கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!

– சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன.

பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர் எஸ்.சுந்தர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் குறித்து விளக்கமளித்த ஐஐடி கணிதவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயந்த் ஜா, “தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மேலும் எத்தனை பேருக்கு தொற்றை பரப்புகிறார் என்பது ‘ஆர்.ஓ. மதிப்பு’ என அழைக்கப்படுகிறது.

இந்த மதிப்பு கடந்த டிசம்பர் 25 முதல் 31-ம் தேதி வரை 2.9 ஆக இருந்தது. இந்த மதிப்பு ஜனவரி 1 முதல் 6-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 4 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பரவக்கூடிய அபாயம், தொடர்பு வீதம், தொற்று நிகழக்கூடிய கால இடைவெளி ஆகிய 3 காரணிகளைப் பொருத்ததே இந்த ஆர்.ஓ. மதிப்பு.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தி வைத்தல், கடும் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் தொடர்பு வீதம் குறைந்து, அதன் காரணமாக ஆர்.ஓ. மதிப்பும் குறையும்.

மக்களிடையே சமூக இடைவெளியை அதிகரிக்கும் விதமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆர்.ஓ. மதிப்பு மாறக்கூடும்.

கடந்த 2 வார நிலைமையை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், எங்கள் கணிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் 3-வது அலை உச்சத்தை அடையும்.

முந்தைய 2 அலைகளை விடவும் இது பரவும் வேகம் மிக அதிக அளவு இருக்கும். ஆனால், முந்தைய அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment