– மதுரையில் மஞ்சப்பை பரோட்டா அறிமுகம்
பாலிதீன் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, மதுரையில் உணவகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பை வடிவ பரோட்டா அப்பகுதி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த விழிப்புணர்வை கையிலெடுத்துள்ள மதுரை, அழகரடி முக்குக்கடை கே.சுப்பு உணவக உரிமையாளர் நவநீதன் அந்த எண்ணம் தோன்றியதை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
“பாலிதீன் பைகளைத் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிந்தித்து, மஞ்சள் நிற பை வடிவில் பரோட்டா அறிமுகம் செய்துள்ளோம்.
இரண்டு சாதாரண பரோட்டா அளவில், பை வடிவ பரோட்டாவை தயாரித்து 20 ரூபாய்க்கு விற்கிறோம்.
வாடிக்கையாளர் வாங்கும் ஐந்து பரோட்டா பார்சலுக்கு ஒரு முகக் கவசம், ஒரு பிரியாணிக்கு இரண்டு முகக் கவசங்கள், கிரில் சிக்கனுக்கு நான்கு முகக் கவசங்கள் இலவசமாக தருகிறோம்.
உணவுகளின் அளவு கூடினால், அதற்கு ஏற்றபடி முகக் கவசங்களை கூடுதலாக பெறலாம்.
இன்று முதல் 15 நாட்களுக்கு, ‘பார்சல்’ வாங்குவோருக்கு 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு மஞ்சப்பை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன்மூலம் மக்கள் பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவது தவிர்ப்பது குறித்து ஓரளவு விழிப்புணர்வு உருவாகும்”.
நல்ல நோக்கத்தோடு உருவாகும் விழிப்புணர்வு எண்ணங்களை ஆதரிப்போம், ஊக்குவிப்போம்!