– மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மாண்டவியா பல நாடுகளில் முந்தைய அலைகளைவிட, தற்போது மூன்று முதல் நான்கு மடங்கு வேகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தற்போது ஒமிக்ரான் வகை மிக வேகமாக பரவி வருகிறது. இது, நம் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கொரோனா வைரசின் இந்த வேகத்தில் இருந்து நம் நாடு தப்பிக்க, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும்.
டெல்டா அல்லது ஒமிக்ரான் அது எந்த வகையாக இருந்தாலும், அதை எதிர்கொள்வதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் எடுக்க வேண்டும்.
முந்தைய அலைகளில் கிடைத்துள்ள அனுபவங்களின்படி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், மிகப்பெரும் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். தடுப்பூசி இயக்கம் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பு கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தற்போது 15 – 18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி இன்று துவங்குகிறது. அதைத் தவிர முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட உள்ளது.
இதனால், தடுப்பூசி முகாம்களில் குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப தனி வரிசைகள் அல்லது தனியாக முகாம்கள் நடத்த வேண்டும்.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப எவ்வளவு தடுப்பூசிகள் தேவை என்பதை வாராந்திர அடிப்படையில் தெரிவித்தால் அவற்றை வினியோகிக்க வசதியாக இருக்கும்” எனக் கூறினார்.
இதற்கிடையே, ஒமிக்ரான் பரவல் உச்சத்தை எட்டினால், தினமும், 60 ஆயிரம் பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கும் நிலை ஏற்படலாம் என தனியார் அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.