தற்போது நாள் ஒன்றுக்குக் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது.
ஒமிக்ரானும், டெங்கு போன்ற காய்ச்சலூம் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றன. என்னதான் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும், கொரோனா பரவிக் கொண்டு தானிருக்கிறது.
இதற்குச் சுற்றியுள்ள பருவநிலை மாற்றமும் ஒரு காரணம்.
முன்பிருந்ததை விட, பனியும், குளிரும் அதிகரித்திருக்கின்றன. திடீரென்று கணிப்பை மீறிக் கனமழை பெய்கிறது.
நீலகிரிப் பகுதியில் நிலவிய பருவ நிலை மாற்றத்தினால் உண்டான அடர்த்தியான பனி மூட்டத்தால் நமது ராணுவத் தளபதி சென்ற பாதுகாப்பான ஹெலிகாப்டரே தடுமாறிப் பலர் உயிர் பறிக்கக் காரணமானது.
பஞ்சாப் சென்ற பிரதமர் பருவநிலை மாற்றத்தால் ஹெலிகாப்டரில் செல்லாமல் தனது பயணத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.
இதையே மென்மையாகச் சொல்லியிருக்கிறார் ஐ.நா.பொதுச்செயலாளரான ஆன்டனியோ குட்டரெஸ்.
“பருவநிலை மாற்றத்தாலும், கொரோனாப் பரவலாலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, உலகம் மோசமான நிலையில் இருக்கிறது” என்றிருக்கிறார்.
இங்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன நமது உடல்கள். கொரோனாப் பரவல் ஒருபுறம். விதவிதமான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைச் செருமல் எல்லாவற்றையும் எங்கு போனாலும் பார்க்க முடிகிறது.
வெளியில் குளிரும், பனியும் சூழ்ந்து அடங்குகின்றன. வெயில் இடையிடையே ஆபத்பாந்தவனைப் போல வந்து போகிறது.
பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை இந்த நிலை நீடிக்கலாம்.
இதை ஒட்டியே கொரோனாப் பரவல் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உச்சநிலைக்குச் சென்று அடங்கும் என்று கணித்திருக்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
இன்னும் மூன்று வார காலம் இடையில் இருக்கிறது.
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும், மற்ற நிறுவனங்களும் கூட உதவலாம்.
அதே சமயம், பருவநிலையில் மாற்றம் ஏற்படும் வரை, அவரவர் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவரவரின் கடமை.
*