பண்டிகைகளா? கொரோனா பாதுகாப்பா?

கொரோனா மூன்றாவது அலை சமூகத் தொற்றாகப் பெரும் வீச்சைப் போல உலகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் பலவற்றின் இயல்பு வாழ்க்கையை முடக்கியிருக்கிறது கொரோனா. இது தவிர பிரான்சிலும், இஸ்ரேலிலும் புதுப்பது கொரோனாக்கள் பிறந்து பெயர் சூட்டப்பட்ட நிலையில் பரவிக் கொண்டிருக்கின்றன.

ஊடகங்களில் கொரோனா குறித்த செய்திகள் மறுபடியும் பரவி பீதியூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் கொரோனாத் தொற்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் – குறிப்பாகச் சென்னையில்  கொரோனா பரவுவது திரும்பவும் கூடிக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பொங்கல், போகி, காணும் பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கி வருகின்றன.

இதையொட்டி லட்சக்கணக்கானவர்கள் தமிழகத்தில் பயணிக்கக் காத்திருக்கிறார்கள். ஒன்று கூட இருக்கிறார்கள்.

தமிழர்களின் திருவிழாவான இந்த நாட்களின் போது, ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தமிழ்நாடு அரசு ஒருவேளை யோசிக்கலாம். மக்களின் எதிர்வினை பற்றியும் சிந்திக்கலாம்.

ஒருபுறம் முகக் கவசம், தடுப்பூசி, சமூக இடைவெளி பற்றி எல்லாம் பேசிவிட்டு, அதே மக்களை விழா என்கிற பெயரில் மந்தை மாதிரி ஓரிடத்தில் திரட்டுகிற வேலைக்கு அரசே துணை போகக் கூடாது.

அரசியல் கட்சிகளோ, அரசோ சமூக இடைவெளியை மீறி மக்களை ஓன்றுபடுத்தித் தொற்றைப் பரப்பக்கூடாது.

விழா முடியும் வரை எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்காமல், விழாக் காலம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தால், தொற்று மேலும் பரவுவதற்கு நாமே வழிவகுத்துக் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

வடக்கில் உள்ள பல மாநிலங்களில் திருவிழாக் காலம் கொரோனா தொற்று மேலும் பரவுவதற்கே காரணமாய் அமைந்திருக்கிறது.

பண்டிகைகளா? மக்கள் பாதுகாப்பா?

எது முக்கியம்?

-யூகி

05.01.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment