– இயக்குநர் தங்கர்பச்சான் உருக்கம்
திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான தங்கர்பச்சான் சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பதிவில், “பெற்றோர்களே மகனை கொல்கின்றனர்.
பெற்ற மகளையே அனுபவிக்க தொந்தரவு செய்யும் கணவனை மனைவி கொல்கிறாள்.
கணவனை இழந்து தாலி அறுக்கப்பட்டு பெண்கள் குடும்பச்சுமையை தாங்க முடியாமல் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் கண்ணீரோடு நிற்கிறார்கள்.
தந்தையை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு பிள்ளைகள் பரிதவிக்கின்றனர்.
மகனை இழந்து, வருமானத்தை இழந்து, முதுமை அடைந்த பெற்றோர் ஆதரவின்றி அலைகின்றார்கள்.
வெறும் வருவாய்க்காக தம் மக்களையே குடிவெறிக்கு ஆட்படுத்தி ஆளப்படும் ஆட்சி குறித்து, இப்போதாகிலும் தயவுகூர்ந்து நம் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
குறிப்பிட்டுள்ள கொடுமைகளும் சீர்கேடுகளும் அவர்கள் குடும்பத்தில் நடந்தால் அதன் பாதிப்பும், அழிவும், அவமானமும் எவ்வளவு பெரிய பாதிப்பு என்பது புரியவரும்.
அதுவரை இவையெல்லாம் வெறும் செய்தி மட்டும்தான் என நினைக்கிறார்களா, புரியவில்லை.
பெரும்பாலான குற்றங்களுக்கும், நோய்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும் மதுக்கடைகளை மூலைக்கு மூலை திறந்துகொண்டே, தமிழக மக்களுக்காகவே உழைக்கிறோம், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றிக்காட்டுவோம் என இன்னொரு முறை தயவுசெய்து கூறாமல் இம்மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
-31.01.2022 12 : 30 P.M