‘’ஒருவருக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை விட, பெருவாரியான மக்களின் நலனைப் பிரதிபலிக்கிற விதத்தில் எனக்கு என்ன படுகிறதோ, அதை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?’’
– ஞாநியின் கரகரத்த குரலை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.
ஏதாவது வண்ணத்திலான நீண்ட ஜிப்பா; நீளமான தலைமுடி ; தொளதொளத்த பேண்ட் ; பட்டையான கண்ணாடி- இது தான் ஞாநியின் அப்போதைய தோற்றம்.
மதுரையில் அவர் எழுதிய ‘’பலூன்’’ நாடகத்தை நண்பர் மு.ராமசாமி அவருடைய நிஜ நாடக இயக்கம் மூலம் மேடையேற்றினார். அதைப் பார்க்க வந்திருந்தார் ஞாநி.
அப்போது தான் அறிமுகமானார். பேசி அரைமணி நேரம் கூடக் கழிந்திருக்காது.
அதற்குள் நீண்ட நாள் பழகியவரைப் போலப் பேசினார். உரையாடல் மூலம் நெருக்கத்தை உணர முடிந்தது.
“சார்..’’ என்று தன்னை அழைத்தவர்களிடம் ‘’சும்மா என்னை ‘ஞாநி’ன்னு பெயர் சொல்லியே கூப்பிடுங்க..’’ என்று அவரை விட வயது குறைந்தவர்களிடம் கூடச் சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.
மதுரையை விட்டு அவர் கிளம்பும்போது சென்னைக்கு அவரைச் சந்திக்க வர வேண்டும் என்று சொன்னேன்.
நவீன தமிழ் நாடகங்களில் இயங்கிக்கொண்டிருந்த சே,ராமானுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, நிஜ நாடக இயக்க மு.ராமசாமி- இந்த வரிசையில் பரீக் ஷா ஞாநியையும் நேர்காணல் செய்து தனி நூலாகக் கொண்டுவரும் முயற்சியில் இருந்தேன்.
‘’சென்னைக்கு வாங்க.. இதுக்கெல்லாம் ஏதாவது பதிப்பகம் பணம் கொடுக்கிறார்களா?’’
‘’இல்லை.. நானே சொந்தச் செலவில் பண்றேன்’’
‘’அப்படின்னா சென்னைக்கு வரும்போது எங்க வீட்டிலேயே தங்கிக்கலாம். தெரியப்படுத்திட்டு வாங்க’’
சென்னைக்கு அவர் வீட்டில் தங்கி அவரிடம் நேர்காணல் நடந்த நேரம் மட்டும் சுமார் எட்டு மணி நேரம். அவ்வளவு நேரமும் நாடகம் பற்றித் தான்.
அவ்வளவு சிரத்தை எடுத்து அந்தப் புத்தகம் வெளிவர முடியாமல் போனது ஒரு புறம் இருந்தாலும், அந்த நீண்ட நேர உரையாடல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சியுடனும், சலிப்பில்லாமலும் உரையாடுகிறவராக அவரைக் காட்டின.
ஞாநி இயக்குநராகவும், நடிகராகவும் பங்கேற்றிருந்த ‘பரீக் ஷா’’ சிறு பத்திரிகை வட்டாரத்தில் பிரபலம்.
அதற்காக அவர் வடிவமைத்த சுவரொட்டிகள் கூட வித்தியாசமானவை. தங்களுடைய நாடகங்களுக்கு என்று பிரத்யேகமான பார்வையாளர்களை உருவாக்கியிருந்தார்.
பீட்டர்ஸ் காலனியில் இருந்த ஞாநியின் வீட்டில் ரெவித்தம்பி இருந்தார். அவருடைய வீடே எப்போதும் நண்பர்கள் சகிதமாகக் கலகலவென்றிருக்கும்.
ஒரு சமயம் மறைந்த நாட்டுப்புற இசை வல்லுநரான கே.ஏ. குணசேகரன் இளையராஜாவின் பாடல் உள்பட சில நாட்டுப்புறப் பாடல்களை வசமான குரலில் பாட, ஞாநியும், நண்பர்களும் கிடைத்த சாதனங்களில் தங்கள் கைவரிசையைக் காட்ட அமர்க்களம் தான்!
வீட்டிற்குப் போனால் நம்முடன் பேசிக் கொண்டிருப்பார்.
‘’இருங்க.. வந்துர்றேன்’’ – சொல்லிவிட்டு உள்ளே போவார்.
சமையல் மணம் வரும். அதற்கான சத்தங்கள் கேட்கும்.
சாதம் வடித்து, ரசம் வைத்து, உருளைக்கிழங்கைத் தோலோடு நீளவாக்கில் வெட்டி, உப்பு, மிளகு போட்டுத் தாளித்து-அதிகபட்சம் முக்கால் மணி நேரத்திற்குள்- சாப்பிடக் கூப்பிட்டுவிடுவார்.
எளிமையாக இருந்தாலும்,சுவைக்குப் பஞ்சம் இருக்காது.
தேர்ந்த உணவுப்பிரியரான ஞாநிக்குப் பிடித்த ஐட்டங்களில் உருளைக்கிழங்கும் ஒன்று- கண்ணதாசன் மாதிரி.
ஒரு சமயம் வார இதழ் ஒன்றில் ‘ அரசியல் விமர்சனம் வேண்டாம்’’ என்று சொல்லப்பட்டதும், ஞாநி எழுதிய அந்த வாரக் கட்டுரை உருளைக்கிழங்கின் மகிமை பற்றியதாக மாறிவிட்டது.
ஒரு நாள் நாடகம் ஒன்றின் இடைவேளையில் ஞாநிக்கும், பத்மாவுக்கும் ரொம்பவும் எளிமையான படி திருமணம். அடுத்து மனுஷ் நந்தன் பிறந்த பிறகு அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடந்திருக்கிறது.
எழுத்து, நாடகம், பேச்சு,நூல் வாசிப்பு என்றிருந்த ஞாநி ஆங்கில நாளிதழின் மீது வழக்குப் போட்டு வெற்றி அடைந்த பிறகு ‘’தீம்தரிகிட’’ பத்திரிகையைத் துவக்கினார்.
லேஅவுட்டை அவரே கவனித்தார். அதற்கான எழுத்துக்களை அவரே வடிவமைத்தார். சிறு படங்களை வரைந்தார்.
தலையங்கம், கமல், நக்ஸலைட் வள்ளுவன் என்று வித்தியாசமான நேர்காணல்கள், அந்தரங்கமாக உணர வைக்கும் டைரிக்குறிப்புகள் என்று விதவிதமான பெயர்களில் பத்திரிகை முழுவதும் பரிமாறியிருப்பார். அவருடைய தனித்துவம் பத்திரிகை முழுக்கப் பளிச்சென்று தெரியும்.
சமூக அநீதிக்கு எதிரான குரலைத் துவக்கத்திலிருந்தே எதிரொலிப்பது அவருடைய இயல்பாக மாறியிருந்தது. திருச்செந்தூரில் கோவில் அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்தபோது அது பற்றி எழுதிவிட்டுக் கட்டுரையை இப்படி முடித்திருந்தார்.
‘’இதை எல்லாம் சொல்வதற்கு ஒரு சுப்பிரமணிய பிள்ளை இறந்து போக வேண்டியிருக்கிறுது என்பது தான் வருத்தமாக இருக்கிறது.’’
தீம்தரிகிட இதழை ஆரம்பித்தபோது ஒரு கார்டு எழுதியிருந்தார். என்னை உடனே சென்னைக்கு வந்து அதில் பணியாற்ற அழைத்திருந்தார்.
சில காரணங்களால் என்னால் மதுரையை விட்டு அப்போது கிளம்ப முடியவில்லை. அதை நாசூக்காகப் பதிலில் தெரிவித்திருந்தேன்.
உடனே ஞாநி எழுதியிருந்தார்.
”எனக்கு உங்களிடம் கேட்பதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே மாதிரி மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. தொடர்ந்து எங்கள் இதழுக்கு எழுதலாம் இல்லையா?”
நட்பில் ஈகோ பாராட்டாத கனிவான மனம் அவருக்கிருந்தது
சென்னையில் இருந்தபோது சின்னக்குத்தூசி அறைக்கு ஞாநி வந்தால் ஒரே கிண்டலும், கேலியுமாக இருக்கும்.
‘’இதை விட்டுட்டீங்களே ஞாநி’’ என்று சின்னக்குத்தூசி தன் பங்கிற்கு எடுத்துக் கொடுக்க, அவரும் ஞாநியும் குரலில் பல அற்புதங்களைக் காட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேல் அதகளமாக நடக்கும் அந்தக் கச்சேரி. ஒரு ராகத்தில் இருவர் பாடுவதைப் போலவும் இருக்கும்.
பரீக் ஷாவும், வல்லப அக்ரஹாரமும் இணைந்து வழங்கும் வானொலி நாடகத்திற்கான ஒலிப்பதிவை நேரில் பார்த்த மாதிரியும் இருக்கும்.
கேட்கும் திறனோடு காது குறுகுறுக்க அதைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்!
நேரிலும், பத்திரிகைகளிலும் எந்தக் கேள்விக்கும் படுகூரான சொற்களில் பதில் சொல்வார் ஞாநி.
‘’கேள்வி கேட்கிறது பத்திரிகையாளனின் வேலை. நாம எவ்வளவு பேரைக் கேள்வி கேட்டிருப்போம்? அதனாலே நம்மைப் பார்த்து யாரும் கேள்வி கேட்கிறப்போ, நாம கோபப் படாம, பொறுமையா பதில் சொல்ல வேண்டியதிருக்கு’’
மனித உரிமைக் குரல் கொடுக்க பி.யு.சி.எல் போன்ற அமைப்புகளுடன் முதலில் இணைந்து குரல் கொடுத்தார். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தபோது ஆதரித்தார்.
வி.பி.சிங் தமிழகத்திற்கு வந்து பல நகரங்களில் பேசியபோது தமிழ் மொழிபெயர்ப்பாளராகச் சளைக்காமல் அலைந்தார். பொதுவுடமைக்கட்சி மீதும், திராவிடர் கழகம் மீது கரிசனமான பார்வை அவரிடம் எப்போதும் இருந்தது. பெரியாரும், பாரதியும் அவரை அந்த அளவுக்குப் பாதித்திருந்தார்கள்.
பாரதியை சுருக்கமான கோடுகளால் வரைந்த படம் ஞாநியின் வடிவமைப்புக்கான நல்ல உதாரணம்.
மதுரையில் ஒரு சமயம் இரவு நேரத்தில் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. திறந்தால் சிரித்தபடி ஞாநி.
‘’தொந்திரவுக்கு ஸாரி! மதுரைக்கு எங்க டீமோட வந்தோம். கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. சரி, உங்க வீட்டுக்கு வந்துறலாம்னு முடிவு பண்ணி வந்துட்டோம்.’’
பணத்தைக் கொடுத்ததும் நன்றி சொல்லிக்கிளம்பியவர் சென்னைக்குப் போனதும் உடனே பணத்தை அனுப்பிவிட்டார்.
இன்னொரு சமயம். மதுரையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். பெற்றோரிடம் தயக்கமில்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார். சாப்பிடும் போது அம்மா சமைத்த விதத்தை ருசியுணர்ந்து குறிப்பிட்டுப் பாராட்டியதும், பரிமாறிக் கொண்டிருந்த என்னுடைய அம்மா முகத்தில் அவ்வளவு கூச்சம்.
நிலக்கோட்டையில் அவருடைய நாடகக் குழுவில் இருந்த நண்பருக்குத் திருமணம். போயிருந்தோம்.
திருமணத்தில் நாயனமும், தவிலும் அட்டகாசமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். பலர் அதையெல்லாம் கவனிக்காத படி கடந்து போக, அவர்களுக்கு அருகில் ஞாநி அமர்ந்து நிதானமாக ரசித்து தவில்காரரிடமும், நாயனம் வாசித்தவரிடமும் பாராட்டைத் தெரிவிக்க மெய் மறந்து போனார்கள் அந்த எளிய கலைஞர்கள்!
மதுரைக்குத் திரும்பிய போது மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகலாம். சன்னதிக்கு எல்லாம் போக வேண்டாம். கோவிலைப் பார்க்க வேண்டும் என்றார்.
போனோம். உள்ளே கருங்கல்லில் நுட்பமாக இழைத்திருந்த சிலைகளை, அதன் புன்சிரிப்பை, உளியின் வித்தையை அவ்வளவு ரசித்துவிட்டு வந்தார்.
பொற்றாமரைக்குளப் படிக்கட்டுகளில் நடந்த அலுப்புடன் உட்கார்ந்தோம். கோவில் பிரகாரங்களில் உள்ள சிற்பங்கள், யாளிகள், அழகான தூண்களுக்குப் பின்னிருக்கிற சிற்பக் கலைஞர்களின் தொழில்நுட்பமும், சிரத்தையும் இன்றைக்குள்ள தமிழர்களிடம் ஏன் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார் ஞாநி.
மாலை தாண்டிவிட்டது. கிளம்பினோம்.
கோவிலுக்குள் அடுத்தடுத்து கடைகள். அதில் மனுஷ் நந்தனுக்கு என்று மரத்தால் செய்த ஒரு விளையாடுவதற்கான வண்டியை வாங்கினார்.
நீளக்குச்சி இணைந்த அதை தரையில் அழுத்தி ஓட்டும் போது பறவை சிறகடிக்கிற மாதிரி இருக்கும்.
‘’இந்த மாதிரி தான் ஒரு தொழிலாளி ஈடுபாட்டோடு செய்ததை வாங்கணும்’’ என்றவர் எங்கள் வீட்டு வரைக்கும் சிறு பிள்ளையைப் போல எந்தக் கூச்சமும் இல்லாமல் அந்த வண்டியைத் தெருக்களில் ஓட்டிய படியே வந்தார். ஜிப்பாவுடன் மர வண்டியை ஓட்டி வந்தவரை விசித்திரமாகப் பார்த்துவிட்டுக் கடந்து போனார்கள்
எதிர்ப்பட்டவர்கள். ஞாநியும் அதைக் கவனித்தார்.
‘’மத்தவங்க வேடிக்கை பார்த்தா பார்க்கட்டும். நான் இப்படித்தான் போவேன். பேசாம வாங்க..’’ என்றார் சிரித்தபடியே.
”இவ்வளவு ரசிச்சு இதை ஓட்டுறதைப் பார்த்தா இது மனுஷூக்காக
வாங்கின மாதிரித் தெரியலையே ஞாநி” என்று கிண்டலாகக் கேட்டதும் பூரிப்பானார்.
சென்னைக்கு அவர் ரயிலில் ஏறுகிற வரைக்கும் சொந்தமான ஒன்றைப் போல ஞாநி கையில் தான் இருந்தது அந்த மர வண்டி.
சிறு குழந்தைக்கான மனம். முதிர்ச்சியான மூளை. பரிவான பார்வை. அறம் சார்ந்த கோபம்- இவை தான் ஞாநி.
ஒரு பத்திரிகையாளனாக நுணுக்கமான பார்வையுடன் எழுதுபவராக இருந்தார்.
மதுரையில் ஒரு இடைத்தேர்தல் நடந்தபோது ஒரு வார இதழ் சார்பில் வந்திருந்தார். என்னை அழைத்தார்.
அவரும்,நானும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள். கட்சிக்காரர்கள், பொது மக்கள் என்று பலரை ஒரு நாள் பார்த்தோம். ஞாநி ஒரு குறிப்பு கூட எழுதவில்லை.
முடித்து அவர் தங்கியிருந்த அறைக்கு வந்ததும் ‘’ கொஞ்ச நேரம். முடிச்சிடுறேன்’’ என்று நினைவில் இருந்தவற்றை வைத்து ஏழெட்டுப் பக்கங்கள் எழுதினார்.
படிக்கச் சொன்னார். தெளிவான பார்வையுடன் அன்றைக்குச் சந்தித்தவர்களின் பேச்சுகளுடன் பதிவு செய்திருந்தார். அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்கிற அளவுக்கு அவ்வளவு நேர்த்தி!
‘’அவ்வளவு தான்!வந்த வேலை முடிஞ்சிருச்சு. வாங்க..சாப்பிடப் போகலாம்’’-கிளம்பிவிட்டோம்.
மனுஷ் மீது ஒரு தகப்பனாக அவ்வளவு பிரியம் வைத்திருந்தார். அவர் வசித்த வீட்டில் மனுஷ் சிறுவயதில் வரைந்த ஓவியங்களும், கிறுக்கல்களுமாக இருக்கும்.
‘’ஒரு குழந்தை இருக்கிற வீடு இப்படித்தான் இருக்கும். இருக்கணும்’’ -புன்னகையுடன் பதில் வரும் ஞாநியிடமிருந்து.
பல நாளிதழ்கள், பல வார இதழ்களில் வேலை பார்த்திருக்கிற, எழுதியிருக்கிற அவருக்கு நிறுவனங்கள் உருவாக்குகிற வரம்புக்குள் அவரும் அடங்கிவிடவில்லை. அவருடைய எழுத்தையும் அடக்கிவிட முடியவில்லை.
அதனால் பொருளாதார ரீதியான சிரமங்களைச் சந்தித்தபோதும் அவரால் சமரசப்படுத்திக் கொண்டு சில இடங்களில் நிர்பந்தமாக மனதின் விருப்பத்தை மீறி இருக்க முடியவில்லை.
”எழுதுகிறவர்களுக்கு அதிலும் பத்திரிகையாளர்களுக்கு என்று தனித்த பார்வை இருக்கணும். அதில் நாம உடன் படலாம். உடன் படாம இருக்கலாம். அப்படியொரு பார்வை இருந்தால் தான் எந்த ஒரு பிரச்சினையையும் பற்றி நம் பார்வையில் எழுத முடியும். அது சாதாரண மக்களுக்கான பார்வையாக இருப்பது முக்கியம்.
அந்தப் பார்வை நாம் பணியாற்றுகிற நிறுவனத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறதாக அவர்கள் உணர்கிறபோது நாம் விலகி வர வேண்டியிருக்கிறது.”-என்றார் ஒரு நிறுவனத்திலிருந்து வெளியே வந்த போது.
ஆனால் செய்கிற வேலையில் மனம் ஒன்றிச் செய்வது தான் ஞாநிக்கான தனித்துவம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயம். தொலைக்காட்சி ஒன்றில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சி. நேரடி ஒளிபரப்பு. அதில் நான் ‘’ இன்புட் எடிட்டராக’ப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது கூடவே ஒரு பையும் வைத்திருந்தார். அதில் கூடுதலாக இரண்டு அழுத்தமான வண்ணத்திலான ஜிப்பாக்களை வைத்திருந்தார்.
தொடர்ந்து நடந்த அந்த நிகழ்ச்சியில் கிடைக்கிற இடைவேளையில் ஜிப்பாவை மாற்றிக் கொண்டபோது ‘’ என்ன ஞாநி! தமிழ் சினிமாவின் கனவுக்காட்சியில் உடைகளை மாற்றுகிற ஹீரோ மாதிரி ஆயிட்டீங்க?’’ என்று கேட்டதும அட்டகாசமான சிரிப்பு அவரிடம்.
‘’தொடர்ந்து நம்மைப் பார்க்கிறப்போ பார்வையாளர்களுக்கு அலுக்கக் கூடாதில்லையா? அதனால் தான்..’’- மறுபடியும் சிரிப்பு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘ஓ பக்கங்கள்’ மட்டும் எழுதிக் கொண்டிருந்த நிலையில் ஒரு சமயம் சந்தித்த போது வழக்கத்தை விட, மாறுதலான நிலையில் பேசினார்.
‘’இங்கே..பாருங்க.. இப்போ.. ஓ.பக்கங்கள் மட்டும் தான் எழுதிக்கிட்டிருக்கேன். எனக்கு மாசம் எட்டாயிரம் ரூபா வருது. அது தான் என்னோட மூளை உழைப்புக்குக் கிடைக்கிற சன்மானம்.’’
அன்றைக்கு எப்போதும் இல்லாத அளவுக்குக் குரல் கீழிறங்கியபடி அவர் சொன்னபோது பதில் சொல்ல முடியவில்லை என்னால்.
நண்பர்களுக்குச் சிரமங்கள் வருகிற போது தன்னுடைய சிரமத்தைப் போல அதில் கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் பெரிதும் மதிப்பு வைத்திருந்த சின்னக்குத்தூசிக்கு உடல் நலம் குன்றியபோது ” நீங்க இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு தியாகராஜன். நண்பர்கள் இருக்கோம். இதுக்காகவாவது உங்க உடம்பை நீங்க கவனிச்சுக்க கூடாதா?” என்று பரிவோடு பேசியிருக்கிறார். அசோக மித்திரனின் மறைவுக்கு மௌனமாக வருந்தியிருக்கிறார்.
இரண்டு முறை நான் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னைக் கடிந்து கொண்டார். நெருங்கிய சொந்தங்களை மீறிய அன்பின் குரலோடு அவர் சொன்னார்.
”எது எதன் மீதோ நமக்கு இருக்கிற கவனம் நம்ம உடம்பு மேலே நமக்கு இருக்கா மணா? ஏன் இப்படி உடம்பு மேலே கவனம் இல்லாம இருக்கீங்க? நம்ம ஒர்க்கில் பிரஷரும், கவிழ்க்கிற உள் அரசியலும் இருக்கிறது இயல்பு தான். உங்களுக்கு ஒண்ணு பிடிக்கலையா? விட்டுட்டு வெளியே வந்து நீங்க விரும்புற படி இயங்குங்க. மன அழுத்தத்தோடு வேலை பார்த்துக்கிட்டிருக்கிற ஜெர்னலிஸ்ட்கள் தன்னோட ஆரோக்கியத்தைத்தான் அதுக்கு விலையாக் கொடுத்திருக்காங்க. அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்திறாதீங்க” – என்று பிரியத்துடன் ஞாநி கரகரத்த குரலோடு சொன்னதைக் கேட்டபோது நெகிழ்ந்து கண்ணில் ஈரம் கோர்த்தது.
இப்படி நண்பர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த ஞாநி அதைத் தன் மனதுக்குச் சொல்லாததைப் போலிருக்கிறது.
நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமான நிலையில் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் சில சமயங்களில் அவரால் நாக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
கன்னியாகுமரிக்கு காலச்சுவடு ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவுக்கு வந்திருந்தார். சந்தித்தோம். அன்று மதியம் குமரி மாவட்டத்திற்கே உரிய சாப்பாடு.
பலவகைக் கூட்டு. புளிப்புப் பச்சடி. கடைசியாக மூன்று வகைப் பாயாசம்.
ரசித்துச் சாப்பிட்டார். பாயாசத்தை அலாதி ஆர்வத்துடன் சாப்பிடும் போது தடுத்து
”ஞாநி.. சுகரை கூடுதலா வைச்சுக்கிட்டு இப்படிச் சாப்பிடுறீங்களே?”- கேட்டபோது ” இன்சுலின் போட்டு சமாளிச்சுக்கலாம் ” என்றார் சிரிப்போடு.
குழந்தைத்தனமான ஆசை- அவரின் உடல்நிலையை மீறி!
விளைவாக- அவருடைய கிட்னி செயலிழந்த நிலையில் ஆறுதலாக அவருக்கு ஒரு நாளிதழில் ஆலோசகராகப் பணியாற்ற வாய்ப்பு வந்தபோது அவருக்கு தெம்பு கூடியதைப் போலிருந்தது.
டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நிலையிலும் தான் விரும்பியபடி எழுதிக் கொண்டிருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன் கருத்தைப் பேசிக் கொண்டிருந்தார். நண்பர்களிடம் சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.
கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வரிசையில் அவருடைய பெயர் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அவருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை பண்ணிவிடுவதான நம்பிக்கையுடன் இருந்தார்.
அதோடு வாழ்வின் இறுதி நாட்களிலும் மேதாபட்கரைச் சந்தித்திருக்கிறார். பா.ஜ.க –ரஜினி பற்றிய கருத்தைச் சொல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தான் விரும்பியவற்றை இறுதிவரை மனம் தளராத உற்சாகத்துடன் செய்த படியே இருந்திருக்கிறார்.
இன்னும் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்று நம்பிக்கை குலையாமல் செயல்பட்டவரின் வாழ்வில் எதிர்பாராத கணத்தைப் போல மரணம் குறுக்கே வந்து ஞாநியை அழைத்துச் சென்றுவிட்டது.
இறுதிவரை பேசிக் கொண்டிருந்த அந்த நேயம் மிக்க ஒலிநாடா அறுந்ததைப் போலிருக்கிறது. இருந்தாலும் எத்தனையோ பதிவுகளிலும், எழுத்துக்களிலும், அதை விட நம் நினைவுகளிலும் எதிரொலித்துக் கொண்டேஇருக்கும் ஞாநியின் அந்தக் கரகரப்பான குரல்!
*
– குமுதம் தீராநதி – பிப்ரவரி 2018 – இதழில் வெளியாகியிருக்கிற மணாவின் கட்டுரை.