கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்கள் இந்தியாவிற்கே உதாரணமாக மாறியுள்ளனர். இங்குள்ள 500 ஆண்டுகள் பழைமையான கோயிலுக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்காக தங்கள் சொந்த நிலத்தைக் கொடுத்துள்ளனர்.
கூத்திலாங்காடி பஞ்சாயத்தைச் சேர்ந்த அபுபக்கர், எம்.உஸ்மான் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தைக் கூத்திலாங்குடி கொடுங்கூத்து மகாதேவ கோயிலுக்குச் செல்லக்கூடிய 10 அடி அகலமுள்ள சாலை வசதிக்காகக் கொடுத்துள்ளனர்.
இந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவியைக் கொண்டு, விரைவில் சாலைப் பணியைத் தொடங்கவுள்ளனர். அவர்கள் கொடுத்த நிலத்தில் காடாக அடர்ந்திருந்த காட்டுச் செடிகளை அகற்றினர்.
“சாலைக்கான இடம் தொடர்பாகச் சிலர் மதப் பிரச்சினையைக் கிளப்பத் தயாராக இருந்தனர். ஆனால் அது எடுபடவில்லை. இந்தக் கோயிலுக்குச் சரியான சாலை வசதி இல்லை. இதுபற்றிய வெறுப்புப் பிரச்சாரத்தைச் சிலர் சமூகவலைத்தளங்களில் தூண்டிவிட்டனர்” என்கிறார் ரகூப் கூத்தாலங்குடி.
இங்கு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சாளம்குழி அலி, மலபார் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது நிலத்துக்குச் சொந்தக்காரர்களான இரு முஸ்லிம்களும் தங்களுடைய நிலத்தைக் கோயிலுக்காக மனமுவந்து கொடுத்தனர்.
தற்போது இந்தக் கோயில் 1 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பா. மகிழ்மதி
03.02.2022 12 : 30 P.M