வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மூலமாகச் சில படங்கள் கவனம் பெறும். சில நேரங்களில் நல்ல முயற்சி என்றளவிலேயே அப்படிப்பட்ட உழைப்பு தங்கிவிடும். இவ்விரண்டுக்கும் இடையே ஓரிடத்தைப் பிடித்திருக்கிறது விதார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கார்பன்’.
தொடர்ச்சியாகத் தான் நடிக்கும் படங்களின் திரைக்கதையோ, கதாபாத்திர அமைப்போ வித்தியாசமாக இருப்பதில் கவனம் செலுத்துபவர் விதார்த். ஆர்.சீனுவாசன் இயக்கியுள்ள இப்படத்திலும் அது நிரூபணமாகியுள்ளது.
கனவிலிருந்து நனவு!
போலீஸ் வேலையில் சேர வேண்டுமென்ற கனவு கானல் நீராகிப் போனதால், ஏதேனுமொரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல முயற்சித்து வருகிறார் சங்கர் (விதார்த்). அவரது தந்தை (மாரிமுத்து) குப்பையள்ளும் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
தாய் திடீரென்று இறந்துபோனபிறகு நிகழும் வாக்குவாதத்தினால், முதல் மாதச் சம்பளம் பெற்றபின் தந்தையுடன் நேரடியாகப் பேசுவதாகச் சபதமிடுகிறார் சங்கர். அவருக்கு வேலையும் கிடைத்து, முதல் மாதச் சம்பளமும் வாங்கியபிறகு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு ஒரு கனவு வருகிறது.
சங்கரிடம் ஒரு வினோதம் உண்டு. அவர் கனவில் காண்பதெல்லாம் உண்மையாகவே நிகழும். பல முறை அவரே இதனைச் சோதித்துப் பார்த்திருக்கிறார்.
தான் கண்ட கனவில் தந்தை ஒரு கறுப்பு வண்ண வாகனத்தால் விபத்துக்குள்ளாவதை காண்கிறார். அதிகாலையில் பதறி எழுந்து தந்தையைக் காணச் செல்கிறார். செல்லும் வழியில் அவரது மோட்டார் பைக் ரிப்பேர் ஆக, கனவில் கண்ட கார் தன்னைக் கடந்து செல்வதைக் காண்கிறார்.
சில நிமிடங்களில் தந்தை விபத்துக்குள்ளானது தெரிந்து அதிர்ந்து போகிறார். கனவில் கண்ட வாகனத்தை ஓட்டியவர் தரும் காப்பீட்டுத் தொகையால் மட்டுமே தந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்.
அந்த வாகன ஓட்டியை சங்கர் கண்டறிந்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.
கொஞ்சம் பெரிய குறும்படமாகியிருக்க வேண்டிய கதையை எடுத்துக்கொண்டு, அதனை இரண்டு மணி நேரம் ஓடும் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனுவாசன்.
விதார்த் 25!
குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஆள் உட்படத் தான் நடிக்கும் கதைகளில் வித்தியாசத்தைத் தேடுபவர் விதார்த். அவரது 25-வது படமான இதுவும் அப்படியே அமைந்திருப்பது சிறப்பு.
தந்தையோடு முரண்படும் நேரங்களில் விறைப்பு காட்டும்போதும், அவரைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது நெகிழும்போதும் மனதோடு ஒட்டிக்கொள்கிறார். வயதைக் காட்டிக் கொடுக்கும் முகச்சுருக்கங்களை மறைப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
’ஏழாம் அறிவு’ படத்தில் பார்த்த பெண்ணா இது என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு முதிர்ந்து தோன்றுகிறார் தான்யா பாலகிருஷ்ணன். விதார்த்தை தேடிச் சென்று பழகுவதிலேயே, அவரது பாத்திரத்தின் இயல்பு தெரிந்து போகிறது. அந்த வித்தியாசத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மாரிமுத்து மட்டுமல்லாமல் ஏடிஎம் செக்யூரிட்டியாக வரும் மூர்த்தி, விக்ரம் ஜகதீஷ் – பவுலின் ஜோடி, வில்லனாக வரும் அஜய் நடராஜ், பார்வைத்திறனற்றவராக வரும் சிறுமி என்று ஒரு டஜன் பாத்திரங்கள் திரையில் வந்து போகின்றன.
ஆதித்யா டிவி செந்தில், ‘ராட்சசன்’ வினோத் சாகர் இருவரும் சரியாகப் பயன்படுத்தப்படாதது வருத்தம்.
ஓரிரு காட்சிகளில் வந்துபோகும் மூணாறு ரமேஷுக்கு இதில் பெயர் சொல்லும் பாத்திரம்.
விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் அழகு. பிரவீன் கே.எல் பட்த்தொகுப்பு மிகச்சீராகவும் மிகச்சுருக்கமாகவும் படத்தை ஆக்கியுள்ளது.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் சட்டென்று கடக்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றச் செய்கிறது.
இன்னும் மெருகேற்றியிருக்கலாம்!
கதையும் கதாபாத்திரங்களும் மிகச்சுருக்கமாக அமைந்திருப்பதும் குறும்படத்திற்கான களமும் ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தடுக்கின்றன. அதையும் மீறி நடிப்புக் கலைஞர்களின் திறமை நம்மைத் திரையுடன் ஒன்ற வைக்கிறது.
சமீபத்தில் வந்த ‘ஜாங்கோ’, ‘மாநாடு’ படங்களில் வந்த ‘டைம்-லூப்’ போல இதில் சில காட்சிகள் அமைந்தாலும், அதற்கான காரண விளக்கத்தினுள் லாஜிக் இருப்பது அருமை. ஒரே இடத்தில் அதே நபர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும்போது உருவாகும் நகைச்சுவையை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கலாம்.
போலவே, தான்யாவின் பாத்திரத்தையும் இடைவேளைக்கு முன்பாகச் சில இடங்களில் காட்டியிருக்கலாம்.
அதனைச் செய்யாமல் போனதால், கனவுக்காக விதார்த் காத்திருக்கும் காட்சிகளை இழுவையாக உணர வைக்கிறது. அதேநேரத்தில், முதல் இருபது நிமிடக் காட்சிகளில் இறுக்கம் அதிகம்.
‘நூறாவது நாள்’ உட்படச் சில கதைகளில் கனவு நனவாவதைச் சொன்னாலும், கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷாக படம் பார்த்த புத்துணர்வு உருவாவதற்குத் தனியாகப் பாராட்ட வேண்டும்.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையையும் பட்ஜெட்டையும் மெருகேற்றியிருந்தால், திரையில் தென்படும் பல குறைகளை மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஓடிடி தளத்தில் வெளியாகும்போது, இப்படம் கொண்டாடப்பட வாய்ப்பு அதிகம்!
- பா.உதய்