வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!

புதிய பாடல் ஆல்பம் ‘ஓடாதே ஒளியாதே’

இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா.  சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் ‘ஓடாதே ஒளியாதே’ இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

எதைக் கண்டும் ஓடாதீர்கள், எதற்காகவும் ஒளிந்துகொள்ளாதீர்கள் என்ற பொருளில் அந்தப் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

கிருஷ்ணாவின் அசல் இசை சமூகவலைத்தளங்களில் 20 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.

திரைப்பட இசையிலும் அவருடைய பங்களிப்பு தொடர்கிறது. ஜிப்ரான், பாம்பே ஜெயஸ்ரீ, பிந்து மாலினி, பிரதீப் குமார், கிரிஷ் உள்பட பல பாடகர்கள், பல இசை அமைப்பாளர்களின் பாடல் பதிவில் பங்கேற்றுள்ளார்.

பாடல் ஆல்பம் பற்றி எம்.எஸ். கிருஷ்ணாவிடம் பேசியபோது, “நான் இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா மாதவன் கோபால ரத்னம், கர்நாடக இசைக்கலைஞர். நான் சொந்த முயற்சியில் கிதார் கற்றுக்கொண்டேன்.

பிறகு மூத்த கலைஞர்களிடமும் முறையான பயிற்சிகளைப் பெற்றேன்.

இன்ஸ்டாகிராமில் இன் ரீல் லைப் என்ற சீரிஸ் தொடங்கினேன். அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களைக் கற்பனை கலந்து பாடல்களாக எழுதி வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு. இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் என் இசைப் பாடல்களை ரசித்துள்ளனர்.

எங்க பாட்டி இதுவரை எத்தனை தோசை சுட்டிருப்பார்கள், அதைப் பற்றியும், ஆட்டோ அனுபவம், தேநீர்க்கடை எனப் பல சிறிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிப் பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டேன்.

இப்போது நான் ‘ஓடாதே ஒளியாதே’ என்ற பாடலை வெளியிடவுள்ளேன்.

அதாவது, நமக்கு வாழ்க்கை கொடுக்கிற நல்ல விஷயங்களை விட்டு ஓடக்கூடாது ஒளியக்கூடாது என்ற பாடலில் சொல்ல விழைந்திருக்கிறேன்.

நம்முடைய சக்தியை எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இதைக் கேட்பவர்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று உற்சாகம் பொங்கக் குறிப்பிட்டார்.

இசைக்கலைஞர் கிருஷ்ணாவின் 23வது பிறந்த நாளான ஜனவரி 28 ஆம் தேதியன்று ’ஓடாதே ஒளியாதே’ என்ற பாடலை வெளியிடவுள்ளார்.

https://www.instagram.com/mskrsnamusic/

-பா.மகிழ்மதி

24.01.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment