பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!

காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி – 4

தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று.

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்து உலகப் புகழ்பெற்ற இவரது இயற்பெயர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா.

இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொருளாதாரம் பயின்று, இந்தியாவிற்கு என்று தனித்த பொருளாதார மாதிரியை உருவாக்கியவர்.

காந்தியடிகளின் அன்பிற்குரிய சகாக்களில் ஒருவர்.

காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்றிய குமரப்பா, காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார்.

காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.

ஜே.சி.குமரப்பா தனது ஓய்வுக் காலத்தில் மதுரை மாவட்டத்தின் தே.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.

காந்தி நிகேதன் ஆசிரமத்தை 1956-இல் சட்டபூர்வமாக பதிவு செய்து, அதன் முதல் தலைவரானார்.

குமரப்பா நம்நாட்டின் தற்சார்பு பற்றியும், அமெரிக்க-ஐரோப்பிய அடிமையாக்க எதிர்ப்பு பற்றி எழுதியும் ஆராயந்தும் தந்தவை ஏராளம்.

இன்று நாம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிக்களுக்குத் தீர்வு சொன்னவர். நாட்டின் பொருளியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்று தடம் பிடித்துக் காட்டியவர்.

பெருமளவு உற்பத்தி தேவையில்லை, பெருமளவு மக்களால் செய்யப்படும் உற்பத்தியே தேவை என்று கூறியவர்.

இயற்கை வளங்களைச் சுரண்டுவதை எதிர்த்தவர், அதற்கான மாற்றுக்களையும் கூறியவர், பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க முனைந்தவர். உலகளாவிய பசுமைச் சிந்தனையாளர்களுக்கு அறிவு ஊற்றாக இருந்தவர்.

இயற்கை வேளாண்மை, தாவர எண்ணெய் விளக்கு, கைசெய் தாள் தயாரிப்பு, எண்ணெய் செக்கு, இயற்கை முறை தோல் பதனிடுதல், இயற்கைச் சாயம், கைத்தறி பருத்தி ஆடைகள்,

பனைப் பொருளாதாரம் என்று இன்று பேசப்படும் தற்சார்புச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் முன்னோடியாக இருந்து செய்து காட்டியவர். அதை பல நூல்களாக நமக்கு வடித்து வைத்தும் சென்றுள்ளார்.

குமரப்பாவின் பிறந்தநாளைப் போற்றுவதோடு மட்டுமல்லாது, குமரப்பாவைக் கற்போம், பசுமையான உலகைப் படைப்போம்.

ஜே.சி.குமரப்பா எழுதிய நிலைத்த பொருளாதாரம், தாய்மைப் பொருளாதரம் புத்தகங்களைப் பெற தொடர்பு கொள்க –  இயல் வாகை  9942118080, 9500125125

நன்றி: பாமயன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment