விபத்திலிருந்து மீண்டு வந்த அஜித்!

– இயக்குநர் வினோத்!

*

வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது தினகரன் – பொங்கல் மலர் 2022.

224 பக்கங்களில் சர்க்கரைப் பதமாக நிறைய கட்டுரைகள், புகைப்படங்கள் என்று கன கச்சிதம்.

பல கட்டுரைகள் இருந்தாலும், “பழையனூர் நீலி பேயா? பெண்ணா?” என்கிற விறுவிறுப்பான கட்டுரையைத் தந்திருக்கிறார் கே.என்.சிவராமன். நீலி கதை தொடர்பாக ஆய்வு நோக்கில் புதிய செய்திகளை முன்வைத்திருக்கிறார் சிவராமன்.

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாங்காடு கிராமத்தில் இருக்கிற ஈசன் கோவிலில் இருக்கிற நீலியின் கதை சேக்கிழார் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கன்னடத்திலும், மலையாளத்திலும் சொல்லப்படும் நீலிக்கான நிஜக்கதை என சொல்லப்படும் கதையில்  நீலி சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் சென்று நீலியை ஏன் பேயாக மாற்றி எழுதினார்கள் சம்பந்தரைப் போன்றவர்கள்?

இதில் உள்ள  உள்நோக்கம் என்ன? என்பதையும், ஆங்கிலேயர் காலத்தில் இங்கிருந்து பல ஈமப் பேழைகள் கண்டு எடுக்கப்பட்டதாகவும் சபாபதி தேசிகர் எழுதிய  ‘திருவாலங்காட்டு வரலாறு’ என்ற நூலை ஆதாரமாக வைத்துப் பல கேள்விகளை எழுப்புகிறது சிவராமனின் இந்தக் கட்டுரை.

வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆவணக் கட்டுரை இது.

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் மதுரைக்கு அருகே சாம்பல் நத்தம் என்ற சாமநத்தம் கிராமத்தில் ஏராளமான சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுவதும், அங்கும் விரிந்த மணற் பரப்பில் பானை ஓடுகள் காணக் கிடைப்பதும், அருகில் திருஞானசம்பதருக்குக் கோவில் இருப்பதும், மீனாட்சியம்மன் கோவிலுடன் இந்த இடம் இணைக்கப்பட்ட ஒரு கதை மரபு இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

சிறுவாணி உருவான கதை, ஓவிய அரண்மனை என்று பல சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய மலரில் அஜித் பொங்கல் என்ற ’வலிமை’ பட இயக்குநர் வினோத்துடன் சந்திப்பு – சினிமா ரசிகர்களுக்கு ஒரு  ‘அப்டேட்’ விருந்து.

அந்தச் சந்திப்பில் அஜித்துக்குப் படப்படிப்புத் தளத்தில் பைக்கில் அஜித் சென்ற போது நடந்த திகிலான விபத்து பற்றியும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“அப்போ வழியில் அந்த இத்தாலியன் பைக் உருக்குலைந்து கிடந்தப்போ தான் விபத்து நடந்தது எனக்குத் தெரிஞ்சது. அந்த பைக் இல்லாம மறுநாள் எப்படி ஷூட்டிங் நடத்துறதுன்னும் ஒரே கவலை. அஜித் சாருக்கு அடிப்பட்டது தெரிஞ்சதும் இன்னும் கவலையாப் போச்சு” என்று சொல்லிவிட்டு,

“அஜித் சார் அதே உத்வேகத்தோடு மறுநாள் நடிச்சதை என் வாழ்நாள்லே மறக்க முடியாது” என்று நீள்கிற வினோத்தின் சந்திப்புக் கட்டுரை மலருக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

150 ரூபாய் விலையுள்ள மலரை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

தினகரன்-2022 பொங்கல் மலருடன் ரூ 406 மதிப்புள்ள இரண்டு பொருட்கள் கூடவே கிடைப்பது போனஸ்!

Comments (0)
Add Comment