– உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார் மீது வரதட்சணைக் கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அந்தப் பெண்மணி குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மேல்முறையீட் மனுவை நிராகரித்தது.
இந்த வழக்கின்போது தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “ஒரு மாமியார், தன் மருமகளுக்கு கொடுமை செய்தால், அது மிகவும் கடுமையான குற்றமாகும்.
ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பாதுகாக்காதபோது, பின்னாளில் அந்தப் பெண்ணுக்கு அது மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடியதாக மாறுகிறது.
வரதட்சணை என்ற வார்த்தைக்கு, சட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது எந்த வடிவத்திலான, மதிப்புமிக்க எதை வாங்கினாலும் அதனை வரதட்சணையாகவே கருத வேண்டும்.
பெண் வீட்டாரிடம் சொந்த வீடு கட்ட பணம் கேட்பதையும் வரதட்சணைக்கு உள்ளாக கொண்டு வர வேண்டும்.
வரதட்சணை போன்ற சமூக கேடுகளை வேரோடு பிடுங்கும் அளவிற்கு ஐபிசி 304 பி பிரிவில் அதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
வரதட்சணையை ஊக்குவிக்கும் சட்ட விளக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.
பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது, மிகவும் மோசமான குற்றச்செயல். வரதட்சணை வழக்குகளை நீதிமன்றங்கள் விசாலமான முறையிலும் விரிவான முறையிலும் அணுகும் படி அதில் சட்ட செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.