ஆளுநர் உரையும், டி.ஆர்.பாலுவின் பேச்சும்!

ஒரே நாளில் காலை நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரான ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். வழக்கப்படி மரபான முறையில் மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் வாசித்தாக வேண்டும். அதை வாசிக்க ஆளுநர் தன்னிச்சையாக மறுத்துவிட முடியாது.

வேண்டும் என்றால் சில சின்ன மாற்றங்களை, முன்பு ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் “எனது அரசாங்கம்” என்றிருந்ததை, “இந்த அரசாங்கம்” என்று திருத்தி வாசித்ததைப் போலச் செய்யலாம்.

அவ்வளவு தான்.

அது பெரும்பாலும் ஆளும்கட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் உரையாகத் தான் இருக்கும். அதைத் தான் வாசித்திருக்கிறார் ஆளுநர் ரவியும்.

“மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, நாட்டிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம்” என்று முடிந்திருக்கிறது ஆளுநர் வாசித்த அந்த உரை.

சர்ச்சைக்குரிய நீட் தேர்வைப் பற்றிய குறிப்பும் அந்த உரையில் இருந்தது என்பது தான் சிறப்பு.
“நீட் தேவையற்றது என்பதை வலியுறுத்துவோம்” – என்பது ஆளுநர் வாசித்த உரையில் இருக்கும் ஒரு வாசகம்.

ஆனால் அதே நாள் மாலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு, “நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை முடக்கி வைத்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அதன் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்வது கண்டனத்திற்கு உரியது. இதற்கு முழுக்காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

ஒரே நாளில் ஆளுநர் தொடர்பான இரு நிகழ்வுகள் இப்படி நடந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

‘ஆளுநர் பதவி’ குறித்துப் பல விமர்சனங்களை இதற்கு முன்பு பல தடவைகள் – அண்ணா காலத்திலிருந்தே முன் வைத்திருக்கிறது தி.மு.க.

‘ஆட்டு தாடியுடன்’ ஒப்பிட்டு விமர்சனம் வலுத்திருக்கிறது. ஆளுநருக்குப் பல முறை கருப்புக் கொடி காட்டியிருக்கிறது. இருந்தாலும், தி.மு.க தரப்பில் புதிதாக பொறுப்புக்கு வந்த ஆர்.என்.ரவி விஷயத்தில் சற்று சாந்தமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்திருக்கிறது தி.மு.க.

ஆனால் சட்டென்று அந்த நிலை மாறி, ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையில் கடுமை காட்டுகிற அளவுக்கு தி.மு.க நடந்திருக்கிறது.

கட்சித் தலைமையின் அனுமதி பெறாமலா தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு பேசியிருப்பார்? அவருடைய இந்தக் கருத்தை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லி, ஒதுக்கி விட முடியுமா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் ஆளுநரின் செய்கை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தாலும், அவரைப் பதவி விலகச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையைக் கண்டித்து அ.தி.மு.க.வும், ஆளுநரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெளிநடப்புச் செய்திருக்கின்றன.

அண்மையில் கூட அ.தி.மு.க.வினர் ஆளுநரைச் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்து வருவதாகக் குற்றம் சாட்டிப் புகார் கொடுத்துள்ள நிலையில், தி.மு.க.வின் ஆளுநர் குறித்த நிலைப்பாடு பல்வேறு அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது.
*
யூகி

Comments (0)
Add Comment