புரட்சித்தலைவரின் மனதில் இடம் பெற்ற மரியாதைக்குரியவர்களில் மிக முக்கியமான ஒரு மாமனிதர் கலைவாணர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதுவும் குறிப்பாக நகைச்சுவை கலைஞர்கள் வரிசையில் கலைவாணர் அவர்களுக்கு மிக முக்கிய இடமுண்டு. நல்ல பல சமுதாயக் கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்ன மாபெரும் கலைஞர்.
எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான விஷயம் அவர் ஒரு சிறந்த மனிதர் மிகப்பெரிய வள்ளல்.
தன் வாழ்க்கையில் இறுதி நாள் வரை இருப்பதை கொடுத்துவிட்டுதான் அவர் மறைந்தார் என்பது வரலாற்றுச் செய்தி. கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் புரட்சித்தலைவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு சகோதரனாகவே அவரைப் பாவித்தவர். ‘ராமச்சந்திரா’ என்று அன்பொழுக அழைப்பார்.
அதேப் போல தலைவரும் கலைவாணர் மேல் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையே நான் கலைவாணர் அவர்களிடம் கற்றுக் கொண்டது என்று பல முறை தலைவர் சொல்லி இருக்கிறார்.
ஆரம்ப காலக் கட்டங்களில் கலைவாணர் அவர்கள் புரட்சித்தலைவரின் திரைப்பட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி உள்ளார். அந்த நன்றியை தலைவர் ஒரு போதும் மறந்ததே இல்லை.
என்.எஸ்.கே அவர்களின் சகோதரர் திரு.திரவியம் அவர்களுக்காக ‘ஒரு தாய் மக்கள்’ என்ற படத்தை நடித்துக் கொடுத்தார். அந்தப் படம் திரு.திரவியம் அவர்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.
இங்கே மிகவும் முக்கியமாக பதிவு செய்ய வேண்டியது என்னவென்றால் தன் மறைவிற்குப் பிறகு தன் குடும்பத்தை தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை தலைவர் மேல் வைத்திருந்தார் கலைவாணர் அவர்கள்.
கலைவாணர் அவர்கள் தன்னுடைய இறுதி நாட்களில் மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க தலைவர் சென்றபோது இதை கலைவாணர் அவர்கள் நேரிடையாகவே கூறியதாக அன்று செய்தி வெளியானது.
அன்று வெளியானது வெறும் செய்தியல்ல. புரட்சித் தலைவர் அவர்கள் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார்.
என்.எஸ்.கே. அவர்களின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் புரட்சித்தலைவர் அவர்கள் கல்விக்கு வேண்டிய உதவிகள் மற்றும் தன் சொந்தப் பணத்தில் திருமணங்கள் செய்து வைத்தார். அவர்களில் சிலருக்கு வேலையும் வாங்கித் தந்திருக்கிறார்.
குறிப்பாக, என்.எஸ்.கே அவர்களின் மருமகன் திரு.வரதராஜன் அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார். தொழிற்கல்வித் துறையின் இயக்குநராக அவர் பதவி வகித்தார். புரட்சித்தலைவரால் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டார்
எல்லாவற்றிற்கும் மேலாக, நாகர்கோயிலில் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் கலைவாணருக்கு சிலை நிறுவி அந்த மாபெரும் கலைஞருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் மரியாதையும் புரட்சித்தலைவர் அளித்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது.
கலைவாணர் அவர்களின் வீடு ஏலத்திற்கு வந்த போது, அதை புரட்சித்தலைவர் மீட்டு அவர்களிடமே திருப்பி அளித்தார்.
இதேப் போல் அக்காலத்தில் தமிழ்த் திரை உலகில் கோலோச்சிய ஏழிசை வேந்தர் என அழைக்கப்பட்ட திரு எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரின் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார். திருச்சியில் உள்ள அரசு கலையரங்கிற்கு தியாகராஜ பாகவதர் கலையரங்கம் என்று பெயர் சூட்டினார்.
திரு.பி.யூசின்னப்பா அவர்களின் குடும்பத்தினரின் கல்வி, மற்றும் திருமணங்களுக்கான முழுச் செலவையும் புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார் என்பது மறக்க முடியாத உண்மை.
மூத்த கலைஞர்களிடம் காட்டுகின்ற மரியாதையென்பது வெறும் வார்த்தைகளில் காட்டுவது மட்டுமல்ல.
அவர்களின் வாழ்க்கையிலும் அதைக் காட்ட வேண்டும் என்பதை இந்தக் கலை உலகிற்கு புரட்சித்தலைவர் அவர்கள் வழிகாட்டியிருக்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
– நன்றி: எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர் கே.மகாலிங்கம் எழுதிய ‘சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்’ நூலிலிருந்து ஒரு பகுதி…
நூல் கிடைக்குமிடம்:
மூன்றெழுத்து பதிப்பகம்,
54/29, 3வது பிரதான சாலை,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28
பேச – 94440 19079 மின்னஞ்சல் – sarg957@gmail.com