ஆளுநரின் ‌அதிகாரமும், மாநில சுயாட்சியும்!

பேச்சு வழக்கில் நீ என்ன‌பெரிய கவர்னரா? எனக் கேட்பதுண்டு. ஆம், ஆளுநர் பதவி பெரியதுதான்.‌

இந்திய அரசியலமைப்பு சட்டம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
அதிகாரக் குவியலை, ஒன்றிய அரசை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது.

வலிமையான மைய அரசே அதன் நோக்கம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில  அவையின் பிரதிநிதிகள் அதற்கு இரண்டாம் பட்சம்தான்.

மாநிலத்தில் ஒட்டு மொத்த நிர்வாக எந்திரத்தின் தலைவர் ஆளுநர் தான்.
இதை அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது

அதாவது மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபை பெரும்பான்மையுடன் சட்டம் இயற்றலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றபின்பே சாத்தியமாகும்.

ஆளுநர் அவ்வாறு இயற்றப்பட்ட சட்டத்தை அங்கீகரிக்க மறுத்து மீண்டும் சட்டசபைக்கு மறுபரிசீலனைக்கு அனுப்பலாம்.

மீண்டும் அச்சட்ட வரைவு மாநிலசட்டபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்காக அச்சட்டவரைவை பரிசீலிக்கலாம்.

அவ்வாறு பரிசீலிப்பதற்கான காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அது ஆளுநரின் விருப்பமாம்.

மீண்டும் அது குடியரசுத்தலைவருக்கு போய் அவர் சட்டவல்லுனர்களை கலந்து ஆலோசித்து ஒப்புதல் செய்ய எந்தக் காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டவில்லை. அது குடியரசுத் தலைவரின் விருப்பமாம்‌‌.

அதற்குள் அந்த சட்டசபையின் காலக்கெடுவே முடிந்துவிட‌ வாய்ப்புள்ளது.

இப்படி சர்வவல்லமை உடைய ஆளுநரை நியமிப்பது மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் அவர்கள்.

குடியரசுத்தலைவர் அவர்களைத் (தேர்ந்தெடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும்) தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் மத்தியில் ஆளும் அரசின் பெரும்பான்மை உள்ள மக்களவை, மாநிலங்களவை கட்சி எம்.பி.கள்தான். மாநில சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒரு சிறிய பங்கு உண்டு.. அவ்வளவே.

குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் ஆளும் மத்திய அரசின் ‌கைப்பாவைகள்தான்.
இதிலே “அவர் நல்லவர், இவர் வல்லவர்” என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு.

ஆக ஆளுநர் என்பவர் வெறும் அம்புதான். எய்வது மத்திய அரசு. இதில் ஆளுநரை மாற்று என மத்திய அரசிடமே கோரிக்கை வைப்பதும், ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறிவிட்டார் என்பதும் வேடிக்கையான வேதனை.

ஆளுநர் ரவிக்கு பதிலாக யார் வந்தாலும் (அப்படி அவரை மத்திய அரசு மாற்றப் போவதில்லை) சட்ட நிலைமையில் ஏதும் மாறப் போவது இல்லை.

மாற்றப்பட வேண்டியது ஆளுநர் பதவி குறித்தும், அவரின் அதிகாரம் குறித்தும் நிர்ணயிக்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளே.

மாநில சுயாட்சி கோரிக்கை வலுப் பெற்றாலே இது சாத்தியமாகும்.

– ஆதிரன்

Comments (0)
Add Comment