சுயம் தொலைக்கும் அம்மாக்கள்!

நூல் வாசிப்பு: கனவு மெய்ப்படட்டும்

பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது என்கிறது நூலின் முன்னுரை. கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் செயலாற்றும் நூலாசிரியர் ரமாதேவி, அனைத்துலகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு மாநிலத் தலைவர் மற்றும் சார்க் நாடுகள் பெண்கள் இணையத்தின் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்துவரும் அவர் எழுதிய நூல்தான் இது.

பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், “என் கற்பனையில் விளைந்ததல்ல. என் நட்பிலும் உறவிலும் நான் பார்த்து கேட்டு அனுபவித்து என் மூளையில் பதிந்துபோன பெரும்பான்மைப் பெண்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பே” என்று குறிப்பிடுகிறார் ரமாதேவி இரத்தினசாமி.

‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக நூலில் இருந்து ஒரு கட்டுரையை இங்கே வழங்குகிறோம்…

அ….ம்…மா..  வார்த்தையை உச்சரிக்கும் போதே அன்பு, கருணை, தெய்வம், தியாகம் புனிதம்… போன்ற சொற்களால் மூளை நிரம்புகிறது தானே…. தாய் என்ற சொல்லுக்கு முதன்மை என பொருள் தருகிறது கௌரி தமிழகராதி… ஆனால் யதார்த்தத்தில் தாய் என்ற உறவை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்?

தனக்காக எல்லாவற்றையும் அம்மா தியாகம் செய்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதுதான் தாயன்பு என்றும் பெயர் சூட்டிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் அன்பெனும் போர்வையில் அம்மாக்கள் இங்கு குடும்ப அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். அவளுடைய நேரமும், உழைப்பும் குழந்தைகள் மற்றும் கணவன் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது.

ஏனெனில் தனக்கென சொந்த விருப்பு வெறுப்புகள் இல்லாதிருப்பதே தாய்மையின் இலக்கணமாக வரையறுக்கப் பட்டு, சமூகப் பயிற்று முறையாக நம் புத்தியில் செலுத்தப் பட்டுள்ளது.

திருமணம், குழந்தை என்றானபின் பெண்ணிற்கான வேறொரு உலகம் திறக்கப்படுகிறது. அங்கு அவளுக்கென்று சொந்த விருப்பங்களோ, தனிப்பட்ட  கருத்துக்களோ, ஆழ்ந்த நட்புக்களோ  இல்லை, அதுமட்டுமல்ல, தன் திறனை வெளிப்படுத்த பொழுதுகளும் இல்லை.

திருமணத்திற்கு பின்னும், குழந்தைகள் வருகைக்குப் பின்னும் ஆண் தன் இயல்பான வாழ்க்கையை நண்பர்களுடனும், இன்னபிற சந்தோசங்களுடனும் கொண்டாட்டமாய் தொடர, பெண் கடுமையான வேலைப் பளுவிலும், புதிய உறவுகளைக் கையாளத் தெரியாத   அழுத்தத்திலும், மனச்சிக்கலுடன் போராடி, உறவுகளுக்கு சண்டைக்காரியாகி தன் வாழ்வைத் தொடர்கிறாள்.

குழந்தைகள் வளர, வளர சமூகம் தயாராய் எடுத்து வைத்திருக்கும் புனிதமெனும் முகமூடியை அணிந்து மெல்ல மெல்ல புனித பிம்பமாய் மாறுகிறாள்.

ஒற்றைப் பெற்றோராய் பல்வேறு சமூகப் போராட்டங்களுக்கிடையே குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிக இளம் வயது தாய்களும் இதனுள் அடக்கம்.

சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென்ற கட்டாயத்திற்கும், இயல்பான மனித ஆசாபாசங்களுக்கும் நடுவே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த  அம்மாக்கள்.

அறிவை மதிப்பெண்களால் அளக்கும் இன்றைய கல்விமுறையில், குழந்தைகள் அம்மாக்களை   பணியாளாக நினைத்து அதிகாரம் செய்கின்றனர். கத்துகின்றனர். அதட்டுகின்றனர்.

அப்பாவுடன்  சேர்ந்து குழந்தைகளும் அம்மாக்களை படிக்காதவளாக, முட்டாளாக, இன்றைய ட்ரெண்டிங் தெரியாத பேதையாக சித்தரித்து கேலி செய்வதை பல வீடுகளிலும் பார்க்கலாம். அதை நகைச்சுவை எனக் கடந்து போக முடியவில்லை.

இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தில் நடுத்தர வயது கதாபாத்திரத்தில் மிக அழகாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார் ஸ்ரீதேவி.

ஆங்கிலம் தெரியாத காரணத்துக்காக கணவனிடமும், மகளிடமும் அவமானங்களை சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவியாய், ஒரு தாயாய் தாழ்வுணர்ச்சியில் தத்தளிப்பார் ஸ்ரீதேவி. அப்படத்தின் காட்சிகள் பல வீடுகளிலும் இயல்பாக நடப்பதைக் காணலாம்.

எழுத்தாளர் சூடாமணியின் ‘செந்திரு ஆகிவிட்டாள்‘ என்ற படைப்பு பெண்ணின் நுட்பமான உளவியலை பேசுகிறது. வெகுநாட்களுக்குப்பின் கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீட்டில் சீராடும்  கனவுகளுடன் வருகிறாள் மகள்.

தாய் செந்திரு சந்தோசமாய் வரவேற்கிறாள், அவள் விரும்பியபடி சமைத்துத் தருகிறாள், பேரக்குழந்தைகளை கொஞ்சுகிறாள்.

ஆனாலும் கூட மகளுக்கு தாயிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது, ஏனெனில் இதுவரை அவள் பார்த்த அவளது தாய் எண்ணெய் வழியும் கூந்தலுடன் கசங்கிய புடவையில் கணவனுக்கும், தனது ஐந்து பிள்ளைகளுக்கும் சேவகம் செய்து கொண்டேயிருப்பாள்.

ஆனால் இப்பொழுதோ குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறாள், இலவசமாக தையல் பயிற்சி கொடுக்கிறாள், குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு எடுக்கிறாள்.

சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிராமப்புற பெண்களுக்கு உதவி செய்கிறாள். கசங்காத, மடிப்புக் கலையாத காட்டன் புடவையில், அழகான கொண்டையுடன் மிடுக்காக நடக்கிறாள்.

நிறைய புத்தகங்கள் படிக்கிறாள். அதைப்பற்றி நுணுக்கமாக அப்பாவிடம் விமர்சனம் செய்கிறாள்.

அத்தனைக்கும் தந்தை தரும் ஒத்துழைப்பு இவளுக்கு எரிச்சலைத் தருகிறது. தாயின் இந்தப் புதிய வடிவம் அவளுக்கு பிடித்தமானதாக இல்லை”

“வழக்கமான அம்மாவாக சிவனேனு இல்லாமல். இதென்ன புதுப் பழக்கம், இதெல்லாம் இவளுக்கு தேவையா” எனக் குமுறுகிறாள்.

அம்மாவின் மாற்றம் அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.

அம்மாவுக்கு தையல் தெரியுமா? பாட்டு சொல்லிக் கொடுக்கும் அளவு அம்மா சங்கீதத்தில்  பாண்டித்யம் பெற்றவளா… ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு… தன்னுடைய பழைய அம்மாவை நினைத்துப் பார்க்கிறாள்.

உடன்பிறந்த ஐவரும் சென்னைக்கு  அம்மா வீட்டிற்கு வருவார்கள்.

ஐவரும் எந்த  வேலையும்  செய்யாமல் உட்கார்ந்து அரட்டை அடிக்க, அம்மா நேரா நேரத்திற்கு சமைத்துப் போடுவாள்.

மாலையானால் பார்க், ஷாப்பிங், சினிமா என சுற்ற அம்மா மட்டும் பேரக் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பாள் கசங்கிய உடையுடன், கலைந்த கூந்தலுடன்.

இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வந்தாலும், விழித்திரிந்து மலர்ந்த முகத்துடன் கதவு திறந்து, உணவு பரிமாறுவாள். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த அந்த அம்மாவுடன் தனக்கென தனி அக்கறை எடுத்துக் கொள்ளும் இந்த அம்மாவை ஒப்பிட்டு தவிக்கிறாள்.

மனைவியை பாட்டு வகுப்பு எடுக்க அனுப்பி விட்டு சமையல் செய்து கொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்க கோபமாய் வருகிறது… அப்பாவிடம் சிடுசிடுக்கிறாள்.

“அம்மா இவ்வளவு மோசமான மாறுவா னு நான் எதிர்பாக்கவே இல்லை, புருசனை, பிள்ளைகளை கவனிப்பதை விட்டு விட்டு அப்படி என்ன தையல் வகுப்பும், பாட்டு வகுப்பும் வேண்டிக் கிடக்கு?” என படபடக்கிறாள்.

அப்பா சிரித்துக்கொண்டே அவள் இதுவரை மனைவியாகவும், அம்மாவாகவும், பாட்டியாகவும் தன் கடைமைகளை எல்லாம் முழு நிறைவுடன் செய்துமுடித்துவிட்டாள்.

இப்போது தான் அவள் செந்திருவாகி (சுயமாய்) இருக்கிறாள்… அவள் அவளாக இருக்கிறாள் என்று கூறி புன்னகைக்கிறார்.

பெண்கள் தனக்கென தனி அக்கறை எடுத்துக் கொள்வதை பிள்ளைகள்கூட விரும்புவதில்லை என்பதும் வாழ்நாளெல்லாம் பிறருக்காக வாழ்தல் என்பதைக் கடந்து தனக்கான தேடலைக் கண்டடைதலே அவள் அவளாக வாழ வழி வகுக்கும் என்பதுமே சூடாமணி நமக்கு விட்டுச் சென்றுள்ள சூட்சுமச் செய்தி.

கனவு மெய்ப்படட்டும் : ரமாதேவி இரத்தினசாமி

வெளியீடு: சுவடி பதிப்பகம்,
142
வேளச்சேரி முதன்மைச் சாலை,
பூண்டி புதூர்,
தாம்பரம் கிழக்கு,
சென்னை – 59 /
விலை ரூ. 100

  • பா. மகிழ்மதி
Comments (0)
Add Comment