இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின் 191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி – 3).
சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் பூலேவை (13 வயது) 1840இல் மணந்தார். ஜோதிராவ் பூலே தனது துணைவி சாவித்திரி பாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.
ஜோதிராவ் பூலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைத் தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்களுக்குக் கல்வி புகட்டினார்.
பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் அவர் கல்விப் பணியாற்றினார்.
விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.
1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் பூலேயும் அவரது வளர்ப்பு மகனான மருத்துவர் யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை உருவாக்கினர்.
புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இறந்தார்.
முன்னதாக 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாயின் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் ‘கவிதை மலர்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் பூலேயில் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தியது.
2015 இல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைத் தேடிக் கொண்டது.
அன்னை சாவித்திரிபாய்க்கு புகழ்வணக்கம்.
நன்றி: முகநூல் பதிவு