இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6-ம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16-ம் தேதியன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததைத்தொடர்ந்து, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தனது டுவிட்டரில், “2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தை நடத்தத் தயாராக உள்ளோம். பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மிகவும் சிறப்பான மற்றும் வரலாற்றுப் போட்டியாக இருக்கும்.
ஏனெனில் இந்தியா தனது 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. “இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும்” என்று அதில் பதிவிட்டிருந்தது.