வரிசை கட்டி வரும் பெரிய பட்ஜெட் படங்கள்!

ரசிகர்களுக்கு இரண்டு மாதங்கள் கொண்டாட்டம்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக் உள்ளிட்ட ஜாம்பவான்களை பறித்துக் கொண்ட கொரோனா, தமிழ் சினிமா உலகையும் முற்றிலுமாக முடக்கியது.

முதல் அலையால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் வளர்ந்தன. படங்களை தயாரித்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் நொடித்து போனார்கள்.

முதல் அலை ஓய்ந்த பின் வந்த படங்களில் விஜயின் மாஸ்டர் அனைத்து தரப்புக்கும் ஊக்கம் அளித்தது. ஒமிக்ரான் எனும் பெயரில் பயமுறுத்தும் மூன்றாம் அலை, சினிமாவை ரொம்பவே பதம் பார்த்துள்ளது.

50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பலாம் என்ற அறிவிப்பால் பெரிய படங்களின் வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பொங்கலுக்கு வெளியான எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. வசூலும் இல்லை.

பட்ட காலிலேயே படும் என்பது போல், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில், முழு நேர ஊரடங்கும் தமிழ் சினிமாவை மீண்டும் இருட்டில் தள்ளியது.

இரவு நேர ஊரடங்கையும் ஞாயிறு ஊரங்கையும் தமிழக அரசு விலக்கிக் கொண்டதால் தமிழ் சினிமாவுக்கு உயிர் வந்துள்ளது. தியேட்டர்களுக்கு அணி வகுத்து வர பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த மாதமும், அடுத்த மாதமும் (பிப்ரவரி, மார்ச்) ரசிகர்களுக்கு வேட்டை.
அடுத்தடுத்த வாரங்களில் ராஜமவுலி, விஷால், அஜீத், விஜய் உள்ளிட்டோரின் படைப்புகள் மக்களை வந்தடைய உள்ளன.

குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) வெளியாக இருந்த விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படம்  நாளை வெளியாகிறது.

11-ம் தேதி விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ ஆகிய இரு படங்களும் வெளியாகின்றன.

தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள அஜீத்தின் ‘வலிமை’ 24-ம் தேதி ரிலீஸ்.

சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச்-11 அல்லது 24-ம் தேதி வெளியாகும்.

இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா தளர்வுகள் காரணமாக மார்ச் மாதம் 18 அல்லது 25-ம் தேதி அன்று ராஜமவுலி படத்தைவெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி விஜயின் ‘பீஸ்ட்’ வெளிவர உள்ளது. அதே நாளில் கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப்: சேப்டர்- 2’ வெளியாகிறது.

’’வலிமை, பீஸ்ட், ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப்-2 ஆகிய நான்கு படங்களும் நிச்சயம் வெற்றி பெறும். ஓராண்டில் தொலைத்த வருமானத்தை இந்த நான்கு படங்கள் மூலம் எடுத்து விடுவோம்’’ என தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும், கோரசாக சொல்கிறார்கள்.

மேலே சொன்ன படங்கள் தவிர சின்ன பட்ஜெட்டில் உருவாகியுள்ள 10 படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்கில ரெண்டு காதல்’ அருண் விஜய் நடித்துள்ள ’யானை’ ஆகிய படங்கள் இதில் அடக்கம்.

பெரிய படங்கள் ஓடுவதை பொறுத்து இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும்.

– பி.எம்.எம்.

03.02.2022   5 : 30 P.M

Comments (0)
Add Comment