எல்லை தாண்டிய ராஜாளிப் பறவை!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ : தொடர்- 8

இப்போதும் நினைவிருக்கிறது கோவை கிருஷ்ணகுமார் என்கிற துடிப்பான இளைஞர். அவர் அப்போது கோயம்புத்தூர் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தார்.

அவர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் மீது அதிக அன்பு கொண்டிருந்தார். சொல்லப்போனால் அவருடைய மாணவர் போலவே கடைசி வரை நடந்து கொண்டிருந்தார். வலம்புரி ஜான் கல்லறையை அழகிய சலவைக் கல்லால் கட்டி மரியாதை செய்தார்.

அதோடு தொடர்ந்து பல ஆண்டுகள் அவருடைய பிறந்த நாள் நினைவு நாளில் ஒன்று கூடுவோம். அவர்தான் முன்னின்று அதைச் செய்தார்.

வலம்புரிஜான் தாய் வார இதழ் சார்பாக 100 இடங்களில் பாரதி விழாக்களை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தினார்.

அப்பொழுது கோயம்புத்தூர் பகுதியில் கிருஷ்ணகுமார் பெரிய அளவில் உதவி செய்தார்.

கூடவே முகமது யாசின், மீனாட்சிசுந்தரம், சினிமா தியேட்டர் நடத்திக் கொண்டிருந்த நடராஜன் இவர்களெல்லாம் கோயம்புத்தூரில் பாரதி விழா நடத்துவதற்கு காரணகர்த்தாக்கள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அப்போதே இதில் இணைந்து கொண்டார்.

வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களுக்கு பாரதி மேல் இனம் புரியாத பற்று இருந்தது.

பாரதி ஒருவன் தான் எல்லா எல்லைகளையும் கடந்து எல்லா மதங்களையும் கடந்து மனித மனங்களை மேம்படுத்தி பாட்டுக் கோட்டை கட்டியவன் என்று முழுமையாக நம்பினார்.

அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று கருதினார்.

அதன் விளைவுதான் “பாரதி ஒரு பார்வை“ என்று அவர் எழுதியது.

அந்த நூல் எழுதுவதற்கு முன்பாக இது ஏற்கனவே வந்த பாரதி நூல் போல் இருக்கக் கூடாது என்று கருதி வேறுவிதமான அணுகுமுறையை கையாள வேண்டும் என்று என்னையும், பிரபுவையும் அழைத்துச் சொன்னார்.

நானும் அவரும் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் சென்று யாராவது பாரதி பிரியர்கள் இருக்கிறார்களா என்று அலசி ஆராய்ந்ததில் கிடைத்த மகா பெரியவர்தான் சீனி விசுவநாதன்.

சீனி விசுவநாதன் ஐயாவைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் நேரம் போதாது.

இப்போது சைதாப்பேட்டை தேரடி வீதியில் ரயில்வே ட்ராக் அருகில் ஒரு நூல் நிலையம் இருக்கிறது. அது காந்தி நூல் நிலையம். அது சீனி விஸ்வநாதன் நடத்திக் கொண்டு வருவதுதான்.

அவரை ஒரு அதிகாலை டிரெயினில் சென்று சைதாப்பேட்டையில் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு போய் சேர்த்தோம்.

பல சந்திப்புகள். அவர் பல தகவல்களைச் சொன்னார்.

பிறகு பாரதி காவலர் ராமமூர்த்தி எங்களுக்கு கிடைத்தார். பலமுறை அவரும் சந்தித்தார்.

இவ்வாறு பல அறிஞர் பெருமக்களைக் கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமல்லாமல் அவரோடு வலம்புரிஜான் அவர்கள் உரையாடி தெளிவு கண்டு, ‘பாரதி ஒரு பார்வை’ என்ற நூலை எழுத ஆரம்பித்தார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வலம்புரிஜான் அவர்கள் சொல்லச் சொல்ல நாங்கள் ஒரு பேப்பரில் எழுதிக் கொள்வதுதான்.

ஒரு சில மணி நேரம் என்னிடம் சொல்வார், நான் அதை எழுதிக் கொண்டு போய் கம்போசிங்கில் கொடுப்பேன்.

பிறகு பிரபுவை அழைத்துச் செல்வார் அவரும் அதே போல் எழுதி எடுத்துக்கொண்டு போய் தருவார். எல்லோரும் வேலை முடித்து விட்டுச் செல்வார்கள்.

அதன்பின் அலுவலகத்தில் இரவெல்லாம் தங்கி பிழை திருத்தி அங்கேயே நியூஸ் பிரிண்ட் பேப்பரை விரித்து படுப்போம்.

பிரிண்டிங் பிரஸ்ஸில் தலைமை பிரிண்டர் ராதாகிருஷ்ணன் இரவில் தூங்காமல் திருத்தும் எங்களுக்கு டீ எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

செம ஸ்ட்ரிக்ட் பார்ட்டி அவர். கம்போசிங் செய்வது சகாயம்.

கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் அளவில் இந்த “பாரதி ஒரு பார்வை” நூல் வெளிவந்தது. அந்த நூல் எல்லோராலும் பேசப்பட்டது.

“பாரதி ஒரு பார்வை” அவருடைய எழுத்துக்களில் மகுடம் என்று இன்றும் சொல்வேன்.

எப்போதும் தன்னை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுவார் வலம்புரிஜான்.

தன்னை எழுத்துச் சக்கரவர்த்தி என்று தான் அழைத்துக் கொள்வார்.

நீங்கள் எல்லாம் சிற்றரசர்கள் என்பார்.

கவியரசு கண்ணதாசனைப் போன்ற மிக உயர்ந்த குழந்தை மனம் கொண்டவர் வலம்புரிஜான்.

ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கே சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

வலம்புரிஜான் பல நாடுகளுக்குச் சென்று வந்த போதிலும் சோவியத் ரஷ்யாவில் சென்று பேச வேண்டும், பார்க்க வேண்டுமென்று அளப்பரிய ஆர்வம் கொண்டிருந்தார்.

அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

அப்போது நான் சோவியத் கலாசாரக் கழகத்திலும், புஷ்கின் இலக்கியப் பேரவையிலும் பங்கு கொண்டிருந்தேன்.

எனக்கு முன்பாக என்னுடைய நண்பர் நவாப்ஜான் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தார்.

எனவே அடுத்த கட்டமாக என்னை அனுப்ப வேண்டும் என்று தங்கப்பன் முடிவு செய்து என்னுடைய விவரங்கள் வேண்டும் என்று கேட்டார்.

எனக்கு பதிலாக என்னுடைய ஆசிரியர் வலம்புரிஜான் அவர்களை அனுப்புங்கள். தகுதியானவர்; தமிழறிஞர். அவர் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தால் பல நல்ல செய்திகளை தமிழுக்குத் தருவார் என்று நான் சொன்னேன்.

அவர் தயங்கினார். நீ ஒரு கவிஞன். எழுத்தாளன். இளைஞன். நீ போய் சென்று சென்று வருவது நல்லது என்று கருதுகிறோம் என்று சொன்னார்.

நான் இறுதிவரை வேண்டாம் என்று சொல்லி, வலம்புரிஜான் அவர்களின்  சுயகுறிப்பை எடுத்துக் கொண்டு போய் புகைப்படத்தோடு தங்கப்பன் இடம் தந்து அங்கிருக்கும் சோவியத் தூதரிடமும் பரிந்துரை செய்தேன்.

தாய் பிரபுவையும் அழைத்துச் சென்று வலம்புரிஜான் செல்வதால் உண்டாகும் பயன்கள் பற்றிப் பேசினோம்.

புஷ்கின் இலக்கியப் பேரவை சலாவுதீன் அவர்களும் பரிந்துரை செய்தார்கள் .

ஒரு நாள் இரவு வலம்புரிஜான் அவர்கள் சோவியத் நாட்டிற்கு பறந்து சென்றார்கள்.

அங்கிருந்து எனக்கும் பிரபுவுக்கும் கடிதம் எழுதினார். அது ஒரு இலக்கியக் கூடு.

சோவியத் நாடு பயணம் முடிந்து சென்னை விமான நிலையத்திற்கு வரவேற்க தாய் அலுவலகமே ஒன்றுதிரண்டு நின்றது.

கூடவே விஜிபி சந்தோஷம், ஆணழகன் சிதம்பரம், கபிஸ்தலம் ஆசா இணைந்து கொண்டார். இலக்கிய புரவலர்களும் காத்திருந்தார்கள்.

விமான நிலையத்திலிருந்து வலம்புரி ஜான் தமிழ் மிடுக்கோடு நடந்து வந்தார்.

அவரைப் பார்த்து அனைவரும் வணங்கினோம்.

எல்லோரும் அவருக்கு மாலை போட்டு வரவேற்றார்கள்.

திடீரென்று ஒரு மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டு சோவியத் பயணத்திற்கு நீ தான் காரணம் என்று சொல்லி கைகுலுக்குகிறார்.

எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது.

இது எதற்கு சார் என்னை மதித்து வேலை தந்தவர் நீங்கள் என்றேன்.

“அப்படியல்ல உன்னுடைய எண்ணம் எவருக்கு வரும்” என்று கைப்பிடிக்கிறார்.

எனக்கு ஒன்றும் அப்படிப் பெரிதாகச்சய்து விட்டதாகத் தோன்றவில்லை.

தகுதியுடையோர் தகுதியுடைய இடத்துக்குச் செல்வது சிறப்பு என்று கருதினேன்.ஆனால் வலம்புரிஜான் ஒரு உணர்ச்சிக் குவியல். அவரை போட இயலா காலக் காட்டாறு.

பிறகு வலம்புரிஜான் தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கியப் பணிகளை செய்வதும், பயணங்களின் நடுவே புத்தகங்களை வைத்துக்கொண்டு படிப்பதுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஒன்றை இந்த சமயத்தில் குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் அண்ணா திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்துவற்கு முன்பாகவே அவரை தயார் படுத்துவதற்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வலம்புரிஜானை நியமித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

தொடர்ந்து பல செயல்களுக்கும், அறிக்கைகளுக்கும் அவர் மூலகாரணமாக இருந்தார் என்பதுதான் உண்மை.

அதன் விளைவாக அவர் மேலவை உறுப்பினர் ஆனதற்கும் பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் ஆனதற்கும் காரணம் இந்த சூழல் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் வலம்புரிஜானுக்கு செய்த மிகப்பெரிய நன்றியும் இதுதான்.

புரட்சித் தலைவர் அவர்கள் தமிழ் உணர்ந்த தமிழ் இதயத்தை சரியான இடத்தில் சரியான நேரத்தில் உயர்த்தி வைப்பதில் சிறந்தவர் என்பதை இப்போதும் நிரூபித்தார்.

பின்னாளில்  வலம்புரிஜானுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் சரியான புரிதல் இல்லாமல் இடைவெளியானது எல்லோருக்கும் தெரிந்த கதை.

இன்னொரு சம்பவம்.

‘உதயம்’ கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக்கொண்டு இருந்தவர்தான் சிந்து பாஸ்கர். அவர் இப்போது “கட்டுமான தொழில்” என்ற இதழை கடந்த 22 வருடமாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்.

அவர் ஒரு காலத்தில் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். வலம்புரி ஜான் அந்தக் கல்லூரிக்குச் சென்ற போது சிந்து பாஸ்கர் சந்தித்து பேசினார்.

என்னவோ தெரியவில்லை அவர் மேல் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. சென்னை வரும்போது வாருங்கள் என்று அழைத்தார்.

ஒருமுறை அப்படி வருகிற போது ராஜேஷ்குமாரின் ‘137 ஆவது பச்சைக்கிளி’ என்ற கதைக்கு படம் வரைந்து கொடு என்று சொன்னார்.

சொல்லும் போது கூடவே இன்னொன்றும் சொன்னார்,

“நீங்கள் ஓவிய அறைக்குச் சென்று படம் வரைந்து விட்டு வாருங்கள் யாரிடமும் பேசி விடாதீர்கள்” என்றார். இந்த சூட்சுமம் சிந்து பாஸ்கருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படம் வரைந்து விட்டு அருகில் இருந்த மூத்த ஓவியரிடம்  எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

அவர்கள் வழக்கம்போல “இது மிகவும் சுமாராக இருக்கிறது சரி இல்லை” என்று சொல்லி விட்டார்கள்.

இதைக் கேள்விப்பட்ட வலம்புரிஜான் அவர்கள் நான் தான் அப்போதே சொன்னேனே கலைஞர்களின் இதயம் விரிந்து இருக்கும் என்று சொல்லிவிட்டு நீ வீட்டில் எடுத்துக்கொண்டு போய் வரைந்து கொண்டு வா என்று அனுப்பினார்.

அந்த படம் தாய் வார இதழில் சிறப்பாக பிரசுரம் செய்யப்பட்டது. இதை இன்றும் நெஞ்சு நெகிழச் சொல்கிறார் சிந்துபாஸ்கர்.

பிறகு அவர் ராஜரிஷி என்ற வலம்புரியார் பத்திரிகையிலும் பணியாற்றினார் என்பது வேறு கதை.

யாராவது ஒருவர் திறமை உள்ளவர் என்று தன் மனதுக்கு தென்பட்டு விட்டால் அவரை தோளில் தூக்கி உயர்த்தி கொண்டாடுவது வலம்புரி ஜானின் வழக்கம்.

‘தாய்’ நடந்து கொண்டிருக்கும்போதே இணையாக மருதாணி, மெட்டி என்ற இரு இதழ்களை நடத்தினார்.

‘மருதாணி’ திரைப்படம் சார்ந்த ஒரு பத்திரிகையாக வந்தது. ‘மெட்டி’ குடும்ப நாவல்கள் தாங்கி வந்தது.

கவனம் சிதறாமல் எழுத்து இலக்கியம் சமூகப்பார்வை என்று சென்று கொண்டிருந்த வலம்புரிஜான் வாழ்க்கையில் திடீரென்று தடம் மாறியது என்று சொன்னால் எதைச் சொல்வது?

வேறென்ன சினிமா தான்.

சினிமா அவரை எப்படி எல்லாம் மாற்றியது என்பதை அடுத்து பார்க்கலாம்.

(தொடரும்…)

Comments (0)
Add Comment