வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான மிக எளிதான குறிப்பு,
“உங்களுக்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள்” – அவ்வளவுதான்.
எல்லாமே நமக்கு தெரியும். அதான் தெரியுமே! என்ற மனநிலையில், எதைப் பற்றியும், நாம் ஆழமாக யோசிப்பதில்லை. அதற்கான திட்டங்களில் அக்கறை காட்டுவதுமில்லை.
நிறையப் பேருக்கு ‘நமக்கு என்ன தேவை?’ என்பதே தெரிவதில்லை,
யோசித்துப் பாருங்களேன். இன்றைக்கு தோராயமாக உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். 60 வயதில் நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்…?
அப்போது என்ன தேவை…? அந்த வயதில் என்னென்ன வசதிகள் வேண்டும்…? சமூகத்தில் எந்த நிலையில் இருக்க விரும்புகிறீர்கள்…? உங்கள் தொழிலில் எந்த உயரத்தில் இருக்க விரும்புகிறீர்கள்..?
இவை பற்றியெல்லாம் யோசித்து, திட்டமிட்டது உண்டா..?
திட்டமிடாத பணிகளை எப்போதுமே செயல்படுத்த முடியாது. எதற்குமே ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். காலை டிஃபனில் ஆரம்பித்து வாழ்க்கையின் எல்லை வரை பிளான் ரொம்ப முக்கியம்”
ஒரு வீடு கட்ட வேண்டும் என்று யோசிப்பது ஒரு திட்டம். அதற்கான பணம் புரட்டுவது அதற்கு அடுத்தகட்டம்.
வாங்கும் கடனை எப்படி அடைக்க முடியும் என்று விவாதிப்பதும், முதல் வழி முடியாமல் போனால், இரண்டாம் வழி என்ன… சிக்கலின்றி கடனைக் கட்டி நிம்மதியாக இருக்க மாற்று யோசனை என்ன..? என்றெல்லாம் சிந்தித்து அதனைச் செயல்படுத்துகிறோம்.
அதைச் செயல்படுத்த மனிதர்களை நியமிப்பார். நமக்கு வேலை வைக்காமல் நம் இடத்தில் இருந்து சிந்தித்துச் செயல்படுபவராக நியமித்து விட்டால், நமது வேலையில் பாதி முடிந்து விடும்.
மின்சார இணைப்பு, கழிவுநீர், குடிநீர் இணைப்புக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..? பெயின்ட்டர் யார்..? நம் வீடு என்ன கலரில் இருக்க வேண்டும்…? கிரஹப் பிரவேசத்துக்கு யார் யாரையெல்லாம் அழைக்க வேண்டும்..? வீட்டுக்கு என்ன பெயர்.? இதையெல்லாம் பலரிடம் பேசித் தீர்மானிக்க வேண்டும்.
இப்படி ஒரு வீட்டுக்குப் பின்னாலேயே இத்தனை திட்டங்கள் இருக்கிறது என்றால், நம் வாழ்க்கைக்குப் பின்னால் எத்தனை பெரிய திட்டங்கள் இருக்க வேண்டும்.
ஏனோதானென்று வாழ்ந்துவிட்டு போவதா? அக்கம்பக்கத்துக்கு உழைக்காவிட்டாலும், அட்லீஸ்ட் நம் சந்ததி, நம்மை நம்பி இருப்போருக்காவது திட்டங்கள் தேவை தானே!
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே திறமையானவன்தான். நிறைய விஷயங்களில் நமக்கு திறமை இருந்தும் நம்மால் அதை நோக்கிப் போகவும், வெற்றி பெறவும் முடியாமல் போகக் காரணம் திட்டமிடலின்மைதான்.
ஆனாலும், சிலர் இதை உணராமல், போகிற போக்கில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால், அதை யோசிப்பதிலேயே இவர்களுக்கு தயக்கம் இருக்கிறது. ஊருக்கு உபதேசம் பண்ண நேரம் ஒதுக்கும் இவர்கள், தங்களுக்காக நேரம் ஒதுக்குவதே இல்லை.
ஓய்வுக் காலம் பற்றி யோசித்தால், அந்த இலக்கை அடைவதற்காக மெனக்கெட வேண்டும். இப்போது இருக்கும் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டு, எதிர்காலத்துக்காக ஏன் உழைக்க வேண்டும்..? என்ற சோம்பேறித்தனமும் கூட இதற்குக் காரணம்.
ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓடுகிற வயதில் உட்கார்ந்து கொண்டிருந்தால், உட்கார வேண்டிய வயதில் ஒட வேண்டி இருக்கும்.
இருக்கிற வேலையை உருப்படியாகச் செய்து நிம்மதியாக இருப்போம் என்ற எண்ணம், வளர்ச்சியைத் தராது. ‘இன்றைக்குச் சம்பளம் ஒழுங்காக வருகிறதா அது போதும் சார். போகப் போக பார்த்துக்குவோம்.
இந்த வாழ்க்கை நாம கேட்டா கிடைச்சது..? எல்லாம் தானே வரும் சார், நம்ம எதிர்காலமும் சூப்பரா இருக்கும் சார்…’ என்று தோன்றுகிறதா..? வாழ்க்கை, வளத்தைத் தானே தராது. அது ஒரு வழிகாட்டி.
நம்பிக்கையோடு செயல்படும்போது கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் நமது கையில்தான் இருக்கிறது.
வாழ்க்கை மேல் பாரத்தைப் போடுவதன் மூலம் நீங்கள், உங்கள் வயதைக் கடத்துகிறீர்கள் என்பதே பொருள்.
30 வயதில் கிளார்க்காக இருக்கிறீர்கள் என்றால், 60 வயதில் ஒரு நிறுவனத்தில் சி.இ.ஒ., சி.எஃப்.ஒ., ஜி.எம்.மாக இருக்க வேண்டுமா… இல்லையா? அல்லது, கற்றுக் கொண்டதை வைத்து, ஒரு தொழில் தொடங்கி பலருக்கு வேலை தரும் முதலாளியாக மாறி இருக்க வேண்டுமில்லையா..? ஏதாவது முன்னேற்றம் இருக்க வேண்டும்.
50 வருடமாக சர்வராகவே வேலை பார்த்தேன்… என்று பெருமைப்பட்டால், இந்த சமூகம் உங்களை வேஸ்ட் என்று பார்க்கும். ஒரே நிலையில் இருந்தால், எப்படி குடும்பம் முன்னேறும்… உங்கள் மரியாதை அதிகரிக்கும்..?
அன்றைக்கு வாங்கிய அதே ஆயிரத்து ஐநூறு ரூபாய், இன்று பணவிக்கத்தால், ரூ.15000 ஆகி இருக்கும். அந்த சம்பாத்தியம் எப்படி உங்களுக்கான வசதியான வாழ்க்கையைத் தரும்..?
ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டீர்களானால், வெற்றி பெறுவதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும். தெளிவு இல்லையென்றால், பிறரது வளர்ச்சிக்காக கை தட்டிக் கொண்டே இருப்போம்.
அடுத்தவருக்கு பயன்பட்டுக் கொண்டே இருப்போம். நமக்குப் பலன் ஒன்றும் இருக்காது. நமக்கு கனவு இல்லையென்றால், நாம் அடுத்தவர்கனவை நனவாக்க உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உங்கள் கனவுக்கு உழைக்க ஆளைத் தேடுங்கள்.
சினிமாவுக்குப் போகிறோம். டி.வி-யில் சீரியல் பார்க்கிறோம். இதைத் தவிர கிரிக்கெட், ஃபுட்பால்… எல்லாமே பார்க்கிறோம். கை தட்டுகிறோம். நீங்கள் யாருக்காக கை தட்டுகிறீர்களோ, அவர் சம்பாதிக்கிறார்.
நீங்கள் கை தட்ட தட்ட அவரது பேங்க் பேலன்ஸ் உயர்ந்து கொண்டே போகிறது. விராட் கோலியின் வங்கி இருப்பு ரூ.750 கோடியாம். அவரை 20 நிறுவனங்கள் தங்களது விளம்பரத் தூதராக்கி உள்ளன. காரணம் எல்லாம் உங்கள் கைதட்டல் தான்.
உங்களது 50ஆவது வயதில், பையனின் உயர் படிப்புக்குப் பணம் தேவைப்படும்… பெண்ணின் கல்யாணத்திற்கு பணம் தேவைப்படும்… கடன் வாங்க வேண்டியிருக்கும்.
அப்போது, ‘அடடா… பணத்தை சம்பாதிக்காமல், சேர்த்து வைக்காமல், இப்படி வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே! என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும், அப்போது புதிய யோசனைகளும் திட்டங்களும்கூட வரலாம்.
ஆனால், அவற்றை எல்லாம் செயல்படுத்த உடல் வலிமையும், வாய்ப்புகளும் இருக்காது.
தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் 50 வயதிற்கு மேல் நம்மால் ஓட முடியாது, உத்தரவாதம் இல்லாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தூய்மை இல்லாத தண்ணீர், காற்று, உணவு என்ற மாசுள்ள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதனால் மூட்டு வலி, சர்க்கரை வியாதி எனப் பல பிரச்சினைகள் 50 வயதிலேயே வந்து விடுகின்றன. அதற்குள்ளாக உங்கள் தேவை என்ன என்பதைத் தெரிந்து அதை நோக்கி, ஓட வேண்டும்.
முன்னேற வேண்டும் என்று ஆர்வம் காட்டினால், ‘கை தட்டுகிற வேலை’ தானே குறைந்து விடும். ‘எனக்கு நிறைய வேலை இருக்குப்பா… இதற்கெல்லாம் நேரம் கிடையாது!’ என்று கூறி, வெட்டி அரட்டைகள், வீண் பாராட்டு விழாக்களில் இருந்து விலகி விடுவீர்கள்.
ஆரம்பத்தில் சொன்னதுபோல, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முதலில் எங்கே போக வேண்டும் என்பதற்கான தெளிவு வேண்டும். பிறகு தெளிவாகத் திட்டமிட்டு அதை நோக்கி உழைக்க வேண்டும்.
திட்டமிட்டு உழைத்தால், வெற்றி நிச்சயம்.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…
11.02.2022 11 : 50 A.M