சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!

– காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

* மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், காவல்துறையினர் வாகன சோதனையின் போது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், நீதித்துறை, உள்ளாட்சி அமைப்பு, வங்கி ஊழியர்களிடம் அடையாள அட்டைகளை பார்வையிட்டு அனுப்ப வேண்டும்.

பால், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவம் மற்றும் அது சார்ந்த அனைத்து பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரிடம், அடையாள அட்டையை பார்வையிட்ட பின் உடனடியாக அனுப்ப வேண்டும்.

* சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் விவசாய விளைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக்கோழி, முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது. இது, மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் பொருந்தும்.

* தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவன ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்துச் செல்ல வேண்டும்.

* முழு ஊரடங்கு நாளில், ஓட்டல்களில் காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பார்சல் சேவையை மட்டும் அனுமதிக்க வேண்டும். இந்த நேரத்தில், உணவு டோர் டெலிவரி செய்யும் ஊழியர்களை அனுமதிக்கலாம்.

* மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வுகளுக்கு செல்வோர், அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்க வேண்டும். முழு ஊரடங்கு நாளில், யு.பி.எஸ்.சி., தேர்வு நடத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பொதுமக்கள் பஸ், ரயில், விமான நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். சொந்த மற்றும் வாடகை வாகனத்தில் செல்லவும் அனுமதிக்கலாம்.

* கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்வோரை அனுமதிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடித்து சொந்த ஊர் திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

* சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

* வாகனத்தை சோதனை செய்ய வேண்டி இருந்தால் கையுறை அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* வெளிச்சம் உள்ள பகுதிகளில் வாகன சோதனை செய்ய வேண்டும். தற்காலிக தடுப்புகள் அமைத்து, ஒளிரும் மேல்சட்டை அணிந்து, பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment