குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்துச் சுமத்தப்படுகின்றன. புகார்கள் தொடர்ந்து குவிகின்றன.
ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை ஜில்லென்ற மஞ்சள் சட்டையுடன் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பேசிய “பஞ்ச் டயலாக்குகள்” சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். அவ்வளவு ஆர்ப்பாட்டமாய்ப் பேசியிருக்கிறார்.
“எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார்” என்று ஏக நம்பிக்கையுடன் எல்லாம் பேசியிருக்கிறார்.
சொந்த மாவட்டத்தில் காவலர்கள் இருக்கும் நிலையிலேயே திரைப்படம் போலவே திடீரென்று காணாமல் போயிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
அவரது உறவினர்களை அழைத்துப் பேசிப்பார்த்தார்கள். கட்சிக்காரர்களைக் கண்காணித்துப் பார்த்தார்கள்.
நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்குவதற்கு அவர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, தனிப்படை அமைக்கப்பட்டு பல மாநிலங்களில் இப்போதும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதிகாரிகள் உதவியில்லாமல் அவர் தப்பித்திருக்க முடியாது என்று சொல்லப்பட்டாலும், மூன்று வார காலமாக அவருடைய தலைமறைவு வாழ்வு நீடிக்கிறது.
அந்த அளவுக்கு அவருக்கு உதவுகிறவர்கள் வலுவாக இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்டிருக்கிற நமது காவல்துறை ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் சற்றே சறுக்கியிருக்கிறது. உளவுத்துறை கோட்டை விட்டிருக்கிறது.
இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு அவர் தப்பித் தலைமறைவாக வாழ்ந்துவிட முடியாது.
எப்படியும் விரைவில் அவர் பிடிபடுவார் என்றே நம்பலாம்.
ஆனால் இதன் மூலம் ராஜேந்திர பாலாஜி தற்போதைய தி.மு.க. ஆட்சிக்குப் பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
தற்போது பல அமைச்சர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன. பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன. அடுத்தடுத்து ஆளுநர்களிடம் புகார்கள் தரப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் எப்படியும் ஊழல் மயமான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தது தி.மு.க.
அதன்படி தி.மு.க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அதற்கு வாக்களித்த பெரும்பான்மையான வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மீண்டும் ஒரு ராஜேந்திர பாலாஜி தேடுதல் வேட்டை மாதிரி மற்றவர்கள் விஷயத்திலும் தலைமறைவுகளும், தேடுதல் வேட்டைகளும் தொடர்ந்து விடக்கூடாது.