பயமும் பதற்றமும் ஒன்றுசேரும் எதிர்காலமே இல்லாத சூழல் உருவாகலாம்; அதுவே கடந்த காலத் தவறுகளையும் புரிதலின்மையையும் சரி செய்யக்கூடும் என்று சொல்கிறது மலையாளத் திரைப்படமான ‘பூத காலம்’.
நமது அன்புக்குரியவர்களே நம்மை நம்பாமல்போனால் என்னவாகும் என்ற கேள்வியே கதையின் மையம். பார்வையாளர்களுக்கு அவ்வுணர்வை ஊட்டும் வகையில் பரந்திருக்கிறது இதன் திரைக்கதை.
ரேவதி, ஷான் நிகம், ஷைஜு குரூப், ஜேம்ஸ் எலியா, ஆதிரா படேல், மஞ்சு பத்ரோஸ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பூத காலம்’ சோனி லைவ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
அமானுஷ்யமான வீடு!
பார்மசி படித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞன் வினு (ஷான் நிகம்), தாய் ஆஷா (ரேவதி) மற்றும் பாட்டியுடன் ஒரு வீட்டில் வாழ்கிறான். அவர்கள் அவ்வீட்டிற்கு குடிவந்து சில மாதங்களே ஆகிறது.
கணவரை இழந்து வாடும் ஆஷாவுக்குப் படுக்கையில் கிடக்கும் தாயும் தன் மகனும் மட்டுமே ஒரே ஆறுதல். தாய் பேச முடியாமல் திணற, மகனோ முகம் கொடுத்து பேசாத மனநிலையோடு இருக்கிறான். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகள் சாப்பிடும் நிலைக்கு ஆளாகிறார் ஆஷா.
ஒருநாள் பாட்டி இறந்துபோக, அதன்பின்னர் தொடர்ச்சியாக பாட்டியின் ஆன்மா வீட்டில் நடமாடுவதாக உணர்கிறான் வினு. பல்வேறு அமானுஷ்யமான சத்தங்களைக் கேட்கிறான். இதன் தொடர்ச்சியாக, பாட்டியின் அறைக்குள் திடீரென்று அடைபட அதிர்ந்து போகிறான்.
அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருக்கிறது என்று வினு சொல்வதை ஆஷா கேட்கத் தயாராக இல்லை. வினுவின் காதலி பிரியாவும் (ஆதிரா படேல்) நம்பத் தயாராக இல்லை.
இந்தச் சூழலில் வினுவுக்கு மனநல ஆலோசனை வழங்க வருகிறார் மருத்துவர் ஜேம்ஸ் (ஷைஜு குரூப்). அவரது வரவுக்குப் பின்னரே, அந்த வீட்டில் ஏற்கனவே வசித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரிய வருகிறது.
அதன்பிறகு ஆஷாவும் வினுவும் என்னவானார்கள் என்பதைச் சொல்கிறது ‘பூத காலம்’. பேய் பூதத்தைவிட புரிதல் இல்லா குடும்ப உறவுகள் எத்தனை கொடூரமானது என்பதைப் பற்றியும் பேசுகிறது.
அயர்ச்சியூட்டும் நகர்வு!
‘ஸ்லோ பாய்ஷன்’ போல மிகச்சன்னமாக கதை விரிய வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாலும், பார்க்கும் நாம் தான் ரொம்பவும் சோதனைக்கு ஆளாகிறோம்.
வினுவின் செய்கைகள் மனநல பாதிப்புக்குள்ளானவராக எண்ண வைப்பது நல்ல தொடக்கத்தைத் தருகிறது. அதனைத் தொடர்ந்து, பாட்டியே ஆன்மாவாக உலவுவதாக வினு எண்ணும் வரை கூட ஓகே!
அதற்குப் பின்னரும் உண்மையைப் படீரென்று உடைக்காமல், தாய்க்கும் மகனுக்குமான புரிதலின்மையைச் சுற்றியே திரைக்கதை நகர்வதால் ஒருகட்டத்தில் சலிப்பு உருவாகிறது.
ஆஷாவாக நடித்த ரேவதியும் வினுவாக நடித்த ஷான் நிகமும் இறுக்கமான முகத்துடன் வந்தாலும், கிளைமேக்ஸில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுமிடம் அருமை.
யாரும் தராத ஆறுதலை ஒரு தாய் மட்டுமே மகனுக்குத் தர முடியும் என்றான நிலையில், தனது அத்தனை கால வேதனையையும் மகிழ்ச்சியாக ரேவதி வெளிப்படுத்தும் இடத்திற்காகவே இந்த மெலடிரோமாவை பார்க்கலாம்.
மன அமைதியில்லாமல் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தங்கள் உடல்மொழியாலும் முகபாவனையாலும் இருவரும் உணர்த்தியிருப்பது திரைக்கதைக்குப் பலம்.
ஷைஜு குரூப், மஞ்சு பத்ரோஸ் உட்பட ஒரு டஜன் பாத்திரங்களே படம் முழுக்க வருகின்றன.
குறைவான விஎஃப்எக்ஸ்!
அதிகளவில் விஷுவல் எபெக்ட்ஸ் பயன்படுத்தப்படாதது பட்ஜெட் குறையை உணர்த்தினாலும், காட்சியமைப்புகள் அனைத்தும் சீராகத் தோற்றமளிக்கின்றன.
புதிர் போடும் கோபி சுந்தரின் டைட்டில் இசையும் பின்னணி இசையும் மிக மெதுவாக நம்முள் பயத்தைப் பரப்புகிறது. அதற்காக, திடுக்கிட வைக்கும் சத்தங்களை கோர்க்கவில்லை.
நாயகன் ஷான் நிகம் இசையமைத்த ‘ரா தாரமே’ பாடல் இளைய தலைமுறையால் தொடர்ந்து கொண்டாடப்படும் மெலடி மெட்டு. ஆனால், கார்த்திக் இசையில் ‘நவரசா’வில் வந்த ‘தூரிகா’வையும் ‘அதிருதா’வையும் நினைவூட்டுகிறது.
ஷபீக் முகமது அலியின் படத்தொகுப்பு மிக எளிமையானதொரு வாழ்வில் நிரம்பியிருக்கும் அமானுஷ்யத்தை நமக்கு கடத்துகிறது. இறுதிக்காட்சிகளில் வேகம் கூட்டியிருப்பது அருமையான உத்தி.
ஸ்ரீகுமார் ஸ்ரேயாஸ் உடன் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.
முள்ளால் முள்ளை எடுப்பது போல, யதார்த்த வாழ்வில் புரிதலின்மையால் அவதிப்படும் தாய் – மகன் இடையே ஒரு அமானுஷ்யம் மாற்றத்தை தோற்றுவிக்கும் கதையைக் கையிலெடுத்திருக்கிறார்.
கலைப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் வேகம் வேண்டுமென்று மெனக்கெடும் இந்நாட்களில், ஒரு ஹாரர் படத்திற்கு இப்படியொரு திரைக்கதையமைப்பைத் தந்திருப்பது மகா சோதனை.
அது ஒரு உத்தி என்றாலும், ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் ஒரு படம் மூன்று மணி நேரம் பார்த்த அலுப்பு தருகிறது.
மற்றபடி, ஹாரர் என்ற பெயரில் காமெடி பேய்களை காட்டுவதை விட, சைக்காலஜிகலாக பீதியூட்டும் படங்களை வேண்டுபவர்களுக்கு ‘பூத காலம்’ நல்ல சாய்ஸ்!
– உதய் பாடகலிங்கம்
26.01.2022 12 : 30 P.M