-மணா
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தை உயிரைக் கொடுத்து காப்பாற்ற முடியுமா? நிஜமாகவே காப்பாற்றியிருக்கிறார்கள் மருதுபாண்டிய சகோதரர்கள்.
சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், அதற்கு நேர் எதிரே ஆத்தா ஊரணிக் கரையில் சின்னக் கோவில், அதில் தலைப்பாகையுடன் கை குவித்தபடி பெரிய மருதுவின் சிலை; கீழே அவரது சமாதி. தோற்றம் 1748, மறைவு 27.10.1801 என்கிற கறுப்புக் கல்வெட்டுக் குறிப்பு. பக்கத்தில் இன்னொரு சமாதி மேடு. அதைச் சின்ன மருதுவின் சமாதி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இருநூறு வருஷங்கள் கடந்த பிறகும் இப்போதும் எழுச்சியுடன் நினைவுகூரப்படுகிறது அவர்களது வீரமும், சொந்த மண் மீது அவர்கள் வைத்திருந்த பிரியமும்.
காளையார்கோவிலே பதட்டத்துடன் இருந்தது. ஊரின் நடுவில் இருந்த காளீஸ்வரர் கோபுரத்தின் மீது ஆங்கிலேயக் கொடி பறந்து கொண்டிருந்தது. கொடி பறந்தாலே கோபுரத்திற்கு ஆபத்து என்பது தான் ‘சிக்னல்.’
இங்கே திரும்பவும் அதே பாணி; அதே மாதிரி கொடி பறக்கிறது.
அக்னியு என்கிற ஆங்கிலேய அதிகாரிதான் ராணுவ கர்னல். 21 பீரங்கிகள், தளவாடங்களுடன் ஆங்கிலேயப் படை. எதிரே காளையார் கோவில் கோட்டையைச் சுற்றிப் போரிட ஆயத்தத்துடன் 75 ஆயிரம் பேர் கொண்ட மருது பாண்டியர்களின் படை.
“எந்தச் சமயத்திலும் அசுர பலத்துடன் தாக்கினால் பதிலுக்குக் கோபுரத்தைத் தகர்ப்போம்” என்கிற பிடிவாதத்துடன் ஆங்கிலேயப் படை.
போரா? கோபுரமா? கோவிலைக் காக்கத் தவறியவர்கள் என்கிற அவலமான பெயர் கிடைத்துவிடக் கூடாதே. பதினெட்டு அடி உயரத்துடன் கற்கோட்டையுடன் பலம் பொருந்திய காளையார்கோவிலை விட்டுத் தந்திரமாக வெளியேறினார்கள் மருது பாண்டியர். அவர்களது படையும் கலைந்தது. அதன்பிறகே தப்பியது கோபுரம். காட்டிற்குள் மறைந்தார்கள் மருது பாண்டியர்கள்.
“மருதுபாண்டியரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பத்தாயிரம் பகோடா அல்லது 4000 பவுண்டு ஸ்டெர்லிங் பணம் வழங்கப்படும்” என்று தண்டோரா போட்டிருந்தார்கள்.
துவங்கியது வேட்டை. பணத்தாசை காட்டியதும் மருதுபாண்டியரின் உடனிருந்தவர்களே காட்டிக்கொடுத்த பிறகு ஒவ்வொருவராய் தூக்கிலிடப்பட்டனர்.
வெற்றியூர்க் காட்டில் மறைந்திருந்தபோது சின்ன மருதுவைக் காட்டிக்கொடுத்தது உடனிருந்த ஒருவன். இதையடுத்து பெரிய மருதுவையும் பிடிக்கிறார்கள்.
நேரே திருப்பத்தூர் கோட்டைக்குக் கொண்டுபோய்ச் சிறை வைத்தார்கள். ஆங்கிலேயர் பரம எதிரியாகக் கருதிய சின்ன மருதுவுக்கு என்று தனிக் கூண்டு அமைத்து அதோடு தூக்கிலிடப்பட்டார்.
பெரிய மருதுவையும், அவரோடு 500 படையினரையும் திருப்பத்தூர் தெருவிலேயே தூக்கிலிட்டார்கள். மருதுபாண்டியரின் குடும்பமே தூக்கில் தொங்கிற்று.
போராளிகளின் தலைகள் கம்பங்களில் குத்தப்பட்டன. 1801 அக்டோபர் 24 அன்று ஒரே பிணக்குவியல். அதில் மருது பாண்டியரின் உடல்களைத் தேடியெடுத்துக் காளையார் கோவிலுக்கு மக்களே கொண்டுபோக மூன்று நாட்களாயிற்று.
மருதுபாண்டியர் மிகவும் நேசித்த கோவிலுக்கு எதிரேயே அவர்களைப் புதைத்தனர். சின்ன மருதுவின் உடலைக் கொண்டுபோவதைக்கூட ஆங்கிலேய அரசு விரும்பாததால் இப்போதும் கோவில் இல்லாமல் வெட்டவெளியில் இருக்கிறது சின்ன மருதுவின் சமாதி.
மருதுபாண்டியரால் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளையார் கோவில் ராஜகோபுரத்தின் உயரம் 155 1/2 அடி. ஒன்பது அடுக்குகள் கொண்ட கோபுரத்தின் உச்சிக்குப் போனால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். கோவிலில் கை குவித்தபடி மருதுபாண்டியரின் சிலைகள்.
எதிரே சொர்ண காளீஸ்வரர் சன்னிதியிலிருந்து பார்த்தால் கூப்பிடு தூரத்தில் தங்கள் மூச்சைக் கொடுத்து கோபுரத்தைக் காப்பாற்றிய அவர்களது சமாதிகள்.
அந்த சமாதிகள் தரையை ஒட்டியிருக்கலாம். ஆனாலும் கோபுரத்திற்கு இணையான உயரத்தில் இப்போதும் வழிபடப்படுகின்றது சிலிர்ப்பூட்டும் அவர்களது விசுவாசம்.
– அந்திமழை பதிப்பகம் வெளியிட்ட மணாவின் ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…