பென்னிகுவிக் சிலை லண்டனில்; அதிகார வர்க்கம் உணருமா?

பென்னிகுவிக் – இன்றும் தென் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பாசன நீர் பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்தப் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பலர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும்.

அப்படிக் குலசாமியைப் போல அவர்களின் நினைவுகளில் கலந்திருக்கிறார் ஆங்கிலேய அதிகாரியான பென்னிகுவிக்.

இங்கிலாந்து நாட்டில் லண்டனுக்கு அருகில் உள்ள கேம்பர்ளி நகரிலிருந்து ஆங்கிலேய ஆட்சியில் தமிழகத்திற்கு அரசு அதிகாரியாக வந்த பென்னிகுவிக் தானுண்டு, தன் வேலையுண்டு என்று போயிருக்கலாம்.

ஆனால் தன்னைச் சுற்றியுள்ள மக்கள், விவசாயம் சார்ந்த எதிர்காலம் பற்றி யோசித்த பென்னிகுவிக் முல்லைப் பெரியாற்றில் அணை கட்டினால், தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களைச் செழிக்க வைக்கலாம் என்பதற்காகப் பல முயற்சிகளை எடுத்தார். பல இடையூறுகளைச் சந்தித்தார்.

தன் வேலையில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும், தன் குடும்பத்தினருக்கு எவ்வளவு கிடைக்கும் என்று நம் அதிகாரிகள் எந்நேரமும் யோசிப்பதைப் போல அவர் அன்றைக்கு யோசிக்கவில்லை. தன்னுடைய சொந்தப் பணத்தையும் போட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

அவர் கட்டி முடித்த ஆண்டு 1895.

நூற்றாண்டுகளைக் கடந்தும் அவருடைய செயலுக்குப் பலன் கிடைத்துக்  கொண்டிருக்கிறது. அவருடைய சிலையும், நினைவு மண்டபமும் அப்பகுதியில் எழுப்பப்பட்டிருக்கிறது.

தற்போது அவருடைய சிலை லண்டனுக்கு அருகில் உள்ள பென்னிகுவிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் நிறுவதற்கான முயற்சி தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு  அதற்கான அனுமதியும் பெற்றப்பட்டுவிட்டது.

இதை அவருடைய பிறந்த நாள் தினமான அறிவித்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின்.

செயத்தக்க செயலைச் செய்ததற்குக் காலம் கடந்தும் மரியாதை செலுத்துகிறார்கள் மக்கள். சிலை அமைக்கிறது அரசு.

பென்னிகுவிக்கிற்குச் சிலை அமைப்பது சரி தான்.

ஆனால் எங்கோ இருந்த வந்த ஆங்கிலேயே அதிகாரிக்குத் தன்னைச் சுற்றி இருந்த மக்களின் மீதும், விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் சார்ந்த அக்கறை இன்றைக்கு இருக்கிற அரசு அதிகாரிகளில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? பென்னிகுவிக் காட்டிய சமூகம், எதிர்காலம் சார்ந்த அக்கறை எத்தனை பேருக்கு இருக்கிறது?

இங்கு சாலை போட்டாலும், பாலம் அமைத்தாலும் அதன் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனை சிறிதும்  இல்லாமல், தங்களுக்கும், அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கும் எவ்வளவு கமிஷன் கிடைக்கிறது என்பதை மட்டும் அக்கறையாகப் பார்ப்பதால் தான், கட்டி முடிந்த ஓராண்டுக்குள் பாலத்தில் விரிசல்கள் விழுகின்றன.

அதே சமயம் ஆங்கிலேயர் அன்று கட்டிய பாலத்தை இடிப்பதற்குக் கூட நாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

இது தான் செய்யும் வேலையில் அவர்கள் காட்டிய நேர்த்திக்கும், நாம் காட்டிக் கொண்டிருக்கும் நேர்த்திக்குமான வித்தியாசம்.

முதலில் தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் பென்னிகுவிக்கின் உணர்வைத் தங்கள் நெஞ்சில் ஏந்தட்டும். அப்படி ஏந்திய அதிகாரிகளைத் தங்கள் நெஞ்சில் சுமப்பார்கள் நமது மக்கள்.

பென்னிகுவிக் இன்றும் அதைத் தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

*

Comments (0)
Add Comment