இயற்கைச் சூழலை சாதகமாக்கிக் கொள்வோம்!

ஆல்ப்ஸ் மலையிலேயே ஐஸ் விற்பது, அண்டார்டிக்காவில் ஏ.சி விற்பது என்று மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். திறமை இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம்.

மிகச் சிறிய கிராமம் அது. அங்கு செல்லும் பாதையோ கரடு முரடு. எனினும், அங்கு உற்பத்தியாகும் உருளைக் கிழங்குக்கு அபார சுவை என்பதால், சுற்றியுள்ள மக்கள் ஆர்வத்துடன் அதை வாங்கிச் செல்வார்கள்.

ஆனால், உருளையின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதால், முந்தின நாள் இரவே டிராக்டரை எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றுவிடும் வியாபாரிகள், உருளையை மூட்டை மூட்டையாக வாங்கி, அவற்றை பொதுவெளியில் கொட்டி, பெரியது, சிறியது, நடுத்தரமானது என்று தரம் பிரிப்பார்கள்.

காலையில் விடியும் நேரம் வரை உருளைப் பிரிப்பு நடக்கும். பின்பு அதனை தரத்துக்கேற்ப பிரித்து தனித்தனி மூட்டையாக கட்டி அதனை வண்டியில் எடுத்து வரும்போது முந்தைய நாள் உருளை வாடிவிடும்.

ஆனால், ஒரே ஒரு வியாபாரி மட்டும் தரத்தையும் பிரித்து, ஃப்ரெஷ்ஷான உருளையோடு சந்தைக்கு வந்து விற்று அதிக லாபம் பார்த்து வந்தான்.

இத்தனைக்கும் அவன் விவசாயிகள் கூடைகளில் எடுத்துக் கொண்டு வரும் உருளையை அப்படியே டிராக்டர் வண்டியில் கொட்டச் சொல்லிவிடுவான்.

ஆற்றுமணலை அள்ளிச் செல்வது போல அவன் உருளையை எடுத்துச் சென்றாலும் அதற்குத்தான் நல்ல விலை கிடைத்து வந்தது.

அந்தத் தொழில்நுட்பத்தை அவன் மற்ற யாருக்கும் சொல்வதுமில்லை. வண்டியில் ஏற்றிக் கொண்டு வரும் உருளையை வழியிலேயே தரம் பிரிக்கிறானோ என்று சக வியாபாரிகள் வேவு பார்த்தும் விட்டார்கள். அப்படியும் ஏதும் நடக்கவில்லை. ‘புதிதாக வரும் உருளையை வண்டியில் ஏற்றுகிறான். சந்தைக்கு வந்து யார் எந்தத் தரத்தைக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற வகையில் விலை வைத்து விற்கிறான். எப்படி? என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

அந்த வியாபாரியின் மகனுக்கும் இதே சந்தேகம் எழுந்தது. “எப்படி அப்பா உங்களால் மட்டும் வெற்றிகரமாக வியாபாரம் செய்ய முடிகிறது?”

கேட்டது மகனாயிற்றே! அப்பா மறைக்க முடியுமா.?

“தான் எல்லா உருளைக் கிழங்கையும் லாரியில் ஏற்றிக் கொண்டு நகருக்கு செல்லும் பாதையில் பள்ளம் மேடுகள் இருக்கிறதல்லவா? அதில் குலுங்கிக் குலுங்கி வரும்போது, சிறிய உருளைகள் இடைவெளிக்குள் சிக்கி, இயல்பாகவே கீழே கீழே போய்விடும் நடுத்தர உருளைகள் இடையில் தங்கும்.

பெரிய உருளைகள் குதித்துக் குதித்து எழும்பி வந்து மேலே நிற்கும் சந்தைக்கு வரும்போது, இயற்கை பிரித்துத் தந்த தர வகையை அதற்கேற்ற வியாபாரிகளுக்கு விற்றுவிடுவேன்.

தரம் பிரிக்கும் நேரம், மூட்டை கட்டும் செலவு, ஏற்றுக் கூலி அனைத்துமே மிச்சம். தரமாக உருளை கிடைப்பதால், மக்களும் சற்று கூடுதல் விலை கொடுத்தேனும் வாங்கிச் செல்லத் தயாராகி விடுகின்றனர்.

இதுதான் மகனே அதிக வருமானம் பெறும் வியாபார ரகசியம்! கிடைக்கும் சந்தர்ப்பங்களை இனம் கண்டு கொண்டு அதற்கேற்ப செயல்படுவதும். ஒரு வகையில் வியாபார தந்திரம் தான் மகனே!” என்றார்.

இயல்பு, சுற்றுச்சூழல், பயணம் இவற்றையும்கூட நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மால் வெற்றி பெற இயலும்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment