குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக அரசு முடிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.

அந்த அலங்கார ஊர்தித் திட்டம் நிராகரிக்கப்பட்டது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழகத் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.

இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் வீரமங்கை வேலு நாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சி.யும், கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்? என்றும் குடியரசு தின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை மட்டும் அனுமதித்துவிட்டு, இதர மாநில ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. கண்டனத்திற்குரியது.

எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் மாநில பெருமைகளை பறைசாற்றும் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற அனுமதி தர வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சிக் குழுவினர் நேரில் வலியுறுத்தியபோது அமித்ஷா இந்த உறுதியை அளித்துள்ளார்.

Comments (0)
Add Comment