7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.

தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.

இந்நிலையில், லேசான அறிகுறி அல்லது அறிகுறிகள் அற்ற தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, “வீட்டுத் தனிமையில் உள்ளோர் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாது இருந்தால், தொற்று உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து ஏழு நாட்களுக்கு பின் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்களாக கருதப்படுவர். அதன்பின் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.

கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஏழு நாட்களுக்கு பின், மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லை எனில் தொற்றுப் பரிசோதனை தேவையில்லை. அவர்கள் வீட்டுத் தனிமையில் உடல்நிலையை கண்காணித்து வந்தால் போதும்.

டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் ரத்த பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை எடுக்கக் கூடாது.

நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சை முறை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, ஒருவருக்கு பரிந்துரைத்த சிகிச்சை முறைகள் அல்லது மருந்து சீட்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகங்கள் வீட்டு தனிமையில் உள்ளோரை கண்காணிக்க வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள போதிய வசதிகள் உள்ளனவா என்பதை சுகாதாரப் பணியாளர்கள் நேரில் சென்று மதிப்பிட வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட துவங்க வேண்டும். அதன் தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த 73 வயது நபருக்கு கடந்த மாதம் 15ல் கொரோனா தொற்று உறுதியானது. பத்து நாட்களில் குணமடைந்த அவரது மரபணு வரிசைமுறை பரிசோதனையில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்றில் இருந்து மீண்டாலும், அதனால் ஏற்பட்ட ‘நிமோனியா’ போன்ற பாதிப்புகளால் அவர் நேற்று உயிரிழந்தார். நம் நாட்டில், ஒமைக்ரான் வகை தொற்றின் முதல் மரணமாக இது பதிவானது.

நாடு முழுதும், 15 – 18 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி 3ம் தேதி துவங்கியது. மூன்றாவது நாளான நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறார்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது.

இந்த தகவலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். தகுதியுடைய சிறார்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது.

நம் நாட்டின் பெரு நகரங்களிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, பொதுமக்கள் சமூக விலகல், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயது கடந்தோருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி ‘டோஸ்’ செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment