நடிகை சமந்தா நெகிழ்ச்சி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகன். மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் ’யசோதா’ படத்திலும் நடித்து வருகிறார். ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் சமந்தா.
தனது காதல் கணவர் நாக சைதன்யாவை கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்தார் சமந்தா. இருவரும் முறைப்படி விவாகரத்து முடிவை அறிவித்தனர். பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
சமீபத்தில், ‘புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய, ’ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். இதுவும் வைரலானது.
இந்நிலையில், மனநல மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, சமீபத்தில் மன அழுத்தத்தில் இருந்து தான் மீண்டது எப்படி என்று விளக்கியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “மனப் பிரச்சினையில் இருக்கும்போது அதற்கான உதவியை நாடுவதில் உங்களுக்கு எந்தத் தடையும் இருக்க வேண்டாம்.
எனக்கு அப்படியான பிரச்சினை ஏற்பட்ட போது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களால் மட்டுமே அதிலிருந்து நான் வெளியேறினேன்.
நோயால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவர்களிடம் எப்படி செல்கிறோமோ, அதுபோலவே மனநலம் பாதிக்கப்பட்டாலும் செல்ல வேண்டும்.
என் வாழ்வின் அடுத்தக் கட்டத்தில், வெற்றிகரமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் வலிமையாக இருப்பது மட்டும் காரணமல்ல, என்னைச் சுற்றி இருப்பவர்களின் உதவியும் தான்.
ஏராளமானோர் உதவி செய்வதற்காக தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு வருகிறார்கள். நாம் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டிய நேரம் இது” என்று சொன்னார்.