அஜித்தின் முதல் பட வாய்ப்பும், அப்போது நடந்த விபத்தும்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 3

சின்னச் சின்ன விளம்பரப் படங்களில் அஜித் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் “உங்களுக்கு நல்ல ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் இருக்கு. நீங்க சினிமால ட்ரை பண்ணுங்க” என்று முதன்முதலில் அஜித் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

அஜித்தின் 20-வது வயதில் அவருக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்தது. தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் அஜித்தை ஹீரோவாக போட்டு ஒரு சின்ன பட்ஜெட் படத்தைத் தொடங்கினார். படத்தின் பெயர் ‘பிரேம புஸ்தகம்’.

அந்தப் படத்தின் டைரக்டர் கொல்லப்புடி ஸ்ரீனிவாச ராவுக்கும் அது தான் முதல் படம்.

கொல்லப்புடி மாருதிராவ்

விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விபத்தில் டைரக்டர் இறந்துபோனார்.

எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா இன்டஸ்ட்ரியில் இப்படி ஒரு ஆரம்பம் என்றால் எப்படி இருக்கும்?

ஆனால் அஜித் துவண்டுவிடவில்லை. நின்றுபோன படப்பிடிப்பு ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் தொடங்கியது.

இறந்துபோன இயக்குனர் ஸ்ரீனிவாசின் தந்தை கொல்லப்புடி மாருதிராவ் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி படத்தை முடித்தார்.

தன் முதல் படத்தை முடிக்க முடியாமல் பாதியில் இறந்துபோன தன் மகன் ஸ்ரீனிவாசராவ் நினைவாக, இப்போது வரை வருடாவருடம் சிறந்த அறிமுக இயக்குனருக்கு தன் மகன் பெயரில் நினைவு விருது வழங்கி வருகிறார் டைரக்டர் மாருதிராவ்.

‘பிரேம புஸ்தகம்’ 1993ம் வருடம் வெளியாகி நன்றாக ஓடியது.

‘பிரேம புஸ்தகம்’ வெளியாவதற்கு முன்னரே, தன் முதல் படமான ‘அமராவதி’ வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது. ‘தலைவாசல்’ என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் செல்வா தன் இரண்டாவது படமாக ‘அமராவதி’யை அறிவித்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக அவர் முதலில் புக் செய்தது அஜித்தை அல்ல. வேறு ஒரு புதுமுகத்தை ஹீரோவாகவும், சங்கவியை ஹீரோயினாகவும் முடிவு செய்து ஊட்டியில் 40 நாட்களுக்கு ஷெட்யூலும் போட்டாகிவிட்டது.

ஷூட்டிங் கிளம்ப ஒருசில நாட்களே இருந்த நிலையில் தான் அந்தப் படத்துக்கு ஹீரோ ஆனார் அஜித். இந்த வாய்ப்பு அஜித்துக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்!

அஜித்தின் முதல் தமிழ்ப் படத்தை இயக்கிய டைரக்டர் செல்வாவிடம் இதுபற்றி பேசியபோது, 23 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை நேற்று நடந்ததைப் போல கடகடவென விவரிக்கத் தொடங்கினார்.

இயக்குநர் செல்வா

“முதல் படம் ‘தலைவாசல்’ பெரிய ஹிட். ரெண்டாவது படமா ’அமராவதி’ கமிட் ஆனேன். அது ஒரு பக்காவான லவ் சப்ஜெக்ட். ஒரு புதுமுகம் ஹீரோவா பண்ணினா நல்லா இருக்கும்னு நினைச்சோம்.

நிறைய பசங்களை ஆடிஷன் செஞ்சு ஒரு பையனை செலக்ட் செஞ்சோம். ஆனா அந்தப் பையன் படம் முழுக்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவானானு எனக்கு மட்டும் ஒரு சின்ன நெருடல் இருந்துட்டே இருந்துச்சு.

ஷூட்டிங் கிளம்ப ஒரு வாரம் தான் இருக்கு. ட்ரெய்ன் டிக்கெட் கூட போட்டாச்சு. அப்ப தான் ’புத்தம் புது மலரே…’ ஸாங் ரெக்கார்ட் பண்ணோம். பாட்டை பாடி முடிச்சுட்டு வெளியே வந்த எஸ்.பி.பி. ஸார், “பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு… யார் நடிக்கப்போறானு” கேட்டார்.

என் மனசுல நெருடிக்கிட்டு இருந்த விஷயத்தை அவர்கிட்ட சொன்னேன்.

“தெலுங்குல பூர்ண சந்திரராவ் தயாரிப்புல ‘பிரேம புஸ்தகம்’னு ஒரு படத்துல புதுப்பையன் ஒருத்தன் நடிச்சிருக்கான். நல்ல ஸ்மார்ட்டா துறுதுறுன்னு இருக்கான். தமிழ் பையன் தான்னு சொன்னாங்க. நீங்க வேணா பூர்ண சந்திரராவ் ஆபீஸ் போய், படத்தோட ஆல்பத்தை பாருங்களேன்” என்று சொன்னார்.

அன்னைக்கே ஆல்பத்தை பார்த்தேன். அசந்துபோய்ட்டேன்.

அந்த நேரத்துல இந்தியில தொடர்ச்சியா லவ் சப்ஜெக்ட்ஸா வரும். ‘கயாமத் ஸே கயாமத் டக்’ போன்ற படங்கள் தமிழ்நாட்டுலயும் சூப்பர் ஹிட்டா ஓடின காலம் அது.

அந்தப் படத்துல ஆமிர்கான் அவ்ளோ ஸ்மார்ட்டா இருப்பார். தமிழ்ல இப்படி ஒரு ஹீரோ கிடைப்பாங்களானு நான் ஏங்கியிருக்கேன்.

அஜித்தின் ஆல்பத்தை பார்த்ததும், நாம நெனச்ச மாதிரி ஒரு ஹீரோ கிடைச்சாச்சுன்னு மனசுக்குள்ள விசில் பறந்துச்சு.

அப்ப மந்தைவெளியில இருந்தார் அஜித் சார். ஆபீஸ் வரவழைச்சு பேசினோம். அவரைப் பத்தி விசாரிச்சப்ப தன்னோட பைக் ரேஸ், கார் ரேஸ் கனவு பத்தி ரொம்ப ஆர்வமா பேசினார்.

கதையோட அவுட்லைன் சொல்லி, 40 நாட்கள் ஊட்டியில ஷூட்டிங்னதும் நான் ரெடி பாஸ்னு உற்சாகமா வந்து நின்னார்.

ஊட்டி வரைக்கும் அவரோட பைக்லயே வந்துட்டார்.

ஊட்டியில் ஒரு சாதாரண ஓட்டலில் தான் எல்லோரும் தங்கினோம். காலையில 5 மணிக்கே ரெடியாகிடுவார். செட்டில் எல்லாரிடமும் ரொம்ப கலகலப்பா, இயல்பா பழகுவார். அமராவதி ஸ்க்ரிப்ட் எழுதும்போது ஹீரோ பைக் வைத்திருப்பது போல எழுதவில்லை.

அஜித்தின் பைக் இன்ட்ரஸ்ட்டை பார்த்த பிறகு தான், ஹீரோ ஒரு பைக் மெக்கானிக் போலவும், அவரும் சங்கவியும் பைக்கில் சுற்றுவதைப் போலவும் சீன்கள் வைத்தோம்’’ என்று அமராவதி நாட்களை அசைபோட்டார் டைரக்டர் செல்வா.

திட்டமிட்டபடி 40 நாட்களில் ஊட்டியில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

ரஷ்களை போட்டுப் பார்த்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் பரம திருப்தி. படம் நன்றாகவே வந்திருந்தது.

கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு பர்சனாலிட்டியான ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அவரை ரசிகர்களுக்கு குறிப்பாக ரசிகைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் படுவேகமாக நடந்து கொண்டு இருந்தது.

இன்னொரு பக்கம் டப்பிங் வேலைகளையும் தொடங்கிவிட பரபரத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அஜித்துக்கு அந்த பயங்கரம் நிகழ்ந்தது!

(இன்னும் தெறிக்கும்…)

-அருண் சுவாமிநாதன்

01.01.2022    12 : 30 P.M

Comments (0)
Add Comment