தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை துவங்கிவிட்டது!

– அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘விடாது கொரோனா’ என்பதைப் போலிருக்கிறது தற்போதைய சூழல்.

மராட்டியத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதித்து அலற வைத்திருக்கிறது. மறுபடியும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன.

டெல்லியிலும் கொரோனா வேகம் எடுத்துக் கூடுதல் படுக்கைகள் தயாராகி வருவதாகச் சொல்லிப் பதற்றத்தைத் தணிக்கச் சொல்லியிருக்கிறார் டெல்லி முதலமைச்சரான கெஜ்ரிவால்.

சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கொரோனாவும் வேகம் எடுத்திருக்கிறது. இன்னொரு புறம் ஒமிக்ரானும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சமூக அலையாக கொரோனா பரவிக் கொண்டிருப்பதாகச் சொன்ன, தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன், தற்போது கொரோனா தடுப்பூசி முகாம்களைத் துவக்கி வைத்து “கொரோனா மூன்றாவது அலை சுனாமியைப் போலப் பரவிக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்திருக்கிறார்.

ஏற்கனவே வரும் 10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது காலத் தேவைக்கேற்ற உரிய முன்னேற்பாடு தான்.

ஆனால் 10-ம் தேதிக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள்?

பொங்கலை ஒட்டி வரிசையாக விடுமுறை தினங்களுக்கு அதிகமான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். பொது இடங்களில் அதிகமாகக் கூட வாய்ப்பிருக்கிறது. என்னதான் இருந்தாலும், திருவிழாக் காலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் பரவாமல் இருக்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொற்றுகள் தங்களால் பாதிக்கப்படுகிறவர்கள் யார், அதிகார மையங்களைச் சார்ந்தவர்களா? மருத்துவர்களா? நீதிபதிகளா? பொது மக்களா? – என்றெல்லாம் பேதம் பார்ப்பதில்லை.

பாதுகாப்பில் சற்றே குறைவான அக்கறை காட்டும் அல்லது அலட்சியம் காட்டும் எந்த உயிரும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது, அவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டிருந்தாலும் கூட.

சுனாமியைப் போல கொரோனாவின் மூன்றாவது அலை பரவிக் கொண்டிருப்பதாக அரசே சொல்லிக் கொண்டிருக்கையில், எதன் பெயராலும் மக்களை எதனை முன்னிட்டும் ஒன்று கூடுவதற்கு, அரசோ, அரசியல் கட்சிகளோ வழிவகுத்துவிடக்கூடாது.

‘சமூக இடைவெளி’ என்று ஒருபுறம் போதித்துவிட்டு, சொல்கிறவர்களே அதை மீறிய ஆபத்தான நெருக்கம் உருவாகக் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

காரணம் – எல்லாவற்றையும் விட, மிகவும் முக்கியமானது  நமது மக்களின் உயிர், அதற்கான பாதுகாப்பு.

தொற்றுக்கு இலக்காகிப் பாதிப்பைத் தங்கள் உடம்பில் ஏந்துகிறவர்களின் எண்ணிக்கை எந்த விதத்திலும் அதிகரிக்க யாரும் காரணமாகிவிடக்கூடாது.

மக்கள் நலனில் அசலான அக்கறை உள்ளவர்கள் பரிசீலிக்கட்டும்!

-யூகி

03.01.2022    11 : 55 A.M

*

Comments (0)
Add Comment