சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் அரசு குழந்தை பாதுகாப்பு மையங்களுடன் இணைந்து குழந்தை திருமணங்கள், பாலியல் வன்முறையை ஒழிக்க உறுதி ஏற்போம்.
குழந்தை திருமணம் அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப வருமானத்திற்காக சிறுவர், சிறுமிகளை தங்களுடன் வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மைனர் பெண்களுக்கு கிராமப்புறங்களில் திருமணங்கள் அதிகமாக நடக்கிறது.
பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். 2021ல் ஊரடங்கு காலக்கட்டத்தில் 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு புகார்கள் குவிந்தன.
2021ம் ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை 1098 சைல்டு லைன் அமைப்பினர் காவல் துறையினர், சமூகநலத்துறை அதிகாரிகள் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர். 13 முதல் 15 வயது பெண்களை திருமண ஆசைக்காட்டி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கூடுதல் விழிப்புணர்வு அவசியம்
கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெண் குழந்தைகள் பருவமான பிறகு பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.
இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர்.
மைனர் பெண் திருமணங்களை தடுக்க கிராமப்புறங்களில் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
”நிமிர்ந்து நில், துணிந்து செல்”
ராமநாதபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு துறை, பாதுகாப்பு அலுவலர் சி.சித்ராதேவி கூறியதாவது:
2021 ஊரடங்கு காலக்கட்டத்தில் பள்ளி செல்லா பெண் குழந்தைகள் உறவினர்கள், பக்கத்து வீட்டார் தொந்தரவு குறித்து புகார் அதிகரித்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, நலக்குழுவினர், பெண் குழந்தை திருமணம்,பாலியல் தொந்தரவை தடுக்க போலீசில் மனித கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தலைமையில் உள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் ரயில் நிலையத்தில் குழந்தை பாதுகாப்பு, உதவி மையம் செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்டிலும் உள்ளது.
தொழிலாளர் துறை உதவியுடன் 14 வயதிற்குள் பணிபுரிவர்களை கண்டறிந்து அவர்களை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கிறோம்.
மாவட்டத்தில் அரசு, தொண்டு நிறுவனங்களுடன்இணைந்து 19 இல்லங்கள் உள்ளன. இங்கு பெற்றோரை இழந்த, பாதுகாப்பற்ற பெண்களுக்கு உயர் கல்வி வரை உதவுகிறோம்.
சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழுவுடன் இணைந்து கிராமங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடத்துகிறோம்.
”நிமிர்ந்துநில், துணிந்துசெல்” என்ற வாசகம் அடங்கிய முத்திரை மாணவிகள் பாடப் புத்தகங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கொரோனா பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 157 குழந்தைகளில் 103 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கியுள்ளோம்.
குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளான குழந்தை திருமணங்கள், பாலியல் ரீதியிலான வன்கொடுமை, காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், குழந்தை தொழிலாளர்களை மீட்டல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெற்றோர் பெண்குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தி அன்புகாட்டி, நல்லது, கெட்டவிஷயங்களை சொல்லி வளர்க்க வேண்டும்” என்றார்.
– நன்றி: தினமலர்