சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல நாடுகளுக்குப் போவதே அம்மக்களின் பிரதான ஆசையாகவும் இருந்து வருகிறது.
வெறுமனே மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது என்பதோடு நின்றுவிடாமல், மனதின் நீள அகலங்களை விசாலப்படுத்துகின்றன சுற்றுலா பயணங்கள்.
செல்வோம் ஓர் உலா..!
அதுவும் கூட, மிக இளம் வயதிலோ அல்லது முதுமையிலோ அப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாக பழங்கால கோட்டை கொத்தளங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றைப் பார்க்கும் பழக்கமும் இருந்தது.
ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வழக்கங்களைப் பிரதியெடுக்கும் வகையில், மலைப்பிரதேசங்களுக்கு ஆண்டுதோறும் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர்களும் உண்டு.
ஆனால், அதெல்லாம் பெரும்பான்மையானோரின் சராசரி வழக்கமாக கொள்ள முடியாது. நாளாக நாளாக சுற்றுலா குறித்த கண்ணோட்டமும் நம்மவர்கள் மத்தியில் மாறியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை, கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் முதல் மேற்குத்தொடர்ச்சி மலை எல்லை வரை எத்தனையோ சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இந்து, முஸ்லிம், கிறித்தவ மதங்கள் தொடர்பான இடங்கள், மலைவாசஸ்தலங்கள், நீர்நிலைப் பகுதிகள், அரிய கலாச்சார நிகழ்வுகள், வினோதமான விஷயங்கள் என்று ஆண்டு முழுக்கச் சுற்றினாலும் தமிழ்நாட்டின் பரப்பில் சிறு பங்கைக் கூட நம்மால் கடந்துவிட முடியாது.
ஏனென்றால், சுற்றுலா செல்வதென்று முடிவாகிவிட்டால் அதுவரை நாம் கண்டறியாத எல்லாமே காணத்தக்கதாகத்தான் தெரியும்.
ஒரு காலத்தில் மன்னர்களும் அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களும் மட்டுமே ‘உலா’ செல்வது வழக்கம்.
மக்களாட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றானபிறகு, ஒவ்வொருவரின் சுற்றுலாவும் வரலாற்றுச் சுவடுகளாகவே கருதப்பட வேண்டும். எழுத்து ரீதியாகவும், காட்சிரீதியாகவும் அவை பதிவு செய்யப்பட வேண்டும்.
வாசலுக்கு வெளியே..!
ஆண்டுக்கு இரண்டு மூன்று முறையாவது சுற்றுலா சென்றுவிட வேண்டுமென்று துடிப்போர் எண்ணிக்கை இன்று மிக அதிகம். வீட்டின் வாசலுக்கு வெளியே விரியும் உலகத்தைப் பார்க்கும்போது உருவாகும் உத்வேகம் மீத நாட்களின் மீது உற்சாகத்தை நிரப்புகிறது.
விதவிதமான இடங்கள், அங்கிருக்கும் மனிதர்கள், அந்த தருணங்கள் புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகச் சொல்கின்றனர் மனநல நிபுணர்கள்.
பதின்ம வயதுகளில் புதிய இடங்கள், புதிய மனிதர்களைச் சந்திப்பதும், புதிய சூழல்களுக்குத் தயார்படுத்திக்கொள்வதும் எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள உதவும் என்கின்றனர்.
இதனை உணர்ந்து, வெகு சிலர் தங்களது பிள்ளைகளை ஊர் சுற்ற அனுமதிக்கின்றனர்.
குறிப்பாக, பள்ளி இறுதியாண்டு தேர்வு அல்லது கல்லூரி இறுதியாண்டில் சுற்றுலா செல்லும் வழக்கம் இன்று அதிகமாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு செல்லும் சுற்றுலாவை இக்கணக்கில் சேர்க்க முடியாது.
இம்மாதிரியான பயணங்களில் அந்த கட்டுப்பாடுகள் இருக்காது. அவரவர்க்கான ‘லகான்’ அவரவர் கைகளில் இருக்குமென்பது ஒருவகை சவால்தான்.
‘மச்சான் கோவா ட்ரிப் போலாமா’ என்ற வார்த்தைகளை இப்படிப்பட்ட சுற்றுலாக்களுக்கு முன்பாக கேட்க முடியும். தொலைதூர மாநிலங்களில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களுக்கு விதவிதமாகப் பயணிப்பதில் ஆர்வம் காட்டுவதையும் காண முடியும்.
வெகு சிலர் யாரும் சென்றுவராத இடங்களாகத் தேடிப் பிடித்து, வழக்கமான சுற்றுலாத்தலங்களில் கிடைப்பதில் இருந்து வேறுபட்ட அனுபவங்களைப் பெற விரும்புவதும் உண்டு.
நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை இப்படித் தனியாகவோ அல்லது தோழமையுடன் சேர்ந்தோ பயணிப்பது இன்னும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனாலும், மாறிவரும் காலம் அதனைச் சாத்தியப்படுத்தி வருகிறது மெதுவாக..
சுற்றுலாவைக் கொண்டாடுவோம்..!
உலகளவில் பல நாடுகள் சுற்றுலாவினால் வருமானத்தைக் கொழித்தாலும், இந்தியாவிலும் சுற்றுலா அபரிமிதமான அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாகவே திகழ்கிறது.
’வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தாரக மந்திரத்துடன் இந்தியாவில் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் வேறுபட்ட கலாசார, பண்பாட்டு பின்னணியும் இதற்கொரு காரணம்.
அது மட்டுமல்லாமல், இன்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டுவரும் மக்கள் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒரு அதிசயமாகவே காட்சியளிக்கின்றனர்.
உலகளவில் செப்டம்பர் 27 அன்று ‘சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஜனவரி 25 அன்று ‘தேசிய சுற்றுலா தினம்’ அனுசரிக்கப்படுகிறது. சுற்றுலாவினால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், அத்துறையில் உள்ள பொருளாதார அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு இந்நாளில் பரப்பப்படுகிறது.
‘கிராமப்புற மற்றும் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலா’ என்ற தலைப்பு இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கேற்ற நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.
அதோடு, 75ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
கோவிட்-19 காரணமாக முடக்கத்திற்கு உள்ளானவற்றில் சுற்றுலாத் துறையும் ஒன்று. பெருகும் நோய்த்தொற்று நிரந்தரமில்லை என்றாலும், மீண்டும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை எட்டுவது சாதாரண விஷயமில்லை.
அதோடு, ‘புதிய இயல்பு’ எனும் கட்டுக்குள் சுற்றுலாத் துறை வர சில நாட்களாகும். அதுவரை சுற்றுலா செல்லும் எண்ணத்தை மங்கச் செய்யாதிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாவற்றுக்கும் மொபைலையும் கம்ப்யூட்டரையும் சார்ந்திருக்கும் சூழல் பெருகிவிட்டது. மனிதர்களின் அருகாமையை விரும்பாத மனநிலையோடு, வெறுமனே மெய்நிகர் முறையில் இந்த உலகோடு உறவாடத் தயாராகி வருகிறது அடுத்த தலைமுறை.
தற்போதைய நோய்த்தொற்று சூழல் அப்படியொரு சுழலுக்குள் உலகம் மொத்தத்தையும் சிக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில், ஒரு மனிதரின் மனமும் உடலும் ஆரோக்கியமாக இயங்குவதற்கான, தொடர்வதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்தாக வேண்டும்.
அந்த வகையில், சுற்றுலா செல்வதும் சென்ற நினைவுகளை அசைபோடுவதும் மீண்டுமொரு சுற்றுலாவுக்குத் தயாராவதும் மட்டுமே ‘புதிய இயல்பில்’ நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்!
– உதய் பாடகலிங்கம்