‘வளதடி’ எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Vellari Thade என்றும் Boomrang என்றும் குறித்துள்ளனர்.
இலக்கைத் தாக்கிவிட்டுக் குறிவைத்தவரிடமே திரும்பி வரும் அமைப்புடைய ஆயுதம் இது.
கீழ்நாட்டுக் கள்ளரும் சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த கள்ளரும் இக்கருவியைக் கையாளுவதில் பெரும்புகழ் பெற்றவர்கள்.
“மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய கருவிகளில் வளரித்தடியும் ஒன்று” என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது.
‘மதுரை மாவட்ட அரசிதழ்’ என்ற நூலை எழுதிய கூறுகிறது. பிரான்சிஸ், தென்னிந்திய சாதிகளைப் பற்றிய நூல் எழுதிய எட்கார் தர்ஸ்டன், இராணுவ நினைவுகள் என்ற நூலை எழுதிய வெல்ஷ் ஆகியோர் தம் நூற்களில் இக்கருவியைப் பற்றியும், கள்ளர் இனத்தவர் இதைக் கையாண்ட முறை பற்றியும் நிறைய எழுதியுள்ளனர்.
சிவகங்கை சரித்திர அம்மானை என்ற நூல் பெரிய மருது வளரியினால் மல்லாரிராவின் தலையை அறுத்த செய்தியை
“செயிவளரி தன்னைத் திருமால் முதலையின்மேல்
பேசிவிட்ட சக்கரம்போல் பெரியமரு தேந்திரனிவன்
வீசி எறிய விலகாமல் மல்லராவு
தலையை நிலைகுலையத் தானறுத்தாங்காமல்
வலுவாய் வடகரையின் வாய்க்காலில் போட்டதுவே”
– என்று குறிக்கிறது.
தன்மபுத்திரன் எழுதிய வாளெழுபது என்ற நூலும் வளரியைக் குறிப்பிடுவதாக மீ.மனோகரன் எழுதுகிறார்.
“வளரி என்னும் இவ்வாயுதம் இந்தியாவிலேயே தமிழ்ப் பகுதியிலேதான் பயன்படுத்தப்படுகிறது.
1883 மார்ச்சில் சிவகங்கைக்கு அண்மையில் இந்த ‘பூமராங்குகள்’ பயன்படுத்தப் படுவதை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்று புரூஸ்புட் (Bruce Foote) குறிப்பிடுகிறார்.
– நன்றி: தொ.பரமசிவன் (தெய்வங்களும் சமூக மரபுகளும் நூலிலிருந்து)