கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?

மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள்.

ஆனாலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் கொரோனாத் தொற்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனாலும் கொரோனாப் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே சுமார்  24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், குழந்தைகள் பாதிக்கப்படுவதும் அதிகமாகியிருக்கிறது. இந்தியா முழுக்க நாள் ஒன்றிற்கு 2.58 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைநகர் டெல்லியிலும் கொரோனாப் பரவல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சில நிறுவனங்கள் எச்சரித்திருந்த படி கொரோனாப் பாதிப்பு இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துச் சிலர் வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகளின் பார்வையை விட்டுவிடுங்கள். பெரிய மருத்துக் கம்பெனிகளில் வணிக நோக்கம் வேறு எல்லாவற்றிலும் தொக்கி நிற்கிறது.

பொதுமக்களின் பார்வை என்னவாக இருக்கிறது?

சில நடவடிக்கைகள் அவர்களுக்கு அதிருப்திப்பட வைத்தாலும், இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்படுவது யாருக்காக? பாதிப்பின் எண்ணிக்கையை ஏதாவது ஒருவிதத்தில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே!

தொற்று தற்போது சமூகப் பரவலாகி விட்டது என்று அரசு தரப்பிலேயே சொல்லப்பட்டாலும், யார் மூலமும் எந்த இடத்திலும் தொற்றுப் பரவல் நிகழலாம் என்பதே கள யதார்த்தம்.

நம்மையும் பாதுகாத்து, நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பில் தானிருக்கிறது.

Comments (0)
Add Comment