லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார்.
பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே, அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கியக் காரணமாகும்.
பிரெய்லி, 6 புள்ளிகளை விரல் நுனியில் தொட்டு அறிந்து எழுத்துகளை புரிந்து கொள்ளும் முறையில் பார்வையற்றவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கினார். அப்போது அவருக்கு 15 வயது தான்.
இது அதற்கு முன்பிருந்த பார்வையற்றோருக்கான அனைத்து எழுத்து முறைகளையும் விட எளிதாகவும், சிறப்பாகவும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியதால் பிரெய்லி எழுத்து முறை உலகப் புகழ்பெற்றதாக மாறியது.
பிரெய்லி எழுத்துமுறை எந்த மொழிக்கும் சொந்தமில்லை. ஆனால் உலகின் பெரும்பான்மை மொழிகளில் அந்தக் குறியீடுகள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
பிரெய்லி குறியீட்டு முறை ஆங்கிலத்தில், அந்தந்த நாட்டு வழக்கத்திற்கேற்ப சில வித்தியாசங்களுடன் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக அமெரிக்க ஆங்கில வழக்கத்திற்கும், பிறநாட்டில் உள்ள ஆங்கில பயன்பாட்டிற்கும் வித்தியாசம் இருந்தது.
இந்த வேற்றுமை களையப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு உலகம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த ஆங்கில பிரெய்லி குறியீட்டு வழக்கம் ஏற்கப்பட்டது. அமெரிக்காவும், அதுவரை வழக்கத்தில் இருந்த அமெரிக்க பிரெய்லி எடிசனை மாற்றி ஒருங்கிணைந்த யு.இ.பி. (Unified English Braille-UEB). குறியீட்டை ஏற்றது.
உலக பிரெய்லி யூனியன் அமைப்பு, உலக அறிவுசார் சொத்துடைமை அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
பிரெய்லி என்பது ஒரு மொழியல்ல. அது பேசுமொழியாக இல்லை. பார்வையற்றவர்களுக்கான எழுத்துக் குறியீடு மொழியாக மட்டுமே உள்ளது. சைகை குறியீடு போலவே இதுவும் குறியீடாகவே ஏற்கப்படுகிறது.
பிரெய்லி மொழியில் 2 கிரேடு நிலைகள் உள்ளன. கிரேடு-1-ல் சுருக்கநிலைகள் எதுவுமில்லை. கிரேடு-2 நிலையில் எழுதும் போது இடத்தை குறைப்பதற்காக சுருக்க முறை பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல இசைக்குறியீடுகளை குறிப்பிடும் பிரெய்லி மியூசிக் என்ற குறியீட்டு மொழி உள்ளது.
ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது நமக்கு சாதாரணமான விஷயம். ஆனால் பார்வையற்றவர்களால் மற்றவர் உதவியின்றி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முடியுமா? என்றால் அதற்கும் சிறப்பு பிரெய்லி முறை உள்ளது.
இதற்காக அவர்கள் சிறப்பு கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு அச்சு எண்கள், எழுத்துகளை உயர்த்திக் காண்பிக்கும் வகையில் செயல்படும்.
ரெயில்கள், விமானங்கள் மற்றும் பெரிய கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் பிரெய்லி குறியீடுகளைப் பார்க்கலாம்.
பல்வேறு நாடுகளில் உணவு விடுதிகளிலும், பொருட்களின் லேபிள்களிலும், ஓட்டு எந்திரங்களிலும் கண்டிப்பாக பிரெய்லி எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
பிரெய்லி எழுத்துகளை அச்சிட நிறைய இடம் தேவைப்படும். ஏனெனில் பிரெய்லி குறியீடுகள், மற்ற மொழி எழுத்துகளை விட அதிக இடத்தை அடைப்பதாக இருக்கும், மேலும் குறித்த இடைவெளியும் அவசியமாகும். எனவே பிரெய்லி புத்தகங்களை அச்சிடுவது அதிக செலவு வைப்பதாக அமையும்.
பிரெய்லி எழுத்து முறையைப் பார்வை உடையவர்களும் கற்றுக் கொண்டு அதன் பயன்பாட்டை, சிறப்பை உணரலாம். அதுபற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கலாம். அதுவே பிரெய்லி தினத்தை முழுமைப்படுத்தும் செயலாகும்!
நன்றி: முகநூல் பதிவு
04.01.2022 12 : 30 P.M