போலிருக்கிறது!