தீபாவளியும் பொங்கலும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களாகி வெகு ஆண்டுகளாகிவிட்டன.
இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய வழக்கங்கள் பற்றி பேசிக் கொண்டேயிருக்க முடியும்.
அது போலவே, அக்கொண்டாட்டத்தில் திரைப்படங்களுக்கும் ஒரு இடம் இருப்பதைக் காண முடியும். பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த பல சினிமாக்கள் பெருவெற்றியைச் சுவைத்திருப்பதே இதற்குச் சான்று.
குறைந்தபட்ச உத்தரவாதம்!
சித்திரை திருநாள், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், குடியரசுதினம் என்று நிதியாண்டை கணக்கு வைத்து திரைப்படங்கள் வெளியாகும் வழக்கம் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
இவற்றில் சுமார் 3 விடுமுறை நாட்களை உள்ளடக்கிய பொங்கல் விழா தான் தமிழ் திரையுலகினருக்கு அள்ளி அள்ளித் தரும் அட்சய பாத்திரம்.
ஏனென்றால், விடுமுறை நாட்களில் திரையரங்குகளுக்குச் செல்லும் வழக்கம் பல்லாண்டுகளாக நம்மவர்களிடம் ஊறிவிட்ட காரணத்தால் பொங்கல் வெளியீடாக வரும் திரைப்படங்களின் வசூலுக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் உண்டு.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி தவிர்த்து இன்னபிற தமிழ்நாட்டு நகரங்களில் 10 தியேட்டர்கள் இருந்தாலே அதிகம் என்ற சூழலில் பொங்கலையொட்டி சுமார் 8 படங்கள் வெளியானதைக் காண முடியும்.
மாட்டு பொங்கல், காணும் பொங்கல் மட்டுமல்லாமல் முந்தைய நாளான போகிப் பண்டிகையைக் குறிவைத்து படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்களும் உண்டு.
இதனாலேயே, திரைத் துறையினரைப் பொறுத்தவரையில் பொங்கல் வெளியீடு என்பது ஒரு வரம்.
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் வெற்றி!
பொங்கல் திருநாளன்று எம்ஜிஆரின் ராயப்பேட்டை மற்றும் ராமாவரம் இல்லங்கள் எத்தகைய விழாக்கோலம் பூண்டிருந்தன என்பதைச் சொல்லாத பிரபலங்களே இல்லை.
அன்றைய தினம் அங்கு எத்தகைய கொண்டாட்டம் நிகழ்ந்ததென்பதை எம்.ஜி.ஆரோடு பழகியவர்கள், தெரிந்தவர்கள், சேர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமல்லாமல் அவரது வீடு தேடி வந்த மக்களும் கூட இதனை அறிவார்கள்.
அது போலவே, பொங்கலன்று வெளியான ஹரிச்சந்திரா, அலிபாபாவும் 40 திருடர்களும், ராணி சம்யுக்தா, வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, மாட்டுக்கார வேலன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் பெருவெற்றியைப் பெற்றன.
இவற்றில் ஹரிச்சந்திராவில் மட்டுமே அவர் துணை பாத்திரமாக வந்திருப்பார். அது மட்டுமல்லாமல் இப்படங்களின் ஆக்கமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பதைக் காண முடியும்.
நான் பெற்ற செல்வம், பார்த்தால் பசி தீரும், கர்ணன், பழனி, கந்தன் கருணை, எங்க மாமா, அவன் ஒரு சரித்திரம் உள்ளிட்ட படங்கள் சிவாஜி கணேசனுக்குப் புகழ் தேடித் தந்த பொங்கல் வெளியீடுகள்.
இவர்கள் இருவரது தலைமுறையில் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சிவகுமாரும் கூட பொங்கல் பரிசாகப் பல வெற்றித் திரைப்படங்களைப் பெற்றனர்.
பொங்கல் போட்டி!
ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரைப்படங்கள் நேருக்குநேர் போட்டியாக அமைந்தது மிகச்சிலவே. 1986-ல் மிஸ்டர் பாரத் & விக்ரம், 1995-ல் சதிலீலாவதி & பாட்ஷா ஆகியன இதற்கான உதாரணம்.
ஆனால், இருவரும் தனித்தனியாகப் பல பொங்கல் திரைப்பரிசுகளைத் தந்தனர். மீண்டும் கோகிலா, பாயும் புலி, ஒரு கைதியின் டைரி, காதல் பரிசு, பணக்காரன், தர்மதுரை, மன்னன், மகாநதி, பம்மல் கே.சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி வரை இது தொடர்ந்தது.
இதே காலகட்டத்தில் நாளைய மனிதன், புலன் விசாரணை, கும்பக்கரை தங்கையா, வால்டர் வெற்றிவேல் என்று விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட சக நட்சத்திரங்களும் பொங்கல் வெளியீட்டில் வெற்றிகளை அள்ளியிருக்கின்றனர்.
அப்போது முன்னணியில் இருந்த இவர்களது திரைப்படங்களோடு சில சிறு பட்ஜெட் படங்களும் கூட திரைக்கு வந்து வசூலைப் பெற்றிருக்கின்றன.
விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் பெருவெற்றியை அடைந்த ‘வானத்தைப் போல’ பொங்கலன்று வெளியானது தான். இப்படி பொங்கல் வெளியீடுகள் நடிகர்களுக்கு மறக்க முடியாத பல வெற்றிகளைத் தந்திருக்கின்றன.
பொங்கலையொட்டி சுமார் 8 முதல் 10 படங்கள் வெளியாவது சகஜம் என்ற சூழல் 90-களின் இறுதிவரை தொடர்ந்திருக்கிறது.
தொடரும் வெற்றிகள்!
2000-க்கு பின் அஜித், விஜய் உச்ச நடிகர்களான பிறகும் இந்த வசூல் மழை தொடர்ந்திருக்கிறது.
2001 பொங்கலன்று வெளியான ப்ரண்ட்ஸ், தீனா இரண்டும் பெரு வெற்றி பெற்ற திரைப்படங்கள். இந்த ஆண்டில் இருந்துதான் சூர்யாவின் வெற்றிக் கணக்கு தொடங்கியது.
வசீகரா, திருப்பாச்சி, போக்கிரி, காவலன், நண்பன் ஆகியன விஜய்யின் பொங்கல் வெளியீடுகளில் முக்கியமானவை.
போலவே வீரம், விஸ்வாசம் ஆகியன அஜித்துக்கு பெரு வெற்றியைத் தந்தன. விக்ரம், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என்று பல நடிகர்கள் வாழ்விலும் இந்த வெற்றி பாரம்பரியம் தொடர்கிறது.
கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’, கோவிட் -19க்கு இடையிலும் திரையரங்களுகளில் ரசிகர்களைத் திரளச் செய்தது.
நட்சத்திரங்களின் படங்கள் வேண்டாம்!
பொங்கல் நாளன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாமல் போன நேரங்களில் மிக வினோதமாகவே உணர்ந்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலம் முதல் நேற்று வரை இந்த நிலைதான்.
2022 பொங்கல் வெளியீடுகள் இந்த வழக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.
பிரபுதேவாவின் ‘தேள்’, சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’, அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்லப் போகிறாய்’, விதார்த்தின் ‘கார்பன்’ மற்றும் நாகார்ஜுனா – நாக சைதன்யாவின் ‘பங்கராஜு’, ‘ரவுடி பாய்ஸ்’ ஆகிய இரு தெலுங்கு படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
ஒமிக்ரான் தாக்கத்தினால் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற நிலையில், திடீரென்று அஜித்தின் ‘வலிமை’ வெளியீடு ஒத்திப் போடப்பட்டதும் இப்படங்கள் திரைக்கு வரக் காரணம்.
ஆனாலும், இந்த படங்கள் அனைத்துமே நடிப்புக் கலைஞர்களைத் தாண்டி கதை மற்றும் இயக்குனர்களையே சார்ந்திருக்கின்றன. இது, சமீபகாலமாகத் தமிழ் திரையுலகம் காணாதது.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதே ஒரு கொண்டாட்டம் தான் என்பது தெலுங்கு திரையுலகில் கொள்கை அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால், பெரும்பாலும் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இடைப்பட்ட நாட்களிலேயே வெளியிடப்படுகின்றன.
தமிழ் திரையுலகிலும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல் நெடுநாட்களாக ஒலித்து வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ, கொரோனா கால கட்டுப்பாடுகள் பொங்கல் விழாக் காலத்தில் சிறு படங்களும் வெளிவர வழி வகுத்திருக்கிறது.
மரபு வழித் தொடரும் தமிழ் சமூகத்தின் சினிமா வேட்கையினால் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் தரமான படங்களின் மீது விழும் வெளிச்சம் பெருகும்.
அதனால், எதிர்காலத்தில் விழாக்காலங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதை நெறிப்படுத்தலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களின் திரை மோதலைத் தவிர்க்கலாம். இதனால், அவற்றோடு வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.
‘எங்க தலைவரின் படம் தான் எங்களுக்கு தீபாவளியும் பொங்கலும்’ என்று சொல்லித் திரியும் ரசிக கண்மணிகளின் வார்த்தைகள் அப்போதுதான் உண்மையாகும்!
– உதய் பாடகலிங்கம்