அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?

அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன.

பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான சூழலைத் துவக்கி வைத்தார்.

அதற்காக வருத்தம் தெரிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அப்புறம் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கு முன்பே அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஆளுக்காள் கையில் ஒரு வேட்பாளர் பட்டியலைக் கைவசம் வைத்திருந்தார்கள்.

குறைந்தது 20 சதவிகித இடங்களை பா.ஜ.க கேட்பதாகச் செய்திகள் பரவின. குறிப்பாக கோவை, திருப்பூர், கன்னியாகுமரி பகுதிகளில் பா.ஜ.க போட்டியிட விரும்பியது. அதற்கான பட்டியலையும் அ.தி.மு.க.விடம் ஒப்படைத்தது.

அ.தி.மு.க. சார்பில் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுக்குச் செல்வாக்கான தொகுதிகளை பா.ஜ.க கேட்கிறது என்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. விட்டுக் கொடுத்துப் போக இரு தரப்பிலும் தயாராகாத நிலை.

அதாவது மத்தியில் ஆளும்கட்சி என்கிற கோதாவை விட்டுக் கொடுத்த பா.ஜ.க விரும்பவில்லை. தமிழகத்தில் அதிக வாக்குச்சதவிகிதம் உள்ள கட்சிகளில் தாங்களும் இருக்கிறோம் என்கிற கோதாவை அ.தி.மு.க.வும் விட்டுக் கொடுக்கத்தயாராக இல்லை.

அதனால் தனித்துப் போட்டியிடுவதாகச் செய்தியாளர்களிடம் அறிவித்த அண்ணாமலை, இதனால் அ.தி.மு.க மீது தங்களுக்கு எந்த விமர்சனமும் இல்லை; அகில இந்திய ரீதியில் தங்கள் கூட்டணி தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதனால் தமிழகத்தில் பா.ஜ.க.வின் அசலான செல்வாக்கு எந்த அளவில் இருக்கிறது என்பது மீண்டும் அம்பலத்திற்கு வந்துவிடும்.

அண்ணாமலையின் செல்வாக்கும் நிரூபணமாகிவிடும். ஒரு விதத்தில் தன்னுடைய பலம் அல்லது பலவீனத்தை வெளிப்படுத்துகிற போட்டியில் இந்தத் தேர்தலில் இறங்கியிருக்கிறார் அண்ணாமலை!

பா.ம.க., தே.மு.தி.க. தற்போது பா.ஜ.க என்று ஒரு காலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் யாருக்கு லாபம் என்பதை சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்.

எல்லோரும் தி.மு.க. கூட்டணிக்கான வெற்றியைப் பரவலாக்கி உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே இப்போதைய யதார்த்தம்.

-யூகி

Comments (0)
Add Comment