விடுதலையை மூச்சாக நேசித்த வ.உ.சி!

கோவை மத்தியச் சிறை வளாகம்.

உள்ளே நுழைந்து சிறையின் இரண்டாவது வாசல் அருகே அந்தத் தொன்மையான சின்னம்.

கனத்து நீண்ட மரம். அதையொட்டி ஒரு ஆளுயர ஆட்டுக்கல். உள்ளே பலமான மரக்குழவி. அசைப்பதற்கு பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டிய அந்த எண்ணெய்ச் செக்கு – ஒரு காலத்தில் சிறையில் நிலவிய கசக்கிப் பிழிகிற உழைப்பிற்கு ஒரு சாட்சி.

கப்பலோட்டிய வ.உ.சி. இரண்டு வருஷங்கள் (1908 – 1910) கோவைச் சிறையில் இருந்தபோது இழுத்த செக்கு என்கிற குறிப்போடு கம்பி போட்ட சிறு நினைவு மண்டபம்; மேலே சின்னதாக வ.உ.சி.யின் படம்.

எவ்வளவோ எதிர்ப்புகள்; தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சதி கலந்த குறுக்கீடுகள்; அத்தனையும் மீறி 1906-ல் பத்து லட்சம் ரூபாய் முதலீட்டுடன் 36 டைரக்டர்களுடன் சுதேசிக் கப்பல் ஓடியது தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில்.

அதிலிருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார் வ.உ.சிதம்பரம். வேகம் குறையவில்லை. வெளிநாட்டுப் பொருட்களை நிராகரிக்கச் சொன்னார்.

சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து பொதுக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார்.

வியர்த்துவிட்டது வெள்ளை அரசுக்கு.

‘பயங்கரமானவர்களாக’ ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1908 மார்ச்சில் வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டபோது திருநெல்வேலியில் பெரும் கலவரம்.

துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தார்கள். ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் கைது பண்ணியதை வினோதக் கூத்து என்று ‘இந்தியா’ பத்திரிகையில் எழுதினார் பாரதி.

வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை. நேரே பாளையங்கோட்டைச் சிறை. போனதும் வ.உ.சி.யின் தலை மழிக்கப்பட்டது. கெட்டித் துணியில் கால்சட்டை; செந்நிறத்தில் தொப்பியுடன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார்.

அங்கிருந்து கோவை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டதும் இன்னும் பல கொடுமைகள். தேசியப் போராட்டத்திற்காகக் கைதான தலைவர்கள் நடத்தப்பட்ட விதம் மற்ற கைதிகளிடம் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

சிறைக்குள் கலவரம் மூண்டது. துப்பாக்கிச் சூடு நடந்து ஒருவர் இறந்தார். விசாரணையின்போது வ.உ.சி. சொன்னார், “சிறையில் கைதிகளைப் படுமோசமாக நடத்துகிறார்கள். மனிதக் கழிவைக்கூடச் சாப்பிடச் சொல்கிறார்கள். சாப்பிடும் உணவில் எல்லாம் கற்கள் கிடக்கின்றன.”

சிறைச்சாலையின் தீவிரம் தாங்காமல் “என்னை அந்தமான் தீவுக்கே அனுப்பி விடுங்கள்” என்று மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார் அவர்.

இருந்தும் கொடுமை தணியவில்லை.

சிறைக்குள்ளேயே இருந்த எண்ணெய்ச் செக்கில் மாட்டிற்கு பதிலாக வ.உ.சி.யை நிறுத்தி இழுக்கச் சொன்னார்கள். இழுத்தார். தோல் உரிந்து போனது. மற்ற கைதிகள் அதைச் செய்வதாகச் சொல்லியும் அனுமதியில்லை.

“செக்கு இழுக்க வைத்த இரக்கமற்ற தன்மைகளை எழுதுவதற்கும் நம் கை கூசுகிறது.” வலியோடு இது குறித்து எழுதினார் பாரதி.

மேல்முறையீடு செய்த பிறகு செக்கிழுக்கும் வேலையை நிறுத்தி ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலை கொடுத்தார்கள். அதற்குள் சிறைக் கொடுமை தாளாமல் தற்கொலைக்கு முயற்சித்தார் வ.உ.சி.யுடன் சிறையில் இருந்த சுரேந்திரநாத் ஆர்யா.

அந்தச் சமயத்தில் ஆஷ்துரை மணியாச்சியில் கொல்லப்பட்டதில் வ.உ.சி.யைச் சந்தேகித்துச் சிறையில் விசாரணை நடந்தது.

கண்ணனூர் சிறைக்குப் பிறகு மாற்றப்பட்டு ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிய நேரத்தில் 1912 டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் அவரை வரவேற்றவர் சுப்பிரமணிய சிவா மட்டும்தான்.

சொந்த ஊர் போக அரசு அனுமதிக்கவில்லை. சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையிலும், பெரம்பூரிலும் மளிகை வியாபாரம் செய்தார். கோவையில் சிறிது காலம் தனியார் வங்கியில் வேலை பார்த்தார்.

பிறகு வழக்கறிஞராகி சொந்த ஊருக்குப் போயும் போதிய வருமானமில்லை. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் இதைக் கேள்விப்பட்டு காந்தி மூலமாக ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்தனுப்பினார்கள்.

கப்பல் விடுமளவுக்கு வளமாக இருந்த வ.உ.சி காலப்போக்கில் தனது மகனுக்கு போலீஸில் ஏதாவது வேலை வாங்கித்தருமாறு பெரியாருக்குக் கடிதம் எழுதினார். பெரியாரும் தனது அரசியல் குரு என்று குறிப்பிட்டிருப்பது வ.உ.சி.யைத்தான்.

1938 நவம்பரில் வ. உ.சி. இறந்தபோது அவர் குடியிருந்த வீட்டுக்கு ஐந்து மாத வாடகை பாக்கி (ஆதாரம்: வ.உ.சி.யின் உயில், செ.திவான்).

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. வசித்த வீடு செப்பனிடப்பட்டு 1961-ல் நூலகமாகியிருக்கிறது.

கக்கன் தலைமையில் காமராஜர் திறந்து வைத்த வீட்டில் வ.உ.சி. கோட் சகிதமாகப் பெருமிதத்துடன் உட்கார்ந்திருக்கிற படம்;

இன்னொரு புறம் அவர் இறந்த அன்று ஒல்லியான தேகத்துடன் சுற்றிலும் கூட்டம் மொய்த்திருக்க வ.உ.சி. உயிர் வடிந்த தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம்.

சிறையில் அத்தனை கஷ்டங்களுக்கிடையில் வ.உ.சி. மொழி பெயர்த்த புத்தகம் ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’

இறக்கும்வரை சுதந்திரத்தை நேசித்த அவருக்குக் கிடைத்ததா அந்த மனம் போல் வாழ்க்கை?

– அந்திமழை வெளியீடாக வந்திருக்கும் மணாவின் ‘தமிழத் தடங்கள்’ நூலிலிருந்து.

Comments (0)
Add Comment