65 ஆண்டுகள் கடந்தும் மயக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’!

அறுபத்தைந்து வருடம் கழித்தும் ஒரு படத்தை அதே ரசனையோடு இப்போதும் பார்க்க முடியும் என்றால் அந்தப் படங்களின் லிஸ்ட்டில் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ நிச்சயம் இருக்கும்!

எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கே.ஏ.தங்கவேலு உட்பட பலர் நடித்தப் படம் இது.

ப.நீலகண்டன் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். இளங்கோவன் வசனம் எழுதி இருந்தார்.

கதை எளிமையானதுதான். இளவரசி கலாமணியை (அஞ்சலி தேவி) கடும் போட்டிக்கு இடையில் மணக்கிறார், இளவரசர் உதயசூரியன் (எம்.ஜி.ஆர்). அவர்கள் வாழ்க்கையை அழிக்க சதி செய்கிறார்கள், துர்காவும் (வரலட்சுமி) பைரவனும் (பி.எஸ்.வீரப்பா).

இளவரசருடன் வாழ நினைக்கும் துர்கா, இளவரசியின் இடத்தைப் பிடிக்க நினைக்கிறார்.

பைரவன், இளவரசியைக் கடத்த, எதிரிகளை நையப் புடைத்து இளவரசியை, எப்படி இளவரசன் மீட்கிறார் என்பதுதான் கதை.

எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பாவின் நடிப்பும் ஆக்‌ஷன் காட்சிகளும் பாடல்களும் நடனமும் படத்தை எங்கோ கொண்டு சென்றன.

’காதலெனும் சோலையிலே ராதே ராதே’, ’ஆட வாங்க அண்ணாத்த’, ’எல்லையில்லாத இன்பத்திலே நான்’, ‘பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது’,

’சொல்லாலே விளக்கத் தெரியல’, ’உன் அத்தானும் நான் தானே, சட்டைப் பொத்தானும் நீதானே’ உட்பட படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அப்போது பிரபலம்.

பலர் மனப்பாடமான அத்தனைப் பாடல்களையும் ஒப்பிப்பார்கள். இப்போது கேட்டாலும் அதே ரசனையைப் பெற முடியும். பாடல்களை பட்டுக்கோட்டை, தஞ்சை ராமையாதாஸ், கு.மா.பாலசுப்பிரமணியன், கே.டி.சந்தானம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதி இருந்தனர்.

1957-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

வெளியான பல்வேறு இடங்களில்,150 நாட்களை கடந்தது. படம் வெளியான ஆண்டில் அதிக வசூலை ஈட்டிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாகி சரியாக (18-ம் தேதியுடன்) 65 வருடங்கள் ஆனாலும் எவர்கிரீன் படங்களில் எப்போதும் இருக்கிறாள் இந்தத் திருமகள்.

– அலாவுதீன்

Comments (0)
Add Comment